

அவரும், அவர் மனைவி பையாஜிபாயும் வேப்ப மரத்தடிக்கு விரைந்தனர். அவர்களைக் கண்டதும் சாய்பாபா எழுந்து நின்று கைக்கூப்பி வணக்கம் தெரிவித்தார். ஒளி வீசும் கண்களுடன், பாலகனாய் இருந்த பாபாவைப் பார்த்ததும் பையாஜிபாய் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பாபாவை அவர் தன் வயிற்றில் பிறவாத குழந்தையாக நினைத்தார். அந்த அன்பும், பாசமும் பாபா மீதான ஈர்ப்பை பையாஜிபாயிடம் அதிகரிக்க செய்தது. மறுநாள் முதல் பாபாவுக்கு உணவு சமைத்து கொடுக்கும் பழக்கத்தை அவர் மேற்கொண்டார். இதன் மூலம் சீரடியில் முதன் முதலில் பாபாவிடம் அன்பு செலுத்தியவர் என்ற பெருமையை பையாஜிபாய் பெற்றார்.
பாபாவிடம் பையாஜிபாய் வைத்திருந்த அன்பு அளவிடற்கரியது. ஈடு இணையற்றது. பாபா உணவு சாப்பிடும் முன்பு பச்சத் தண்ணீர் கூட குடிக்க மாட்டேன் என்று அவர் சபதம் ஏற்று வைராக்கியமாக இருந்ததில் இருந்து, அவர் எந்த அளவுக்கு பாபா மீது பாசத்துடன் இருந்திருப்பார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
நாளடைவில் மக்கள் வருகை அதிகரித்ததால் தனது தியானத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கருதிய பாபா சீரடி புறநகரில் உள்ள காடுகளுக்குள் சென்று விடுவதை வழக்கத்தில் வைத்திருந்தார். அப்போதும் பையாஜிபாய் விட்டுவிடவில்லை. பாபாவுக்கு தினமும் கண்டிப்பாக உணவு கொடுத்தே தீருவது என்பதை அவர் கடமையாக வைத்திருந்தார். காடுகளுக்குள் அலைந்து திரிந்து தேடிப்பிடித்து பாபாவுக்கு உணவு கொடுத்து விட்டு வருவார்.
சில சமயம் பாபா அடர்ந்த புதர்களுக்குள் போய் உட்கார்ந்து விடுவார். அப்போதும் அவர் விட மாட்டார். உணவு பற்றியோ, உடல் பற்றியோ எந்த சிந்தனையும் இல்லாமல் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் பாபாவை தட்டி எழுப்பி உணவு கொடுப்பார்.
பாபா, “கடவுள் அவதாரம்“, “தெய்வப் பிறவி”, என்பதை உளப்பூர்வமாக பையாஜிபாய் முழுமையாக நம்பினார். பிற்காலத்தில் பாபாவின் புகழ் உலகம் முழுவதும் பரவும், கோடிக்கணக்கான பக்தர்கள் அவரைத் தேடி சீரடிக்கு வருவார்கள் என்பதை பையாஜிபாய் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
என்றாலும் அவர் பாபா மீது கொண்டிருந்த அன்பு அப்பழுக்கற்ற கலப்படம் இல்லாததாக இருந்தது. பாபா எந்த ஒரு அற்புதத்தையும் நிகழ்த்தி காட்டாத போதும், அவர் மீது பையாஜி பாய் வைத்திருந்த பாசம் மற்றவர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காட்டுக்குள் தினமும் தன்னை தேடி அலைந்து, கஷ்டப்பட்டு கண்டுபிடித்து உணவு தருவதை அறிந்து, பையாஜிபாய் மீது பாபா இரக்கம் கொண்டார். உணவு வேண்டாம் என்று தடுத்துப் பார்த்தார். ஆனால் பையாஜிபாய் கேட்கவில்லை.
இதனால் நெகிழ்ந்து போன பாபா, இனியும் அவரை சிரமப்படுத்தக்கூடாது என்று முடிவு செய்தார். எனவே அவர் காட்டு வாழ்க்கைக்கு விடை கொடுத்து விட்டு சீரடி கிராமத்துக்குள் குடியேற முடிவு செய்தார். இதைத் தொடர்ந்தே சீரடி ஊரின் மத்தியில் பாழடைந்து கிடந்த மசூதியில் பாபா குடியேறினார். அதன் பிறகும் பாபாவுக்கு உணவு கொடுப்பதை பையாஜிபாய் நிறுத்திக் கொள்ளவில்லை.
