

சிவபெருமானின் மனைவி பார்வதி குறித்து நிறைய கதைகள் உள்ளன. அவற்றில் ஒன்றினை பெரிய புராணத்தில் இருந்து காண்போம்.
ஒருமுறை சிவபெருமான், பார்வதிதேவிக்கு வேதங்களை விளக்கி கூறிக்கொண்டிருந்தார். ஆனால் பார்வதி அதை முழு மனதாக கவனிக்காமல் இருந்தாள். இதனால் கோபமுற்ற சிவபெருமான், பூமியில் ஒரு சாதாரண மீனவ குடும்பத்தில் மீனவ பெண்ணாக பிறந்து வளர்வாயாக என்று பார்வதிக்கு சாபம் கொடுத்தார்.
பார்வதியும் அதுபோலவே மீனவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வந்தார். இளம் வயது கொண்ட அவரது அழகில் பல இளம் மீனவர்கள் தங்கள் மனதை பறிகொடுத்தனர்.
பார்வதியை பிரிந்து இருக்க முடியாத சிவன் அவரை மீண்டும் கயிலாயம் அழைத்துவர எண்ணினார். அதற்காக ஒரு நாடகத்தை அவர் நடத்தினார். நந்தியை அழைத்து ஒரு சுறா மீனைப் போல் உருவெடுத்து அந்த மீனவ கிராமத்தை மிரட்டும்படி கூறினார். சுறாவைக் கண்ட மீனவர்கள் நடுங்கினர்.
இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வினைக் காண எண்ணிய மீனவ தலைவன் அந்த சுறா மீனை கொல்லும் வீரனுக்கே தன் மகளான பார்வதியை மணமுடித்து தருவேன் என்று கூறுகிறார். சுறா மீனிடம் உயிரை விட எந்த மீனவரும் தயாராக இல்லை. பின் சிவன் சாதாரண மீனவர் வடிவில் வந்து சுறா மீனை கொன்று பார்வதியை மணமுடித்து கயிலாயத்துக்கு இருவரும் திரும்பினார்கள்.