நாளை சிவாலயம் சென்று சிவன், பைரவரை வணங்குங்கள்... செல்வ வளம் அள்ளித்தரும்

சனி பகவனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி தோஷம் நீங்க கால பைரவரை வணங்கலாம்.
சிவன் வழிபாடு
Published on

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு பிறகு வரும் 8-வது நாள் ‘தேய்பிறை அஷ்டமி’ எனப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு ஒரு பெயர் உண்டு. அந்த வகையில் ஆனி மாதம் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு ‘பகவதாஷ்டமி’ எனப்படுகிறது.

பைரவர் வழிபாடு

இந்நாளில் சிவபெருமானையும், சிவனின் அம்சமான பைரவரையும் வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் எல்லா இன்னல்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆனி மாதம் தேய்பிறை அஷ்டமி. நாளை சிவாலயம் சென்று வழிபட்டு பிரார்த்தனை செய்து கொண்டால் நம் பாவமெல்லாம் பறந்தோடும்; கவலைகள் அனைத்தும் காணாமல் போகும். கடன் தொல்லையில் இருந்தும் எதிரிகளின் தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

அஷ்டமி நாட்களில் பைரவரை வணங்குவது போல், தட்சிணாமூர்த்தியையும் அர்ச்சனை செய்து வழிபடுவதும் விரதம் இருந்து பிரார்த்தனை செய்வதும் நல்ல பலன்களைத் தரும். பகவதாஷ்டமியில் பைரவரை தரிசனம் செய்யுங்கள். 4 பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள். வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளும் தீர இந்த விரதத்தை, அஷ்டமி விரதத்தைத் தொடர்ந்து அனுஷ்டித்து வாருங்கள்.

பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எவரொருவர் தேய்பிறை அஷ்டமி தோறும் பைரவ பகவானை வழிபடுகிறார்களோ அவர்களுக்கு எதிரிகளே இருக்கமாட்டார்கள். பில்லி, சூனியம் அகலும். வழக்குகளில் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம். செந்நிற மலர்கள், அரளி மாலை கொண்டு பைரவருக்கு அணிவித்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பைரவர் வழிபாடு

சகல பாக்யங்கள்

வெண் பொங்கல் நைவேத்தியம் செய்தால் கடன் தொல்லைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். தீய சக்திகள் அண்டாது. வடை மாலை சார்த்தி வணங்கலாம். மிளகு வடை நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். செவ்வாடை சாற்றி, சிகப்பு அரளிப்பூ மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல யோக பாக்யங்கள் கூடிவரும்.

சனி பகவனால் ஏற்படும் தோஷங்கள் நீங்கவும் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி தோஷம் நீங்க கால பைரவரை வணங்கலாம். ஆனி தேய்பிறை பகவதாஷ்டமியில் விரதம் இருந்து பைரவரை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும். பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். எம பயம் அகலும்.

இந்த நாளில் பைரவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். 5 வகை எண்ணெய் பயன்படுத்தி, 5 தனித் தனி அகல்களில் விளக்குகள் ஏற்றி பைரவரை வழிபடுவது சிறப்பானதாகும். நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய், விளக்கெண்ணெய் கொண்டு ஏற்றப்படும் தீபங்களால் தீராத பிரச்சனைகள் கூட தீர்ந்து விடும்.

தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கூடிவரும்

12 ராசிகளையும் தனது உடலின் அங்கமாக கொண்டவர் பைரவர். அவரை வழிபடுவதால் நவக்கிரக தோஷங்கள் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும். திருமணத்தடை, பித்ரு தோஷம் உள்ளிட்டவைகள் நீங்கும். தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குவதாக ஐதீகம்.

தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். அந்த வகையில் நாளை பக்வதாஷ்டமியில் பைரவரை வழிபட்டால் மனஅமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கையில் காசு, பணம் புரளும். செல்வ வளம் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கூடிவரும்.

ஆனி தேய்பிறை அஷ்டமி சொர்ணா கர்ஷண பைரவர் வழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த தினமாகும். அதிலும் அந்த தேய்பிறை அஷ்டமி செவ்வாய்கிழமையில் வருவது மிகவும் சிறப்பானதாகும். தேய்பிறை அஷ்டமி அன்று ராகு கால நேரமான 3 மணியிலிருந்து 4.30 மணிக்குள்ளாக சொர்ணாகர்ஷண பைரவருக்குரிய மந்திரங்கள் துதித்து வணங்க வேண்டும்.

மேலும் இச்சமயத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிப்பது நல்லது. இதன் மூலம் தீய சக்திகளையும் துர்குணங்களையும் விலக்கி அருளுவார் பைரவர். தேய்பிறை அஷ்டமி திதி அன்று மாலை அல்லது இரவு வேளையில் பைரவர் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com