தினமும் மதியம் உணவு சமைத்து எடுத்து வந்து பாபாவுக்கு அளித்தார். தன் வாழ்நாளின் கடைசி வரை அவர் இந்த பழக்கத்தை வைத்திருந்தார். பாபாவுக்கு உணவு கொடுத்ததற்காக அவர் எந்த ஒரு சலுகையையும் பெறவில்லை. பாபாவிடம் எந்த பிரதிபலனையும் அவர் எதிர்பார்க்கவில்லை.
இப்படி பிரதிபலன் பாராமல் இருந்ததால்தான் பாபாவுக்கும் பையாஜி பாய்க்கும் இடையே ஆத்மார்த்தமான நட்பு நிலவியது. இந்த பேரன்பு குறித்து ஒரு தடவை பக்தர்களிடம் பேசும்போது பாபா கூறியதாவது:-
பையாஜிபாய் முற்பிறவியில் என் சகோதரியாக இருந்தார். அந்த பிறவியிலும் எனக்கு உணவு கொடுத்தது அவர்தான். அன்று அவர் காட்டிய அன்பு இன்றும் நீடிக்கிறது. இவ்வாறு கூறிய பாபா, “இந்த பிறவியில் இவர் என் தாய்” என்று மனதார வாழ்த்தினார். பாபாவால் முதன் முதலில் “அம்மா” என்ற சிறப்பு அந்தஸ்துடன் அழைக்கப்பட்ட ஒரே பக்தை பையாஜிபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
பையாஜிபாயின் மகன் தத்யா பட்டீலும், பாபா மீது அளவு கடந்த அன்பைப் பொழிந்தார். பாபாவுக்கு தேவையான எல்லா பணி விடைகளையும் செய்து கொடுத்தார்.சிறு வயது முதல் இளம் வயது வரை தனக்கு தினமும் உணவு தந்த பையாஜிபாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தத்யா பட்டீலுக்கு எல்லா உதவிகளையும் சாய்பாபா செய்தார். அவர் ஆசியால் தத்யாபட்டீல் மிகப்பெரிய கோடீசுவரராக மாறினார்.
மிகப்பெரும் செல்வந்தராக மாறிய பிறகும் தத்யா பட்டீலின் போக்கில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பாபாவுக்கு தினசரி செய்ய வேண்டிய கடமைகளை செய்தார்.
ஒரு பக்தன், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், பாபாவிடம் எப்படி அன்புடன் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பையாஜி பாயும், தத்யாபட்டீலும் திகழ்ந்தனர். இன்னும் சொல்லப் போனால், பையாஜிபாயைப் பார்த்து, நிறைய பக்தர்கள் சாய்பாபாவிடம் எதிர்பார்ப்பு ஏதுமின்றி, ஆத்மார்த்தமான அன்புடன் பழகும் பக்தர்களாக மாறினார்கள்.
பையாஜிபாய் போல பாபாவால் “அம்மா” என்று அழைக்கப்பட்ட மற்றொரு பெண் பக்தை ராதாகிருஷ்ண ஆயி. இவரது உண்மையான பெயர் சுந்தரிபாய் சாகர். மிகவும் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே இவருக்குத் திருமணமாகி விட்டது. ஒரு தடவை இவர் சீரடிக்கு வந்திருந்தார்.
அவரிடம் சாய்பாபா, “விரைவில் நீ தாயாகப் போகிறாய்” என்றார். இதனால் சுந்தரிபாய் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் ஊர் திரும்பியதும் சுந்தரிபாயின் கணவர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இதனால் வாழ்வில் விரக்தி அடைந்த அவர் பண்டரிபுரம் சென்று சுமார் 2 ஆண்டுகள் பாண்டுரங்கனுக்கு சேவை செய்தார்.
