மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் விறகு விற்ற லீலை அலங்காரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன.
விறகு விற்ற லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர்
விறகு விற்ற லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர்
Published on

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன. 10-ம் நாளான நேற்று ‘விறகு விற்ற லீலை‘ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.

இதையொட்டி மாலை 4.30 மணியளவில் கோவிலுக்குள் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தரேசுவரரும், அம்மனும் எழுந்தருளினார்கள்.

பின்னர் இரவு 8 மணியளவில் விறகு விற்ற லீலை அலங்காரத்தில் சாமியும், அம்மனும் தனித்தனி தங்கச்சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

விறகு விற்ற லீலை புராணம் வருமாறு:-

வரகுணபாண்டியன் மதுரையை ஆட்சி செய்த காலத்தில் ஏமநாதன் எனும் புலவன் பாண்டிய நாட்டுக்கு வந்தான். அவன் ‘யாழ்’ வாசிப்பதில் வல்லவன். அரசன் முன்பு யாழ் மீட்டினான். யாழிசையில் மயங்கிய அரசன் ஏமநாதனை பாராட்டினான். இதனால் ஏமநாதனும், அவனது சீடர்களும் மிகவும் செருக்கடைந்தார்கள். பாண்டிய நாட்டில் என்னுடன் போட்டியிட யாராவது உள்ளார்களா என ஆணவத்துடன் சவால்விட்டான்.

அவனை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வராத காரணத்தால், பாண்டிய அரசவையின் ஆஸ்தான வித்துவானான பாணபத்திரனை அழைத்து ஏமநாதனுடன் போட்டியிடுமாறு அரசன் பணித்தார். தெருவெங்கும் ஏமநாதன் சீடர்களின் யாழிசையை கேட்ட பாணபத்திரன் அவர்களை வெல்லும் வழி தெரியாமல் சோமசுந்தரரை வேண்டி நின்றார். அவரது வேண்டுதலுக்கு இணங்க, இறைவனும் முதியவர் உருவத்தில் விறகு விற்பவராக ஒரு யாழை எடுத்துக்கொண்டு ஏமநாதன் தங்கியிருந்த வீட்டுத்திண்ணையில் வந்து அமர்ந்தார். அங்கு யாழினை வாசித்துக்கொண்டே பாடினார்.

அந்த தெய்வகானத்தை கேட்ட ஏமநாதன் வெளியே வந்து விறகு விற்பவரை நீ யார் என்று கேட்க, அவரும் ‘பாணபத்திரரால் வயோதிகர் என்று ஒதுக்கப்பட்ட ஆள் நான்’ என்று கூறினார்.

ஒதுக்கப்பட்ட ஆளுக்கே இவ்வளவு திறமையா, அப்படியானால் பாணபத்திரரை தன்னால் வெல்ல முடியாது என அஞ்சிய ஏமநாதன் இரவோடு இரவாக மதுரையை விட்டே சென்றான். இவ்வாறு புராணம் கூறுகிறது.

11-ம் நாள் திருவிழாவான இன்று (திங்கட்கிழமை) ‘சப்தாவர்ணச்சப்பர லீலை’ அலங்காரத்தில் சிவபெருமான் காட்சி அளிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com