உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நாளை மறுநாள் நடக்கிறது

15-ந்தேதி முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. 16-ந்தேதி விடையாற்றி உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
வெக்காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளியபோது எடுத்த படம்.
வெக்காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளியபோது எடுத்த படம்.
Published on

தமிழகத்தில் உள்ள சிறந்த சக்தி தலங்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். மண்மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அப்போது, வெக்காளியம்மனுக்கு விரதம் இருந்து பால்குடம் எடுக்கும் பக்தர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் திரளாக வந்து கோவிலில் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

அன்று முதல் தினமும் மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இரவு 7 மணிக்கு அம்மன் கேடயம், பூதவாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம் என்று ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

6-ம் திருநாளான நேற்று மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு யானை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நாளை மறுநாள் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக அன்று காலை 9 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

10-ம் திருவிழாவான 15-ந் தேதி இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. 16-ந்தேதி இரவு 8 மணிக்கு காப்பு கலைத்தல் மற்றும் விடையாற்றி உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் லெட்சுமணன், துணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com