ரூ.15 லட்சத்தில் புதுப்பிக்கப்படுகிறது திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவில் தங்கத்தேர்

திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவில் தங்கத்தேர் பழுதுநீக்கும் பணிகள் முடிந்து வருகிற நவம்பர் மாதம் தொடக்கத்தில் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
புதிய தங்கத்தேர் செய்யும் பணிகள் நடந்து வருவதை படத்தில் காணலாம்.
புதிய தங்கத்தேர் செய்யும் பணிகள் நடந்து வருவதை படத்தில் காணலாம்.
Published on

திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலின் மலைக்கோவிலில் உள்ள தங்கரதம் கடந்த 1972-ம் ஆண்டு செய்யப்பட்டது. இந்த தங்கத்தேர் பல ஆண்டுகளாக பக்தர்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்தநிலையில் தங்கத்தேரின் மரத்தூண்கள், மரபாகங்கள் பழுது அடைந்ததால் கோவிலில் உள்பிரகாரத்தில் சாமி புறப்பாடு செய்ய இயலாத நிலை ஏற்பட்டது.

தங்கரதத்தில் உள்ள பழுதுகளை நீக்க ஏதுவாக கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 23-ந்தேதி அன்று துணை கமிஷனர் மற்றும் நகை சரிப்பார்ப்பு குழுவினர்களால் கோவிலில் முகாமிட்டு, தங்கரதத்தில் பதிக்கப்பட்ட தங்க தகடுகள், குடைகலசம் முதல் சாமி பீடம் வரை உள்ள செப்புத்தகடுகளும் பிரிக்கப்பட்டன.

சாமி அடிப்பலகை முதல் அடிப்பட்டறை வரை உள்ள செப்பு மீது பதித்த தங்க தகடுகள் மற்றும் வெள்ளி நகாசு தகடுகள் பிரிக்கப்படாமல் மரத்தேரிலே வேயப்பட்ட நிலையில் உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு புதிய அரசு பதவியேற்றவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கடந்த ஜூலை மாதம் 2-ந்தேதி திருத்தணி கோவிலுக்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது பழுதடைந்துள்ள தங்கரதத்தின் பணிகளை விரைந்து முடித்து தேர் வீதி உலா வர அறிவுரை வழங்கினார். அதன்படி ரூ.15 லட்சம் செலவில் மரத்தால் ஆன தேர் பணிகள் முடிக்கப்பட்டு புதிய மரத்தேர் உருவாக்கப்பட்டு அதன் மீது ரதத்தில் குடைகலசம் முதல் சாமி அடிபீடம் வரை பிரித்து வைக்கப்பட்ட தங்க ரேக் பதித்த உலோகத்தகடுகளை மீண்டும் புதிய மரத்தில் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தங்க ரதத்தில் உள்ள தகடுகளை சுத்தம் செய்யும் பணிகள், கை மெருகூட்டும் பணிகள் செப்பு ஆணிகள் பதிக்கும் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

பழுதடைந்த தங்கத்தேரின் மேற்கூரை சரிசெய்யும் பணிகளும் இந்தமாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு வருகிற நவம்பர் மாதம் முதல் வாரத்தில் கோவிலின் தங்கத்தேர் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

மேற்கண்ட தகவல்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com