

துலாம் கால புருஷ ஏழாம் வீடு. இது சர ராசி. காற்று தத்துவத்தில் அடங்கும். ராசி அதிபதி சுக்கிரன் என்பதால் சுதந்திரத்தை விரும்பும் நபர்களாக இருப்பார்கள். எதையும் எதார்த்தமாக எடுத்துக் கொள்ளும் சிந்தனை உள்ளவர்கள். சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் நிறைந்தவர்கள் எப்பொழுதும் சந்தோஷமாக மகிழ்ச்சியாக புத்துணர்ச்சியாக உற்சாகத்துடன் காணப்படுவார்கள்.
கலை, அழகு மற்றும் சமூகத்தில் நல்லிணக்கத்தை விரும்புவார்கள். எந்தவொரு சூழ்நிலையிலும் நியாயமாகச் சமநிலையுடன்
செயல்பட நினைப்பார்கள். குடும்பத்திலும் சமூகத்திலும் அமைதியை நிலைநாட்ட விரும்புவார்கள். மற்றவர்களை எளிதில் ஈர்க்கும் வசீகரமும், கனிவான குணமும் இவர்களிடம் இருக்கும். சிறந்த பேச்சாளர்களாகவும் திகழ்வார்கள். சண்டை, சச்சரவுகள் மற்றும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து, அமைதியான சூழலை விரும்பக்கூடியவர்கள். எதையும் அதிகமாக சிந்திப்பதால் மிகச்சரியான முடிவுகளை எடுக்கத் தயங்குவார்கள். அழகான ஆடைகள், கலைப் பொருட்கள் மற்றும் நேர்த்தியான விஷயங்களை விரும்புவார்கள். கருணையும், கவர்ச்சியும் அதிகம் கொண்டவர்கள். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேச மாட்டார்கள்.
துலா லக்னத்தினர் உறுதியான கோட்பாடு உடையவர்கள். யாருக்காவும் எதையும் மாற்றிக் கொள்ளாதவர்கள். அதே நேரத்தில் மற்றவர்களுடைய உணர்வுகளை மதித்து நடந்து கொள்வார்கள்.
அத்துடன் தங்கள் கருத்தை மற்றவர்கள் மேல் திணிக்கவும் மாட்டார்கள். இவர்கள் அரசியல் தலைவர்களாக, மதச் சீர்திருத்தவாதிகளாக பொது ஜனங்களை மிகவும் கவர்ந்து தங்கள் வசப்பபடுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். தான் பிறந்த குலத்தின் மேல் அபிமானம் உள்ளவர்கள். சொத்து விருத்தி உடையவர்கள். சொகுசான வீடு, மனை, வாகன யோகம் இருக்கும். சினிமா, கேளிக்கை விசயங்களில் அதிக நாட்டம் உள்ளவர்கள். உண்மை, நாணயம், சத்தியத்திற்காக உயிரையும் கொடுக்க தயங்காகாதவர்.
துலாம் லக்னத்திற்கு சுக்ரன் லக்னாதிபதி மற்றும் அஷ்டமாதிபதி. சுக்ரன் பலம் பெற்றால் அழகாக நேர்த்தியான உடை, சிகை அலங்காரம் செய்து கொள்வார்கள்.
மன உறுதி அதிகமாக இருக்கும். தான் சொல்வதைதான் பிறர் கேட்க வேண்டும் என்ற பிடிவாத குணம் இருக்கும். தன் எண்ணப்படியே தான் சொல்வதை 10 பேர் கேட்டு நடக்கும் அளவிற்கு கடினமான சூழ்நிலையிலும் சமூகத்தில் தன்னை உயர்ந்தவராக மாற்றிவிடுவர். அவசர புத்தி உடையவர்கள். தன்னை பற்றி பழிச்சொல் சொன்னால் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். நடிப்பில் ஆர்வம் திறமையும் இருக்கும். கவிதைகள் படிப்பதிலும் நகைச்சுவையை ரசிப்பதிலும் ஆவல் மிகும். நிர்வாகம் செய்வதில் திறமையானவர்கள். சுக்ரன் அசுப பலம் பெற்றால் லக்னாதிபதியே அஷ்டமாதிபதியாக இருப்பதால் எளிதில் செய்வினை, கண் திருஷ்டி தோஷம் பாதிக்கும். தீராத வம்பு வழக்கு கடன் பிரச்சனை, நோய், அறுவை சிகிச்சை கண்டம், அவமானம் போன்ற பாதிப்பு இருக்கும்.
