2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்

தொழில், வியாபாரத்தில் உயர்வான நிலையை அடைவீர்கள்.
2026 வார ராசிபலன்- தனுசு, மகரம், கும்பம், மீனம்
Published on

தனுசு

சாதகமான வாரம். ராசி அதிபதி குருவை பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பார்க்கிறார். இது குருமங்கள யோகமாகும். புத்திகூர்மை, தெய்வ அனுகிரகம், ஞானம் போன்றவைகள் அதிகமாகும் மற்றவர்களால் முடிக்க முடியாத செயல்களைக் கூட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள்.

குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் குறைந்து நிம்மதி ஏற்படும். விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியான நேரம். பழைய விவசாய கடன் அல்லது வட்டி தள்ளுபடியாகும். விளை நிலங்களில் அமோக விளைச்சல் ஏற்பட்டு நல்ல வருமானம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உயர்வான நிலையை அடைவீர்கள். நாள்பட்ட வியாதிகள் மறைந்து ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவியிடம் நல்ல புரிதல் நிலவும். அர்தாஷ்டமச் சனியால் திருமணத் தடை உருவாகலாம். அதிக கவனத்துடன் வரனை தேர்வு செய்ய வேண்டும். தவறான சுய விருப்ப விவாகம் தோல்வியை ஏற்படுத்தலாம். சனிக்கிழமை பசுவிற்கு பழம், கீரை, தானம் வழங்கவும்.

மகரம்

பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உள்ள ராகுவிற்கு குரு பார்வை இருப்பதால் பொருளாதார நிலையில் இதுவரை கண்டிராத அளவிற்கு மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும். உங்களின் தொழில், குடும்ப சொத்து, வராகடன் வசூல் என பல்வேறு வழிகளில் பணம் வந்து குவியும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த கருத்து வேறுபாடு மறையும்.

பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பேச்சாற்றலால் உங்களின் காரியங்களை சாதிக்க முடியும் எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் கிடைக்கும். சுய ஜாதக தசா புக்தி சாதகம் அறிந்து சுய தொழில் துவங்க வேண்டும். வீடு கட்டும் பணி துரிதமடையும். திருமணப் பேச்சுவார்த்தை திருப்பு முனையாக இருக்கும். குழந்தை பேறு கிடைக்கும். 28.4.2026 அன்று அதிகாலை 3.36 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த எச்சரிக்கை தேவைப்படும். பணம் வாங்கிய நபர் வார்த்தை மாறிப் பேசலாம். உங்கள் உதவியைப் பெற்றவர்கள் உங்களுக்கு எதிராக மாறலாம். சனிக்கிழமை சிவபுராணம் படிக்கவும்.

கும்பம்

மகிழ்ச்சியான வாரம். தற்போது ராசியில் பதியும் குருப் பார்வை ஒரு சில வாரங்களில் தன ஸ்தானத்தில் பதியப் போவதால் குருப்பெயர்ச்சியால் ஏற்படும் மாற்றங்கள் தற்போதே தெரியத் துவங்கும். தனவரவு மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். ஏழரைச் சனியை மீறிய நல்ல பலன் கிடைக்கத் துவங்கும். தன லாப அதிபதி குரு பகவான் ராசியில் உள்ள ராகுவை பார்ப்பதால் பொருளாதார நிலை சாதகமாகும்.

அனைத்து விதமான ஏற்றத் தாழ்வுகளையும் சமாளித்து விடுவீர்கள். வீண் கவலைகளை விடுத்து கடமைகளை சரியாகச் செய்தால் அனைத்தும் வெற்றி பெறும் நல்ல காலமாக இந்த வாரம் அமையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கையில் பணம் புரள்வதால் கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி புதிய தொழிலில் இறங்க வேண்டாம். வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி தரும். 28.4.2026 அன்று அதிகாலை 3.36 முதல் 30.4.2026 அன்று பகல் 1.14 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செயல் திறன் குறையும். மன உளைச்சல் காரணமாக யாரைப் பார்த்தாலும் கோபம், டென்சன் ஏற்படலாம். சனிக்கிழமை காலபைரவ அஷ்டகம் படிக்கவும்.

மீனம்

விபரீத ராஜயோகமான வாரம். அஷ்டமாதிபதி சுக்கிரன் மூன்றாம் இடத்தில் ஆட்சி பலன் பெறுவதால் வம்பு, வழக்கு அவமானங்கள், ஆரோக்கிய குறைாடு, எதிர்மறை சிந்தனைகள் விலகி சாதகமான சூழ்நிலை உண்டாகும். நேர்வழி, குறுக்குவழி என பல வழிகளில் பணம் பையை நிரப்பும். பணிகளை மேற்கொள்ளும் போது தடை தாமதங்கள் வந்தாலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள்.

கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழில், உத்தியோகம் தொடர்பான இன்னல்கள் அகலும். பயணங்கள் அதிகரிக்கும். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரும். நல்ல வரன் அமையும். 30.4.2026 அன்று பகல் 1.14 முதல் 3.5.2026 அன்று நள்ளிரவு 12.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் உடலில் கண், பாதங்களில் ஏதேனும் தொந்தரவு இருந்தால் உரிய மருத்துவரை அணுக வேண்டும். சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவியை வழிபட வேண்டும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com