துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இஷா சிங்: பாராட்டிய தெலுங்கானா முதல் மந்திரி

ரோம் நகரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கும் இஷா சிங் தகுதி பெற்றார்.
esha singh
Published on

ஜெர்மனியின் முனீச் நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் நடந்து வருகிறது. பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை இஷா சிங் முன்னேறி இருந்தார்.

இறுதிப்போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்ட இஷா சிங் இலக்குகளை துல்லியமாக தாக்கினார். இறுதியில் 50-க்கு 43 புள்ளிகளைக் கைப்பற்றி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன், தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

இந்த தொடரில் இஷா சிங் 43 புள்ளிகளுடன் தங்கம் வென்றதன் மூலம் புதிய சாதனையை படைத்தார். ஏற்கனவே, தென் கொரியா வீராங்கனையின் கிம் யே-ஜி 42 புள்ளிகளை பெற்றதே இதுவரை உலக சாதனையாக இருந்ததை இஷா சிங் முறியடித்துள்ளார்.

இதன்மூலம் இந்த ஆண்டின் இறுதியில் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கும் இஷா சிங் நேரடியாக தகுதி பெற்றார்.

உலகக் கோப்பை தொடரில் தங்கம் வென்று சாதனை படைத்த இஷா சிங்கிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன

இந்நிலையில், தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஐதராபாத்தைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடும் வீராங்கனையின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் உறுதிப்பாடு பாராட்டத்தக்கது. அவர் லட்சக்கணக்கானோருக்கு உத்வேகமாகத் திகழ்கிறார்.

அவரது குறிப்பிடத்தக்க செயல்பாடு, இந்திய விளையாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தைப் பிரதிபலிப்பதோடு, நாடு முழுவதும் உள்ள ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கிறது.

இஷா சிங் எதிர்காலத்தில் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன். அவர் மேலும் பல உயரங்களை எட்டி, நாட்டிற்குப் பெருமை சேர்ப்பாரென நம்புகிறேன் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com