துலாத்திற்கு செவ்வாய் 2,7-ம் அதிபதி. செவ்வாய் பலம் பெற்றால் பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். திருமணம் தடை அகலும். இளம் வயதில் திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணை வசதியானவாரக இருப்பார். அல்லது நல்ல உத்தியோகத்தில் உள்ள வரன் அமையும். குடும்பம் கோவிலாக இருக்கும். ஒருவரின் பேச்சிற்கு மற்றொருவர் கட்டுப்படுவார்கள். இல்லற இன்பத்தில் ஆர்வம் மிகுதியாக இருக்கும். எளிய நிலையில் இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு முன்னேற்றமான வாழ்க்கை உண்டு. வாழ்க்கைத் துணையின் மேல் அன்பும் அதிக அக்கரையும் இருக்கும். கணவன், மனைவி இருவருமே தீர்க்காயுளுடன் வாழும் பாக்கியம் பெறுவார்கள். திருமணம் முடிந்தவுடன் தனித் குடித்தனம் செல்வார்கள். நண்பர்கள், கூட்டுத் தொழில் ஆதாயம் உண்டு. சமுதாய மதிப்பு நிறைந்த இடத்தில் சம்பந்தம் செய்வார்கள். செவ்வாய் பலம் குறைந்தால் தம்பதிகளுக்குள் ஈகோ மிகுதியாகும். பெற்றோர்களுடன் கருத்து வேறுபாட்டால் தனிக்குடித்தனம் செல்வார்கள். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களால் வஞ்சிக்கப்படுவார்கள். வயோதிகர்களுக்கு செவ்வாய் திசையில் மாரக பாதிப்பு ஏற்படும்.
குரு துலாத்திற்கு 3,6ம் அதிபதி. குரு சுப பலம் பெற்றால் முறையாக கடன் பெற்று திரும்பச் செலுத்துவார்கள். பெற்ற கடனால் பயன் உண்டு. உடன் பிறந்தவர்களின் ஆதரவு உதவி இருக்கும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவார்கள். பணம் கொடுத்து உத்தியோகத்தில் சேருவார்கள். நல்ல சமுதாய அங்கீகாரம் நிறைந்த உத்தியோகத்தில் பணிபுரிவார்கள். குரு பலம் குறைந்தால் உடன் பிறந்தவர்களின் தேவையை நிறைவு செய்வதற்காக வாழ்நாள் கடனாளியாக மாறுகிறார்கள்.
உடன் பிறந்தவர்களுடன் சண்டை, சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். முறையற்ற பாகப் பிரிவினையால் பாதிப்பை சந்திப்பார்கள். ஜாமீன், ஆவணங்கள் தொடர்பான பிரச்சினையால் கடன் தேடி வரும்.
கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் சிலர் உடன் பிறந்தவர்கள் பெயரில் சொத்து வாங்கி குவித்து விட்டு பின் நாட்களில் மன உளைச்சலை சந்திக்கிறார்கள். பணம் கொடுத்து ஏமாறுவார்கள். திட்டமிடுதல் இருக்காது. சோம்பேறித்தனம் மிகுதியால் நிலையான தொழில், உத்தியோகம் இருக்காது. உள்ளுக்குள் பயந்தவராகவும் வெளியில் வீரமாகவும் காட்டிக் கொள்வார்கள்.
