சித்ரா பவுர்ணமிக்கு அன்னதானம் வழங்குபவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பதிவு சான்று பெற்றவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும்.
சித்ரா பவுர்ணமிக்கு  அன்னதானம் வழங்குபவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
Published on

சித்ரா பவுர்ணமி முன்னிட்டு அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்பு துறையில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவண்ணாமலை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சித்ரா பவுர்ணமி ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான சித்ரா பவூர்ணமி வருகிற மே மாதம் 1-ந் தேதி வருகிறது. சித்ரா பவுர்ணமி முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களுக்கு பொது அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் உணவு பாதுகாப்பு துறையின் www.foscos.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு சான்று பெற வேண்டும்.

அவ்வாறு பதிவு சான்று பெற்றவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அன்னதானம் வழங்க விரும்புவோர் திருவண்ணாமலை நகரம், செங்கம் சாலை, பழைய அரசு ஆஸ்பத்திரியில் இயங்கி வரும் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் நாளை முதல் 26-ந் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அளித்து அனுமதி பெறலாம். மேலும் அவர்கள் பாஸ்போர்ட் அளவு போட்டோ, முகவரி தெரிவிக்கும் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட சான்று நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் தங்கள் சார்ந்தவர்களின் விவரத்தினை ஆதார் அட்டை நகலுடன் சமர்ப்பிக்க வேண்டும். உணவு மேலாண்மை பயிற்சி பெற்று இருக்க வேண்டும்.

உணவு பொருட்களை கையாள்பவர்கள் தடுப்பூசி மற்றும் மருத்துவச் சான்று பெற்றிருக்க வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். அனுமதி அளிக்கப்பட்ட நாள், நேரத்தில் மட்டுமே அன்னதானம் வழங்கப்பட வேண்டும். க்காரணத்தைக் கொண்டும் அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கக் கூடாது. நோய் தொற்று உள்ளவர்களை அன்னதானம் சமைக்கவோ அல்லது வழங்கவோ அனுமதிக்க கூடாது. வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். உணவுப் பொருட்கள் தரமானதாகவும், தூய்மையானதாகவும் மற்றும் கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும். உணவுக் கழிவு பொருட்களை போடுவதற்கு ஏதுவாக குப்பை தொட்டிகளை ஏற்பாடு செய்து அன்னதானம் வழங்குபவர்கள் உணவு கழிவுகளை சேகரித்து அகற்ற வேண்டும். மேலும் தொடர்புக்கு 04175 237416 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com