

சேலம் அரிசிபாளையம் தெப்பகுளம் அருகில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் அரசு, வேம்புக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு தொடங்கிய சீர்தட்டு ஊர்வலம் அதே பகுதியில் உள்ள முருகன் கோவில், சவுடேஸ்வரி அம்மன் கோவில், அரிசிபாளையம் மாரியம்மன் கோவில் சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
இதையடுத்து காலை 7 மணிக்கு கோ பூஜையும், 8 மணிக்கு திருமண ஹோமமும் நடைபெற்றது. பின்னர் அரசு, வேம்பு மரத்திற்கு மஞ்சள் பூசி, குங்குமமிட்டதுடன் சிவன், பார்வதி அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. மேலும் சிவன், பார்வதி அலங்காரத்தில் வரசித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சித்தி விநாயகர் கோவில் சங்கரஹர சதுர்த்தி விழாக் குழுவினர் செய்திருந்தனர்.