துலாம் லக்னத்திற்கு 4,5-ம் அதிபதியான சனிபகவான் லக்னத்தில் உச்சம் பெறுவார். 12 லக்னங்களில் உச்ச சனியால் அதிக நன்மையை பெறுபவர்கள் துலாம் லக்னத்தினர் என்றால் அது மிகைப்படுத்தல் ஆகாது. பூர்வ புண்ணியம் மிகுந்தவர். வாழ்நாள் முழுவதும் புகழ் அந்தஸ்து உடன் வரும். குல தெய்வமே குழந்தையாக பிறக்கும். பிள்ளைகள் குல கெளரவத்தை காப்பாற்றுவார்கள். அறிவாளியாக புத்திக் கூர்மையுடன் இருப்பார்கள். குல தெய்வ அருள் உண்டு. குல தெய்வ கோவில் நிர்வாகி அல்லது கெளரவ பதவியில் இருப்பார்கள். அரசாங்க பதவி, அரச உத்தியோகம் உண்டு. சிறப்பான வீடு, வாகன யோகம் உள்ளவர்கள். பூர்வீகச் சொத்தை பல தலைமுறையினர் பயன் படுத்துவார்கள். சிலர் அதிர்ஷ்ட வசத்தால் திடீர் பணக்காரர்களாக மாறுவார்கள். சனி எந்த நிலையில் இருந்தாலும் குல கெளரவத்திற்காக வாழ்வார்கள். சனி பலம் குறைந்தால் முன்னோர்களின் பூர்வீகச் சொத்தை சிறிது, சிறிதாக விற்று ஜீவனம் நடத்துவார்கள். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் இருக்கும் அல்லது பூர்வீகச் சொத்தை விற்று கடன் அடைப்பார்கள். குல தெய்வ கடாட்சம் குறைவுபடும். தாய்மாமாவுடன் வம்பு வழக்கு இருக்கும். முன்னோர்களின் கர்ம வினை நோய் பாதிப்பு மிகுதியாக இருக்கும். இது கடுமையான புத்திர தோஷ அமைப்பு. பெற்ற பிள்ளைகளே எதிரியாக மாறுவார்கள். குழந்தைகளின் இனம் புரியாத நோய் தாக்கம், உயர் கல்வி, திருமணம் போன்றவற்றால் வருமானத்திற்கு மீறி செலவால் கடன் வரும். கெட்ட எண்ணங்களின் தாக்கம் மிகுதியாக இருக்கும். காலத்திற்கு ஏற்ப தொழிலில் மாறுதல் செய்யாமல் குண்டு சட்டியில் குதிரை ஒட்டுவார்கள். அல்லது நஷ்டத்தில் உள்ள குலத் தொழிலை தூக்கி நிறுத்துகிறேன் என்று மிச்ச மீதி இருக்கும் பெயரையும் கெடுத்து நஷ்டத்தை அதிகரிப்பார்கள். சிலருக்கு நெருடலான அரசு உத்தியோகம் கிடைக்கும். சிலர் அரசியல், கெளரவப் பதவி அல்லது ஆன்மீக செயல்களுக்காவும் கடன்படுவார்கள்.முன்னோர்களின் பரம்பரை வியாதி பாதிப்பு உண்டு.
புதன் துலாத்திற்கு 9, 12-ம் அதிபதி. பாக்தியாதிபதி மற்றும் விரயாதிபதி. புதன் பலம் பெற்றால் நல்ல ஒழுக்கமும், சமயோசித புத்தியும் உள்ளவராக இருப்பார். சிறிய உழைப்பில் பெரிய வருமானம் உண்டு. உயர் கல்வி கற்பார்கள். வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை வரமாக அமையும்.பெயர் சொன்னால் தெரியும் வகையில் குலத் தொழில் மூலம் உலகப் புகழ் பெறுவார்கள். அயல்நாட்டு வாணிகம் மூலம் நல்ல லாபம் உண்டு. நேர்மையாக நடந்து கொள்வார்கள். தந்தை வழியால் முன்னேற்றம் உண்டாகும்.
