

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன. 6-ம் நாளான நேற்று ‘பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை’ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர். பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை புராணம் வருமாறு:-
குலோத்துங்க பாண்டியன் காலத்தில் பாணன் என்ற ஒரு வயது முதிர்ந்த வாள்வித்தை ஆசிரியர் வாழ்ந்து வந்தார். அவருடைய சீடர்களில் சித்தன் என்பவன் மிகவும் தீய குணங்கள் கொண்டவன். அவன் பயிற்சி முடித்து சென்று பிறகு அவனும் ஒரு பயிற்சி பள்ளியை அமைத்தான். பின்னர் அவன் தனக்கு பாடம் கற்றுக் கொடுத்த ஆசிரியரிடம் பயின்ற மாணவர்களையெல்லாம் தன் பயிற்சி பள்ளிக்கு அழைத்துக் கொண்டான். அது மட்டுமில்லாமல் ஆசிரியரின் மனைவியிடமும் தவறாக நடக்க முயன்றான். இதனால் வேதனை அடைந்த ஆசிரியரின் மனைவி சோமசுந்தரரிடம் முறையிட்டாள்.
இறைவனும் ஆசிரியர் வேடம் தாங்கி சென்று சித்தனை வாள் போருக்கு அழைத்தார். அங்கு ஆசிரியரின் மனைவியை நினைத்த நெஞ்சையும், பேசிய நாக்கையும், அந்த பெண்ணை தொட்ட கைகளையும், அவரை கண்ட கண்களையும் காத்துக் கொள் என்று கூறி ஒவ்வொரு அங்கமாக வெட்டினார். இறுதியில் அவன் தலையையும் வெட்டிக் கொன்றார். இந்த செய்தினை அறிந்த குலோத்துங்க பாண்டியன் ஆசிரியருக்கு தக்க மரியாதைகள் செய்து கவுரவித்தார்.
இவ்வாறு புராணம் கூறுகிறது.
இன்று(வியாழக்கிழமை) வளையல் விற்ற லீலை அலங்காரத்தில் சிவபெருமான் காட்சி அளிக்கிறார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று இரவு 6.40 மணி முதல் 7.04 மணிக்குள் சாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.