

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச திருவிழாவில் பாதயாத்திரையாகவும், பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தக்காவடி எடுத்தும் பக்தர்கள் பழனிக்கு வருவது சிறப்பு அம்சமாகும். பழனி முருகப்பெருமான் சிலை நவபாஷாணத்தால் ஆனது. எனவே கோடைகாலமான பங்குனி, சித்திரை மாதங்களில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து பக்தர்கள் பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.
இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா, பழனி உபகோவிலான திரு ஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திரதேவர் உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இன்று காலை திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம் நடந்தது. பின்னர் சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிப்படம் கொடிமரம் முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என 16 வகை பொருட்களால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளினார்.
அதையடுத்து அஸ்திரதேவர், விநாயகர் சிலை முன்பு மயூரயாகம், வாத்திய பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 9.30 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என சரண கோஷம் எழுப்பினர். பின்னர் ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் மூலவர் சன்னதியில் உள்ள விநாயகருக்கு காப்புக்கட்டு நடந்தது. அதைத்தொடர்ந்து சண்முகர், உற்சவர், துவார பாலகர்கள், மயில்வாகனம் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் சோமாஸ்கந்தர், சிவன், பெரியநாயகிஅம்மன், நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு காப்புக்கட்டு நடைபெற்றது. பூஜை முறைகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்ரமணி மற்றும் குருக்கள்கள் செய்தனர்.
பழனி பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் வருகிற 31-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் நடைபெறுகிறது.
ஏப்ரல் 1 ம் தேதி பங்குனி உத்திரம் அன்று பழனி கிரிவீதியில் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்துடன் கோவில் தேவஸ்தானம் இணைந்து செய்து வருகின்றனர்.
பழனி முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் போது தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர விழாவையொட்டி வருகிற 30-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை 5 நாட்கள் தங்கத்தேர் புறப்பாடு நிறுத்தப்படுகிறது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.