மார்கழி மாதம்: அழகர்கோவிலில் நடை திறப்பு நேரம் மாற்றம்

பெருமாளுக்கு உகந்த மாதமான மார்கழி மாதம் பிறந்ததையொட்டி அழகர் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் நடைதிறக்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அழகர் கோவில்
அழகர் கோவில்
Published on

பெருமாளுக்கு உகந்த மாதமான மார்கழி மாதத்தில் அதிகாலை சிறப்பு வழிபாடு நடைபெறும். அதிகாலையிலேயே பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்வார்கள். மார்கழி மாதம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிறந்துள்ளது. மார்கழி மாதத்தையொட்டி அழகர்கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடை திறக்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அழகர்கோவில் கள்ளழகர் கோவில் உதவி ஆணையர் அனிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கள்ளழகர் திருக்கோவில் மற்றும் இதன் உபகோவில்களான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், வண்டியூர் வீரராகவபெருமாள் கோவில் ஆகியவற்றில் மார்கழி மாதம் முதல் தேதியில் இருந்து 29-ந் தேதி வரை(அதாவது இன்று முதல் ஜனவரி 14-ந் தேதி வரை) நடை திறப்பு நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படை அழகர்கோவில் அதிகாலை 4 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் மாலை 3.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் மற்றும் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணி முதல் காலை 11.30 மணிவரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

மேலும் கள்ளழகர் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் ஆகியவற்றில் பகல் பத்து, ராப்பத்து உற்சவம் வருகிற 27-ந் தேதி தொடங்கி ஜனவரி மாதம் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் 6-ந் தேதி (திங்கட் கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் சொர்க்கவாசல் திறப்பு நடை பெறுகிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் 27-ந் தேதி நடைபெறும் ஆண்டாள் நாச்சியார் வாய்மொழியாக சொல்லிவைத்த அக்கார அடிசல் திருவிழா ஜனவரி 12-ந் தேதி நடக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள மற்றொரு அறிக்கையில், வருகிற 26-ந் தேதி( வியாழக்கிழமை) காலை 8.09 மணி முதல் 11.20 மணி வரை நடை பெறும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடை 25-ந் தேதியன்று வழக்கம்போல பூஜைகள் நடைபெற்று இரவு 7.30 மணிக்கு நடைசாத்தப்படும். 26-ந் தேதி நண்பகல் 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கம்போல பூஜைகள் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

மார்கழி மாதத்தையொட்டி திருமோகூர் காளமேக பெருமாள் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், மதனகோபால சாமி கோவில் உள்ளிட்டகோவில்களிலும் நடைதிறப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com