அதன் பிறகு அவர் மீண்டும் சீரடி வந்தார். பாபாவைக் கண்டதும் கதறி, கதறி அழுதார். “பாபா... நான் விரைவில் தாய் ஆவேன் என்று சொன்னீர்களே?” என்று கூறி அழுதார். அவரை சமரசம் செய்த பாபா, “நான் உண்மையைத்தான் சொன்னேன். இன்று நீ இந்த துவாரகமாயிக்கு வந்திருப்பதன் மூலம் இங்கு வரும் அனைவருக்கும் நீ தாயாகி விட்டாய். எனக்கும் நீதான் தாய்” என்றார்.
இதைக் கேட்டதும் பாபா காலடியில் விழுந்து சுந்தரிபாய் அழுதார். அப்போது மசூதியில் பாபாவுடன் மகல்சாபதி, தாஸ்கணு மகராஜ் உள்பட ஏராளமான பக்தர்கள் இருந்தனர். அவர்களிடம் பாபா, “இன்று முதல் இப்பெண் நமக்கு தாய் ஆவாள். இனி இவள் பெயர் ராதாகிருஷ்ண ஆயி” என்றார்.
ஆயி என்றால் தாய் என்று பொருளாகும். பாபா அவரை தாய் என்று அழைக்க தொடங்கியதில் இருந்து மற்ற பக்தர்களும் அவரை தாய் என்று அழைக்க தொடங்கினார்கள். சுமார் 9 ஆண்டுகள் சீரடியில் ராதாகிருஷ்ண ஆயி வசித்தார். முதலில் மசூதியையும், பாபா லெண்டித் தோட்டத்துக்கு செல்லும் வழியையும் சுத்தம் செய்யும் பணியை ராதாகிருஷ்ண ஆயி செய்தார். பிறகு பாபா தொடர்பான நிறைய விஷயங்களை அவர் மாற்றி அமைத்தார்.
அவரது சுறுசுறுப்பான சேவையால் பாபா தங்கியிருந்த துவாரகமாயி மசூதி அழகு பெற்றது. மசூதியில் எப்போதும் அலங்கார தோரணங்கள் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். அது போல பாபாவின் தோற்றத்தையும் மாற்றினார். அதுவரை ஏழைப் பக்கிரி போல இருந்த பாபா, அரசர் போல மாறினார். பாபா இருக்கும் இடத்தை தர்பார் என்றார்.
ராதாகிருஷ்ண ஆயி பண்டரிபுரத்தில் 2 ஆண்டுகள் தங்கியிருந்த போது ஆரத்தி உள்ளிட்ட பூஜைகளில் ஆர்வம் காட்டினார். அதே போன்று பூஜை முறைகளை சீரடியில் அவர் புகுத்தினார். காகட் ஆரத்தி, சேஜ் ஆரத்தி இரண்டும் தோன்றியதற்கு ராதாகிருஷ்ண ஆயி மேற்கொண்ட முயற்சிகளே காரணமாகும். இது மட்டுமின்றி பாபாவுக்கு செய்ய வேண்டிய நைவேத்தியம், வழிபாடுகள் முறைகளிலும் கூட ராதாகிருஷ்ண ஆயி நிறைய சீர்திருத்தங்களை செய்தார்.
ஆரத்தி பாடல்களை நெறிப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. ராதாகிருஷ்ண ஆயி செய்த வழிபாடு முறைகள் இன்றும் சீரடியில் அப்படியே தொடர்ந்து வருகிறது.தன்னலமற்ற சேவையால் பாபா மனதில் ராதாகிருஷ்ண ஆயி நிறைந்திருந்தார். எனவே சீரடிக்கு புதிதாக வருபவர்களை பாபா முதலில் ராதாகிருஷ்ண ஆயி வீட்டுக்குத்தான் அனுப்புவார்.
அந்த புதிய பக்தர்களுக்கு மசூதியில் எப்படி வழிபட வேண்டும் என்பதை ராதாகிருஷ்ண ஆயி சொல்லிக் கொடுத்தார். இதனால் அவரது வீடு பள்ளிக்கூடம் என்று புகழப்பட்டது. இப்படி சாய்பாபாவுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ராதாகிருஷ்ண ஆயி 35-வது வயதில் மரணம் அடைந்தார். அவர் செய்த சேவைகள் இன்றும் நினைவு கூறப்படுகின்றன.
அவரைப் போலவே மேலும் சில பெண் பக்தைகள் பாபா அன்பை பெற்றிருந்தனர். அவர்களைப் பற்றி அடுத்த வாரம் (வியாழக்கிழமை) காணலாம்.
- ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.