விஷூ பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 10-ந் தேதி திறப்பு

விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 10-ந் தேதி திறக்கப்படுகிறது. 18-ந் தேதி வரை 9 நாட்கள் பூஜைகள் நடைபெறுகிறது.
விஷூ பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 10-ந் தேதி திறப்பு
Published on

கேரளாவில் ஓணம் பண்டிகையை போன்று விஷூ பண்டிகையையும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் விஷூ பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த ஆண்டுக்கான விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.

11-ந் தேதி முதல் வழக்கமான பூஜை மற்றும் வழிபாடுகளுடன் நெய் அபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும்.

15-ந் தேதி விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து கனி காணுதல் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் வழங்குகிறார்கள்.

சித்திரை மாத பூஜைகளுக்கு பின் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 18-ந் தேதி இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு அடைக்கப்படும்.

விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 9 நாட்கள் பூஜைகள் நடைபெறும். எனவே ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முக்கிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் பம்பைக்கு இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com