

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில், பல லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு தேர்கள் புதிதாக செய்யப்பட்டு, கடந்த 27-ந்தேதி வெள்ளோட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று இரட்டை தேரோட்டம் நடந்தது.
முதலில், ஒரு தேரில் மீனாட்சி சுந்தரேஸ்வரரும், மற்றொரு தேரில் பிடாரியம்மனையும் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் அதிர்வேட்டுகள் முழங்க தேர்களை வடம்பிடித்து இழுக்க இரட்டை தேரோட்டம் நடந்தது.
தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தபோது, ஒவ்வொரு வீதிகளிலும் கூடி நின்ற பக்தர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரரையும், பிடாரியம்மனையும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் அம்மன்குறிச்சி, சொக்கநாதபட்டி, ஆலவயல், கண்டியாநத்தம், தூத்தூர், கல்லம்பட்டி, அம்மாபட்டி, செம்மலாபட்டி, புலவர்ணாகுடி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே பொதுமக்கள் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் நீர், மோர் பந்தல், அன்னதானம் வழங்கப்பட்டன. தேரோட்டத்தையொட்டி பொன்னமராவதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.