மகாலட்சுமியின் பல பெயர்கள்

செல்வச்செழிப்பைத் தரும் மகாலட்சுமிக்கு பல பெயர்கள் உண்டு.
மகாலட்சுமியின் பல பெயர்கள்
Published on

செல்வச்செழிப்பைத் தரும் மகாலட்சுமிக்கு பல பெயர்கள் உண்டு. இன்று நாம் நவீனமாக சூட்டும் பெயர்கள் இவளது பெயர்களேயாகும். ஹரிணி, வசுந்தரா, ஹேமா, ஐஸ்வர்யா, கமலா, விஜயா, ஜெயா ஆகிய பெயர்கள் மகாலட்சுமிக்கு உரியவையே.

திருமகளை மயிலாகவும் போற்றுகின்றனர். மயிலாப்பூர் கேசவப்பெருமாள் கோயிலில் லட்சுமிக்கு மயூரவல்லி என்று பெயர். மயூரம் என்றால் மயில் என்று பொருள்.

மகாலட்சுமிக்கு “ராஜ்யஸ்ரீ” என்றும் பெயருண்டு. இப்பெயரே ராஜஸ்ரீ என பிற்காலத்தில் திரிந்தது. ராஜ்யங்களுக்கு எல்லாம் அதிபதி லட்சுமி என்பதால் இவளுக்கு இப்பெயர் அமைந்தது. லட்சுமியை மான் வடிவிலும் போற்றுகின்றனர்.

மான் செல்வத்தின் அடையாளமாகும். இதனால்தான், செல்வந்தர்களை “ஸ்ரீமான்” என்று அழைக்கும் பழக்கம் ஏற்பட்டது. மானுக்கு, “ஹரிணி” என்ற பெயரும் உண்டு. ஹரியாகிய மகாவிஷ்ணுவின் மனைவி என்பதால், மகாலட்சுமிக்கு இப்பெயர் அமைந்தது.

வள்ளி மகள் :

ஒருசமயம் லட்சுமி பிராட்டி, கண்ணுவ முனிவரின் சாபத்தால் மான் வடிவை அடைந்தாள். பல இடங்களில் திரிந்தபின், திருமால் யோகமூர்த்தியாக அமர்ந்திருந்த பர்ணசாலைக்கு வந்தாள். அவளைக்கண்ட திருமால், அன்புடன் பார்த்தார். அந்த மான் கருவுற்றது.

கருவுற்ற அவள், வள்ளிக்கிழங்கு எடுத்த குழியில் குழந்தையை இட்டாள். வேடர்கள், அக்குழந்தையை எடுத்து வளர்த்தனர். வள்ளி என்னும் பெயரில் வளர்ந்த அந்தப்பெண் தவம் செய்து, முருகனை மணந்தாள்.

ஆந்தை :

வடநாட்டில் லட்சுமி தேவி, ஆந்தை மீது பவனி வருபவளாகக் குறிக்கப்படுகிறாள். அவளது உருவத்துடன் ஆந்தையின் உருவத்தையும் வரைந்து வழிபடுகின்றனர்.  நேபாள நாட்டில் ஆந்தையை வாகனமாகக் கொண்ட லட்சுமிகோவில் உள்ளது.

- ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com