பழனி முருகன் கோவிலில் VIP தரிசன டிக்கெட் கிடையாது - கோவில் நிர்வாகம் திடீர் அறிவிப்பு

பழனி கோவிலில் வருகிற 26-ந் தேதி பங்குனி உத்திரத்துக்கான கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
பழனி முருகன் கோவிலில் VIP தரிசன டிக்கெட் கிடையாது - கோவில் நிர்வாகம் திடீர் அறிவிப்பு
Published on

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருடம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். திருவிழா காலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக பொது கட்டணம், வி.ஐ.பி. தரிசன வழிகள் உள்ளன. இதில் சிறப்பு தரிசன வழியில் செல்ல வி.ஐ.பி. டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பி., திரைப்பட பிரபலங்கள், விளையாட்டு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், அரசுத்துறை அதிகாரிகள் இந்த தரிசன வழியில் செல்வது வழக்கம்.

அரசு துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் இந்த டிக்கெட் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதனால் நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில் தேர்தல் முடியும் வரை எந்தவித பரிந்துரை கடிதங்களுக்கும் வி.ஐ.பி. சிறப்பு தரிசனத்துக்கான “வி” டிக்கெட் கோவில் அலுவலகத்தில் வழங்கப்படாது. இதே போல் ரோப்கார் மற்றும் மின் இழுவை ரெயில் நிலையத்திலும் மலைக்கோவிலுக்கு செல்ல முன்னுரிமை அளிக்கப்படாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி கோவிலில் வருகிற 26-ந் தேதி பங்குனி உத்திரத்துக்கான கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதனால் தற்போதே பல்வேறு ஊர்களில் இருந்து காவடி, தீர்த்தம் எடுத்து வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். வி.ஐ.பி. டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் பொது தரிசன வழியில் சுவாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com