

புதிய முயற்சிகள் வெற்றி தரும் வாரம். ராசி அதிபதி செவ்வாயின் நான்காம் பார்வை முயற்சி ஸ்தானத்தில் உள்ள குருவின் மேல் பதிகிறது. இது குரு மங்கள யோக அமைப்பாகும். தாய், தந்தை வழி உறவுகளின் ஆதரவும் சொத்தும் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவோடு சில பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். பொன் பொருள் சேரும். பூமி யோகம் உண்டு.
நல்ல புதிய தொழிலில் வாய்ப்புகள் தேடி வரும். வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு நம்பிக்கையை அதிகரிக்கும். சிலருக்கு வேலையில் மாற்றம் செய்ய நேரும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். குழந்தைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் திருப்தி தரும். மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும். புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். சிலர் ஆரோக்கிய குறைபாடு அகலும். குருப்பெயர்ச்சிக்குப் முன்பு திருமண முயற்சி செய்வது நல்லது. தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் நிலையான முன்னேற்றம் உண்டாகும்.
காரியத் தடை நீங்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரனுக்கு பாக்கியாதிபதி சனியின் பார்வை உள்ளது. உங்களின் தனித் திறமையால் எதையும் சமாளிக்கும் பலமுண்டாகும். மாற்று இனத்தவரின் ஒத்துழைப்புடன் கூட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஜாமீன் பொறுப்பு ஏற்ற தொகை கைக்கு வந்து சேரும். வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை கிடைக்கும்.
சிலருக்கு வாழ்க்கைத் துணை மூலம் பெரும் பணம் கிடைக்கும். தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும். சிலருக்கு தத்து புத்திர யோகம் உண்டாகும். வழக்குகள் சமாதானத்திற்கு வரும். வெகு விரைவில் குரு 3ம்மிடம் நோக்கிச் செல்வதால் விலகிச் சென்ற உடன் பிறப்புகள் மீண்டும் இணைவார்கள்.
தம்பதிகளுக்குள் ஒருமித்த கருத்து நிலவும். பழைய சொத்தை விற்று புதிய சொத்து வாங்கும் நேரம். வாடகை வீட்டுத் தொல்லை இனி இல்லை. பணவரவு பல வழிகளில் வரத்தொடங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணத் தடை அகலும். பிள்ளைகள் தொழில் உத்தியோகத்திற்காக இடம் பெயரலாம். தினமும் சிவ கவசம் படிக்கவும்.
லாபகரமான வாரம். ராசி அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்ற சூரியனுடன் இணைவதால் புத ஆதித்திய யோகம் ஏற்படுகிறது. எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வரவேண்டும் என பெரியவர்கள் கூறுவார்கள் அந்த நேரம் இப்பொழுது மிதுன ராசிக்கு வந்து விட்டது.
வருட கிரகங்கள் அனைத்தும் சாதகமாக உள்ளது. ஜூன் 2ல் நடைபெறப் போகும் குருப்பெயர்ச்சி கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள் அனைத்தையும் மீட்டுத்தரப் போகிறது. எத்தனை இடையூறுகள் வந்தாலும் சமாளிக்கும் துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
எந்தக் காரியத்திலும் சுறுசுறுப்பாக இறங்குவீர்கள். வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். தொழிலுக்குத் தேவையான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சில தம்பதிகள் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். ஆன்லைன் வியாபாரம் அதிக லாபத்தைக் கொடுக்கும். மூத்த சகோதர வழியில் லாபம் உண்டாகும். ஆரோக்கியம் முன்னேற்றம் தரும். சிதம்பரம் நடராஜரை வழிபடவும்.
திருமணத் தடை அகலும் வாரம். அஷ்டம ஸ்தானத்தில் உள்ள ராகுவிற்கு குரு பார்வை உள்ளதால் சுய ஜாதக ரீதியான தோஷங்கள் விலகி திருமணம் நடைபெறும். நல்ல உத்தியோகத்தில் உள்ள வரன் வாழ்க்கைத் துணையாக வர வாய்ப்புள்ளது. தொழில் முதலீட்டாளர்கள் கவர்ச்சிகரமான பொருட்களைப் பரிசாக அறிவித்து லாபத்தை அதிகரித்துக் கொள்வார்கள்.
ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடக்கும். சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். அரசுப் பணியாளர்களின் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். குழந்தை பேறு, திருமணம், வீடு, வாகன யோகம் என கடக ராசிக்கு அடுத்தடுத்த இன்பங்கள் வந்து சேரும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். ஆன்லைன் சூதாட்டத்தை தவிர்க்க வேண்டும். நேரத்திற்கு சாப்பிட முடியாது. உடல் அசதி அதிகரிக்கும். விநாயகரை வழிபடவும்.