ஜாதகரின் தந்தை செல்வச் செழிப்பாக இருப்பார்கள். தந்தையின் சொத்துக்களை கட்டி காப்பார்கள். தந்தையின் சொத்துக்களை ஜாதகர் மேலும் விருத்தி செய்வார். குரு தீட்சை பெறுவார்கள். கோவில் கட்டி கும்பாபிசேகம் செய்வார்கள். கோவில் சார்ந்த திருப்பணி வேலைகளுக்கு தான தர்மம் வழங்கி முன்னின்று செயல்படுவார்கள். புதன் அசுப பலம் பெற்றால் ஜாதகர் தந்தை மற்றும் தந்தை வழி உறவுகள் சம்பாதித்த சொத்துக்களை விரயம் செய்வார். சேமிப்பும் சிக்கனமும் இருக்காது. ஊதாரித்தனமாக செலவு செய்பவராக இருப்பார். கடினமாக உழைத்தாலும் வாழ்வில் பெரிய வெற்றி, முன்னேற்றம் இருக்காது. வாழ்க்கையில் விரக்தியும், வெறுப்பும் உள்ளவராக இருப்பார்.பூர்வீகத்தில் வசித்தால் மேன்மை இருக்காது. வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை நன்மை தரும். ஜாதகருக்கு தந்தையின் அன்பு கிடைக்காது. நிம்மதியான உறக்கம் இருக்காது. பெற்றோர்களுக்கு அவப்பெயரை தேடிவைப்பவர். குல கெளரவத்திற்கு பங்கம் ஏற்படுத்துவர்கள்.
சந்திரன் துலாத்திற்கு 10-ம் அதிபதி. தொழில் ஸ்தான அதிபதி. சந்திரன் சுப வலுப்பெற்றால் சுயதொழில் மூலம் வருமானம் உண்டு. தொழிலில் நேர்மை, நாணயம் இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் பாராட்டும் புகழும் பெறக்கூடியவராக இருப்பார். அரசாங்கத்தில் உயர் பதவி உண்டு.
புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். எதிர்பார்ப்பின்றி சேவை செய்பவர்களாக இருப்பார்கள். செய்யும் தொழிலே தெய்வம் என்று எண்ணக்கூடியவர்களாக இருப்பார்கள். மொத்தில் சமுதாயத்தில் பாக்கியவான்களாக வலம் வருவார்கள். சந்திரன் அசுப பலம் பெற்றால் வாழ்ந்து கெட்டவர்களாகவே இருப்பார்கள். பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் வாழ்வில் அனுபவிக்கும் சுகங்கள் குறையும். இயன்றவரை இவர்கள் தங்கள் பெயரில் தொழில் செய்யாமல் இருப்பதே சிறப்பு.
பல தொழில் திறமை இருக்கும். ஆனால் எந்த தொழிலும் இவருக்கு பயன்படாது. எந்த வேலைக்கு சென்றாலும் முதலாளிக்கு தன் திறமையால் நிறைய சம்பாதித்து கொடுத்து தான் சொற்ப சம்பளம் பெறுவார்கள்.
சூரியன் துலாத்திற்கு லாபாதிபதி மற்றும் பாதகாதிபதி. அவர் ராசிக்கு ஏழாமிடமான சம சப்தம ஸ்தானத்தில் உச்சம் பெறுவது திருமண வாழ்க்கையில் சில பாதிப்புகளை தரும். சிலருக்கு திருமணமே நடக்காத சூழ்நிலையும் உருவாகும். 7ல் உச்சம் பெறும் சூரியன் திருமண விஷயத்தில் ஜாதகருக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் தருகிறது. சூரியன் கேது சாரத்தில் இருந்தால் திருமணத்தால் வம்பு வழக்கையும், சுக்கிரன் சாரத்தில் இருந்தால் மிகக் கால தாமதமான திருமணத்தையும், சுய சாரத்தில் இருந்தால் திருமணமே கேள்விக்குறியாகவும் இருக்கிறது.
சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கும். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு திருமணம் திருப்புமுனையாக இருக்கும். மூத்த சகோதர சகோதரிகளால் சில எதிர்பாராத பாதகங்கள் நடக்கும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால் பாதிப்பு இருக்கும்.
சூரியன் உச்சம் பெற்ற துலாம் லக்னத்தினர் கூட்டுத் தொழிலை தவிர்த்தல் நல்லது. சில பாதகங்கள் நடந்தாலும் சூரிய தசை வராத காலகட்டங்களில் நிம்மதி இருக்கும்.
சூரியனுக்கு அஷ்டம பாதக தோஷம் கிடையாது என்றாலும் சூரியனுக்கு பகை கிரகங்களான சனி, ராகு, கேது சம்பந்தம் இருந்தால் சூரிய தசை புத்தி காலங்களில் பாதகம் தன் கடமையை செவ்வனே செய்கிறது.
துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்து வருவதன் மூலம் வாழ்க்கையில் மேன்மையான பலன்களை அடைய முடியும்.