

நவநாரி குஞ்சரம்... இது சமஸ்கிருதப் பெயர்.
நவ என்றால் ஒன்பது.
நாரி என்றால் பெண்.
குஞ்சரம் என்றால் யானை.
இதை தமிழில் மொழிபெயர்த்தால் ஒன்பது பெண் யானை. இது சரியா?
அப்படியானால் இது என்ன? இது சிற்பக்கலையில் ஒரு வகை.
திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் கனககிரீஸ்வரர் கோவில், தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஆதிநாதசுவாமி கோவில், திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் இந்த சிற்பத்தைக் காணலாம்.
இந்த சிற்பத்தின் விசேஷம் என்னவெனில் ஒன்பது பெண்கள் தங்கள் முகத்தில் நவரசங்களை காட்டியபடி யானை போல் செதுக்கப்பட்டு இருப்பார்கள்.
இந்த சிற்பத்தை சாதாரணமாகப் பார்த்தால் யானை போல் தோன்றும்.
கூர்ந்து கவனித்தால் மட்டுமே அது யானை அல்ல, ஒன்பது பெண்கள் யானையின் வடிவில் தங்களை வடிவமைத்துக் கொண்டுள்ளது தெரிய வரும்.
நவரசங்கள் என்பது நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, பெருமிதம் ஆகியவற்றை குறிக்கும்.
இப்படி நவரச உணர்வுகளையும் தங்கள் முகத்தில் காட்டும் இந்தப் பெண்களை யானை உருவத்தில் செதுக்கப்பட்ட சிற்பமே நவநாரி குஞ்சரம்.
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதருக்கும் எத்தகைய பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை யானை போல் வலிமையுடன் சமாளிக்க வேண்டும் என்பதற்காக இந்த சிற்பம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.