

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு இறைவன் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.
இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 23, 24, 25 ஆகிய நாட்களில் தாயுமான ஈசர் திருமேனி மீது மாலை நேரத்தில் கதிரவன் ஒளி பட்டு பொன் வண்ணமாக பக்தர்களுக்கு காட்சியளிப்பதை பார்க்கலாம். இது சூரிய பூஜை ஆகும். தாயுமானசுவாமிக்கு மலைக்கோட்டை மேற்கில் கரிகால் சோழனால் வெட்டப்பட்ட தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தின் நடுவில் உள்ள அழகிய நீராழி மண்டபம் விஸ்வநாத நாயக்கரால் அமைக்கப்பட்டது.
இந்த தெப்பக்குளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமானசுவாமிக்கு தெப்பத் திருவிழா வருடந்தோறும் பங்குனி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு முந்தைய நாள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்பத்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் 7 மணிக்கு பல்வேறு வகையான வாகனத்தில் சுவாமியும்-அம்பாளும் மலைக்கோட்டை உள்வீதி, வெளிவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது. இதற்காக நேற்று மதியம் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாலை 6 மணிக்கு சுவாமி-அம்பாள் புறப்பாடு செய்யப்பட்டு மலைக்கோட்டை உள்வீதி, சின்னக்கடைவீதி, என்.எஸ்.பி.ரோடு வழியாக தெப்பக்குளத்தை சுற்றி வந்து தெப்பக்குளத்தில் தயார் நிலையில் இருந்த தேரில் இரவு 7-40 மணிக்கு எழுந்தருளினர். பின்னர் தெப்பக்குளத்தை 5 முறை தெப்பம் சுற்றி வந்தது.
பின்னர் தெப்பக்குளத்தின் நடுப்பகுதியில் உள்ள நீராழி மண்டபத்தில் சுவாமியும்-அம்பாளும் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்தனர். இதற்காக தெப்பக்குளத்தின் நடுப்பகுதியில் உள்ள நீராழி மண்டபம் உட்பட தெப்பக்குளத்தை சுற்றிலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் பக்தர்களின் வசதிக்காக தெப்பக்குளத்தை சுற்றியும் போடப்பட்டிருந்த அனைத்து தரைக்கடைகளும் நேற்று முன்தினமே அகற்றப்பட்டு இருந்தன.
தெப்ப உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு 10-45 மணிக்கு மேல் தெப்பத்தில் இருந்து சுவாமி-அம்பாள் மீண்டும் கோவிலை சென்றடைந்தனர். இன்று(வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரியுடன் தெப்பத்திருவிழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் கல்யாணி, கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
தெப்பத்திருவிழாவை முன்னிட்டு மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் சக்தி கணேஷ் மேற்பார்வையில் கோட்டை சரக போலீஸ் உதவி கமிஷனர் பெரியய்யா, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.