

வைகாசி மாதம் நாளை பிறக்கிறது. வைகாசி முதல் நாள் என்பது பெருமாளுக்கு உரிய விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். ஜோதிட ரீதியாக சூரியன் தனது பயணத்தில் ஸ்திர ராசிகளில் நுழையும் நேரமே விஷ்ணுபதி புண்ணியகாலம் ஆகும். வேத ஜோதிடத்தின் படி, சூரியன் ஒரு புதிய ராசிக்குள் நுழையும் தருணம் மங்களகரமானது.
நரசிம்ம அவதாரம் எடுத்து பக்தனான பிரகலாதனை காப்பாற்றி இரணியனை வதம் செய்த பெருமாள் கோபம் தணியாமல் தனது உக்கிரமான வடிவிலேயே இருந்ததால், தேவர்களும் முனிவர்களும் பயந்து மகாலட்சுமி தேவியிடம் வேண்டினர்.
மகாலட்சுமியும் பெருமாளை சாந்தப்படுத்த ஒப்புக்கொண்டு பயபக்தியுடன் நரசிம்மத்திடம் நெருங்கினாள். மகாலட்சுமி நிழல் பட்டவுடன் சாந்தமடைந்து அவள் வேண்டியபடி மடியில் வைத்து கருணை வடிவமான, லட்சுமி நரசிம்மராக மாறினார் பெருமாள். இது நடைபெற்ற காலம் விஷ்ணுபதி புண்ணிய காலமென கருதப்படுகிறது. இந்த நேரத்தில் வைகுண்டத்தின் கதவுகள் திறந்திருப்பதாக நம்பப்படுகிறது.
மேலும் விஷ்ணுபதி புண்ணிய காலத்தின் முக்கிய ரகசியம் மகாபலி சக்கரவர்த்தியுடன் தொடர்புடையது. வாமனராக வந்து மூன்றடி நிலம் கேட்ட மகாவிஷ்ணு, மகாபலியின் கர்வத்தை அடக்கி அவருக்கு மோட்சம் அளித்தார்.
மகாபலி தன் சிரம் தந்து சரணடைந்த அந்தப் புனித தருணத்தில் பிரபஞ்சத்தில் பொழிந்த அதே மகாவிஷ்ணுவின் பேரருள், இன்றும் விஷ்ணுபதி புண்ணிய காலத்தின் போது பூமிக்குக் கிடைப்பதாகக் கருதப்படுகிறது.
விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பது சரியாக 3 மணி நேரம் 36 நிமிடங்கள் (9 நாழிகைகள்) மட்டுமே நீடிக்கும் ஒரு சக்திவாய்ந்த நேரம். சூரியன் ராசி மாறும் நேரத்திற்கு முன்னதாக 1 மணி 48 நிமிடங்களும், பின்னால் 1 மணி 48 நிமிடங்களும் இணைந்ததே இந்த காலம். இந்த குறுகிய காலத்தில் செய்யப்படும் தியானம் மற்றும் ஜபம் ஆயிரம் மடங்கு அதிக பலனைத் தரும்.
இந்த நாளில் உங்களின் பிரச்சனைகளை, வேண்டுதல்களை மனமுருகி பெருமாளிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். நமது நியாயமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த 3 விஷ்ணுபதி காலம் முடிவடைவதற்குள் நிறைவேறும். இது ஏகாதசி விரதத்தை விட பல மடங்கு உயர்வானது.
பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும், அனுஷ்டிக்கும் விரத முறையும் அனைத்திலும் சிறந்த பலன் தருவதாகவும் கூறுவர். அதை விட மிகவும் சிறந்த பலனைத் தர வல்லது விஷ்ணுபதி புண்ணியகாலம் ஆகும்.
தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 ஆகும். ஒவ்வொரு ஆண்டிலும் வரக்கூடிய 4 விஷ்ணுபதி புண்ணிய காலங்களும் ஒவ்வொரு விதத்தில் வேறுபடும். எனவே இந்தமுறை நாம் ஒரு விஷ்ணுபதி புண்ணிய காலத்தை தவறவிட்டால் அடுத்து இதே போன்ற ஒரு காலம் வருவதற்கு மீண்டும் 60 ஆண்டுகள் ஆகும். எனவே அரிதான இந்த வாய்ப்பினைத் தவற விடாமல் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் உலக வாழ்க்கைக்கான தேவைகளையும் மகிழ்ச்சியான மற்றும் செல்வ செழிப்புமிக்க வளமான வாழ்வினையும் பெற முடியும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மகாவிஷ்ணுவின் அருளும் கருணையும் மிகவும் அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும் அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது. நாளை அதிகாலை 1.30 மணி முதல் காலை 10.30 மணி வரை இந்த புண்ணிய கால நேரம் வருகிறது. முழுமையாக 9 மணி நேரம் இந்த புண்ணிய காலம் அமைகிறது.
இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் அதிகாலை எழுந்து குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி மகாவிஷ்ணுவையும், மகாலட்சுமியையும் மனதார வழிபட வேண்டும். பின்னர் பெருமாள் கோவிலுக்கு சென்று கொடிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். பின்னர் 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை பிரகார வலம் வர வேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத்திற்கு முன் வைத்து வழிபட வேண்டும். துளசி பூஜை, கோ பூஜை செய்யலாம்.
கோவிலுக்கு சென்று 2 மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றிடுங்கள். தாயாருக்கும் பெருமாளுக்கும் உங்களால் முடிந்த பூஜை பொருட்கள் வாங்கி சென்றாலும் சிறப்பு தான். துளசி இலை, மல்லிகை பூ வாங்கி செல்வது சிறந்தது. இந்த இரண்டும் தாயாருக்கும் பெருமாளுக்கும் உகந்ததாகும்.
செல்வத்தின் அதிபதி மகாலட்சுமி விஷ்ணுவுடன் இணைந்திருக்கும் தருணம் என்பதால் கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் பெருகும். 7 தலைமுறை பித்ரு தோஷங்களை நீக்கும் வலிமை கொண்டது. இந்த நேரத்தில் செய்யப்படும் வழிபாடு புதிய முயற்சிகளில் வெற்றியைத் தரும். இந்த வழிபாட்டின்போது “ஓம் நமோ நாராயணாய” அல்லது உங்கள் ராசிக்குரிய விஷ்ணு மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.
இதனால் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டி ருக்கிறது. இதை நாம் சரிவர உபயோகப்படுத்தி பெருமாளை வழிபாடு செய்தால் பொருளாதாரம் மேம்படும், வாழ்வில் ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் தீரும்.
வீடுகளில் விளக்கு ஏற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் அதிக பலன்களைக் கொடுக்கும். திருமண வரம் வேண்டி இந்த நாளில் ஆலயம் சென்று வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. சிவன் கோவில்களில் பிரதோஷ கால பூஜை நடத்தப்படுவது போல், பெருமாள் கோவில்களில் இந்த விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு உள்ளது. விஷ்ணு காக்கும் தெய்வமாகும். பதி என்றால் பூமியில் பதிவது என்று பொருள்.
பக்தர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், துயரங்களில் இருந்து அவர்களை காப்பதற்காகவே பல அவதாரங்களை எடுத்தவர் மகாவிஷ்ணு. அப்படி நம்முடைய துயரங்களையும் போக்கி, நம்மை காப்பதற்காக விஷ்ணுவை பூமிக்கு அழைக்கும் விதமான விரதமே இந்த விஷ்ணுபதி புண்ணிய கால விரதமாகும். நாம் செய்த முன்வினை காரணமாக ஏற்படுகின்றன பிரச்சனைகள், துயரங்களில் இருந்து விடுபட்டு, நற்பயன்களை பெற செய்யக் கூடியதை புண்ணிய காலம் என்கின்றனர் ஆன்மீக பெரியவர்கள்.
விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் செய்யப்படுகின்ற பூஜைகள் பல மடங்கு பலன்களை தரும். அதனால் இந்த நாளில் ஆராதனை, அபிஷேக திருமஞ்சனம், இறைவனுக்கு புது வஸ்திரம் வாங்கி அணிவித்தல், ஆபரணங்கள் சாற்றுதல், தான தர்மங்கள், அன்னதானம், ஆடை தானம் வழங்குதல், மஞ்சள் சரடு, வளையல் போன்ற மங்கள பொருட்களை தானமாக வழங்குதல், வெயிலில் வாடுவோருக்கு காலணிகள் வாங்கி தானமாக வழங்குதல், தாகம் தீர்க்க நீர்மோர், பானகம், பால் போன்றவை தானமாக கொடுக்கலாம். விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணங்கள் கொடுப்பது மிக சிறந்த பலன்களை அளிக்கும். வயதில் முதிர்ந்த தம்பதிகளுக்கு இந்த நாளில் பாதபூஜை செய்து வழிபடுவது மிக சிறப்பானது. ஆலயங்களில் அரிசி மாவு கோலமிட்டு, அகல் விளக்குகள் ஏற்றுவதும் வாழ்வில் மங்களங்களை பெருகச் செய்யும்.