மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில்

நினைத்த காரியம் நடக்குமா?, திருமண யோகம் எப்போது?, குழந்தை பாக்கியம் கிடைக்குமா?, வேலைவாய்ப்புகள் அமையுமா? உள்ளிட்ட பக்தர்களின் பல்வேறு கேள்விகளுக்கு, இங்கே அருள்வந்து ஆடுபவர்கள் குறி சொல்வார்கள்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்
Published on

தமிழ்நாட்டில் பல சிறப்புகளைக் கொண்ட ஆலயங்கள் இருக்கின்றன. அந்த வகையில் முக்கியமான திருத்தலமாக விளங்குவது, மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில்.

தல வரலாறு

தொடக்க காலத்தில் சிவனைப்போல பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவபெருமானுக்கு நிகரானவர் என்று பிரம்மன் ஆணவம் கொண்டார். இதையடுத்து அவருடைய ஒரு தலையை கிள்ளி எடுத்தார், ஈசன். இதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது.

ஈசன் கிள்ளிய பிரம்மனின் தலை, சிவபெருமானின் கையில் மண்டை ஓடாக மாறி ஒட்டிக்கொண்டது. அவர் ஒரு கையில் கபால திருவோடு, மற்றொரு கையில் சூலாயுதம் தாங்கியபடி, உடலெங்கும் சாம்பலை பூசிக்கொண்டு ஊர், ஊராக அலைந்து திரிந்தார். அதன் ஒரு பகுதியாக மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் குடிகொண்டிருக்கும் இத்தலத்துக்கு வந்தார். அங்காள பரமேஸ்வரி அம்மன், சிவன் கையில் இருந்த கபாலத்துக்கு உணவிட்டு, சாதத்தை கீழே சிதறிபோகும் படி செய்தார். அப்போது சிவன் கையில் இருந்த கபாலம் கீழே இறங்கி சாதத்தை பொறுக்கியது. உடனே அங்காள பரமேஸ்வரி அம்மன் விஸ்வரூபம் எடுத்து கபாலத்தை காலால் மிதித்து அதை அடக்கினார். இதையடுத்து சிவனை பிடித்து இருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது.

கபாலத்தை அடக்கிய பிறகும், அங்காளம்மனின் கோபம் தணியவில்லை. அவளது கோபத்தை தணிக்க தேவர்கள் அனைவரும் தேர்த் திருவிழா நடத்த முடிவு செய்தனர். தேவர்களும், முனிவர்களும் அந்த ரதத்துக்கு சக்கரமாகவும், அச்சாணியாகவும், மாடங்களாகவும், மரப்பலகை களாகவும், சிம்மாசன மேடையாகவும் மாறி நின்றனர். அங்காள பரமேஸ்வரி கோபம் தணிந்து அந்த தேரில் ஏறி அமர்ந்து வீதி வலம் வந்தாள். தேரோட்டம் முடிந்ததும் தேவர்களும், முனிவர்களும் தேரைவிட்டு அகன்று சுயரூபம் பெற்று மறைந்தனர் என்பது கோவில் வரலாறு.

இந்த ஆலயம் அமாவாசைக்கு பிரசித்தி பெற்றது. அந்த நாட்களில் ஆலயத்தில் குறி சொல்லப்படும். நினைத்த காரியம் நடக்குமா?, திருமண யோகம் எப்போது?, குழந்தை பாக்கியம் கிடைக்குமா?, வேலைவாய்ப்புகள் அமையுமா? உள்ளிட்ட பக்தர்களின் பல்வேறு கேள்விகளுக்கு, இங்கே அருள்வந்து ஆடுபவர்கள் குறி சொல்வார்கள். இதைக் கேட்பதற்காகவே இங்கே வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.

இந்தக் கோவிலில் பேய் பிடித்தவர்களுக்கு பேய் விரட்டப்படுகிறது. பேய் பிடித்த பெண்கள் இந்த கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி விட்டு ஈரச் சேலையுடன் கோவிலுக்கு வருகிறார்கள். கோவில் பூசாரி அந்த பெண்ணின் தலையில் கபால தீர்த்தத்தை தெளிப்பார். பின்னர் கற்பூரத்தை கொளுத்தி, அதை பேய் பிடித்தவர்களிடம் கொடுப்பார். அதை வாயில் போட்டுக்கொண்ட சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்டவரின் உடலும், மனதும் அமைதியாகிவிடும்.

அமைவிடம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து வடக்குதிசையில் 20 கிலோமீட்டர் தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து கிழக்கு திசையில் 20 கிலோமீட்டர் தொலைவிலும் மேல்மலையனூர் திருத்தலம் உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com