

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மயில் வடிவ மலையில் முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ளது. இங்கு வள்ளி-தெய்வானையுடன் திருமண கோலத்தில் முருக பெருமான் அருள் பாலித்து வருவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்து இரவில் முருகப்பெருமான் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவில் 8-ம் திருவிழாவான நேற்று இரவு முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று வெள்ளி குதிரை வாகனத்தில் முருகன் மலை வலக்காட்சி நடைபெற்றது.
விழாவில் சிகர திருவிழாவான தேரோட்டம் இன்று அதிகாலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
பின்னர் விநாயகர், வள்ளி-தெய்வானை, முருகனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உற்சவர் விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் அங்கு அலங்கரிக்கப்பட்டு இருந்த தனித்தனி தேர்களில் எழுந்தருளினர்.
அதிகாலை 5.46 மணியளவில் அர்ச்சகர்கள் வேதங்கள் முழங்க மயிலம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் விநாயகர் தேரையும், அதைத் தொடர்ந்து முருகன் தேரையும் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அங்கு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..., கந்தனுக்கு அரோகரா... என்று கோஷங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு பக்தி கோஷங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
3-ம் பிரகாரம் என்று அழைக்கப்படும் மலையை சுற்றி பக்தர்கள் கூட்டத்திற்கு மத்தியில் தேர் அசைந்தாடி வந்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.
தேரோட்டத்தின் போது விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல் மணிலா, மிளகாய், துவரை போன்ற தானியங்களை தேரில் வாரி இறைத்து மழை நன்றாக பெய்து விளைநிலங்கள் செழித்து விளைய வேண்டும் என பயபக்தியுடன் வேண்டிக் கொண்டனர்.
விநாயகர் தேர் 6.45 மணிக்கும், முருகன் தேர் 7.10 மணிக்குள் மலையை சுற்றி வந்து நிலையை அடைந்தன. முன்னதாக முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக பக்தர்கள் பால்காவடி, புஷ்பக்காவடி மற்றும் வேல் அலகு குத்திக் கொண்டு வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
விழாவில் விழுப்புரம், கடலூர், சென்னை, புதுச்சேரி, திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை என்று பல்வேறு இடங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறங்களில் இருந்து, மாட்டு வண்டியிலும், டிராக்டரிலும் வந்தனர்.
தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. விழா பாதுகாப்புக்காக திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
விழாவில் 10-வது நாளான நாளை (1-ந்தேதி) தெப்ப உற்சவமும், நாளை மறுநாள் (2-ந்தேதி) முத்து பல்லக்கில் சாமி மலைவல காட்சியும் நடைபெற இருக்கிறது. விழா ஏற்பாடுகளை 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.