

2026 ஐபிஎல் சீசன் விரைவில் தொடங்க உள்ளநிலையில், தல தோனி தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் புயலை கிளப்பி வருகிறது.
தல என்றாலே எண் 7தான். 7 என்றாலே தலதான் என சொல்லிக்கொண்டு, ‘தல ஃபார் எ ரீசன்’ என 7 என்ற எண் ரன்களில், ஓவர்களில் என எங்கு வந்தாலும் அவரது ரசிகர்கள் குறிப்பிடுவது வழக்கம்.
ஆனால் இனிமேல் 7 கிடையாது, 8 என கூறியுள்ளார் தல தோனி. அதாவது தோனியின் ஜெர்சி எண் 7-இல் இருந்து 8க்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், 7ம் எண்கொண்ட ஜெர்சியை மாற்றிவிட்டு, எண் 8 இருக்கும் ஜெர்சியை மாட்டுகிறார் தோனி. மேலும்,
"சில எண்கள் நம்முடன் அப்படியே தங்கிவிடும்.
7 எப்போதும் எனக்கு அப்படிப்பட்ட ஒன்றுதான்.
ஆனால் இன்று, நான் 8-க்கு மாறுகிறேன்.
அதற்கான காரணம் உங்களுக்கு விரைவில் தெரியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பல கிரிக்கெட் வீரர்களுக்கு அவர்களது ஜெர்சி நம்பர் உணர்வுகளுடன் கலந்தது. அவர்களது ரசிகர்களுக்கும் அப்படித்தான். தோனியின் ஜெர்சி நம்பர் அவரது பிறந்ததேதியுடன் தொடர்புடையது.
ஜெர்சி எண் மாற்றப்பட்டது ஏன்?
எம்.எஸ். தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஜெர்சி எண் 7-ஐ மாற்றவில்லை. மாறாக, இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், அந்த எண்ணிற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஓய்வு அளித்துள்ளது.
2023-ஆம் ஆண்டில், எம்.எஸ். தோனியின் பங்களிப்புகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பிசிசிஐ அவரது ஜெர்சியை ஓய்வுபெறச் செய்ய முடிவு செய்தது.
சச்சின் டெண்டுல்கரின் ஜெர்சி எண் 10-க்கு பிறகு, இந்திய கிரிக்கெட்டில் ஓய்வு அளிக்கப்பட்ட இரண்டாவது ஜெர்சி எண் தோனியின் '7' ஆகும்.
இதன் பொருள், எதிர்காலத்தில் எந்தவொரு வீரரும் அதே ஜெர்சி எண்ணைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்த எண் ஓய்வு பெற்றிருந்தாலும், தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து 7-ம் எண் ஜெர்சியிலேயே விளையாடி வருகிறார்.
ஆனால் இந்த ஆண்டு அதே எண்கொண்ட ஜெர்சியில் விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.