

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் சிவன், திருமால், பிரம்மா ஆகியோரை பக்தர்கள் வழிபடுகிறார்கள். இதற்காக கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமியை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
கோவிலின் முகப்பில் 7 அடுக்குகளுடன் 133 அடி உயரத்தில் ஏராளமான சிற்பங்களை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் முதலில் தெட்சிணாமூர்த்தி சன்னதியும், அதைத்தொடர்ந்து கொன்றையடி, மாக்காளை, இசைத்தூண்கள், நவக்கிரக மண்டபம், நீலகண்டவிநாயகர், தாணுமாலயசாமி சன்னதி, திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சன்னதி, நடராஜ மூர்த்தி சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, அறம்வளர்த்த அம்மன் சன்னதி, சித்திரசபை, கைலாசநாதர் சன்னதி, அலங்கார மண்டபம், செண்பகராமன் மண்டபம், சுற்றுப்பிரகார மண்டபம், ராமர் சன்னதி உள்பட பல்வேறு சன்னதிகளும், முடிவில் இந்திர விநாயகர் சன்னதியும் உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறுவது மரபு. அதே போல தாணுமாலயசாமி கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
தாணுமாலயசாமி கோவிலில் கடந்த 3 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.33 லட்சம் செலவில் ராஜகோபுர வெளிப்பிரகார புனரமைப்பு பணி நடந்தது. ரூ.81 லட்சத்தில் ராஜகோபுரத்தின் உள்ளே உள்ள 7 அடுக்குகளில் காணப்படும் மூலிகை ஓவியங்கள் புதுப்பிக்கும் பணியும், ரூ.28 லட்சத்தில் கோவிலை சுற்றிலும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டும், ஆஞ்சநேயர் சன்னதியை சுற்றி ரூ.11 லட்சத்தில் பித்தளையாலான தடுப்பு அமைப்பது போன்றவை நடந்தன. கோவில் அருகில் உள்ள கோசாலையில் ரூ.10 லட்சத்தில் தரைகற்கள் பதிக்கும் பணி உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்றன.
மேலும் தெப்பகுளம் ரூ.40 லட்சம் செலவில் தூர்வாரி அழகுபடுத்தும் பணியும், ரூ.5 லட்சத்தில் படிக்கட்டுகளில் தடுப்பு வேலியும், ரூ.5 லட்சம் செலவில் தந்திரி மடம் சீரமைப்பு மற்றும் ரூ.8 லட்சம் செலவில் சோலார் மின் விளக்குகளும் பொருத்தப்பட்டு உள்ளன. தாணுமாலயசாமி கோவிலில் மொத்தம் ரூ.2 கோடியே 87 லட்சம் செலவில் 11 திருப்பணிகள் நிறைவு பெற்று உள்ளன.
இதுதவிர கோவிலில் மராமத்துப்பணிகளான தட்டோடு பதித்தல், தரை சரிசெய்தல், கழிவுநீர் ஓடை சரி செய்வது, கல்தூண்களை சுத்தப்படுத்துவது, நம்பூதிரி மடம் சீரமைப்பது, ஹோம அறையை புனரமைப்பது, விமானங்கள் பராமரிப்பு பணி, வாகனங்கள் பழுது பார்ப்பது உள்பட 29 பணிகள் உள்ளன.
தாணுமாலயசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதால், அடுத்த கும்பாபிஷேகம் எப்போது நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.