

அழகர்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது சித்திரை பெருந்திருவிழாவாகும். இந்த விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி காலை 8.15 மணிக்கு கொட்டகை முகூர்த்தத்துடன் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் தொடங்குகிறது. 28-ந்தேதி மாலை 4.45 மணிக்கு அழகர்கோவில் கொண்டப்பநாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் தங்கபல்லக்கில் மதுரைக்கு புறப்படுகிறார். மறுநாள் 29-ந்தேதி அதிகாலை மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெறுகிறது. 30-ந்தேதி சித்ரா பவுர்ணமி அன்று அதிகாலை 5.45 மணிக்கு தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
மேமாதம் 1-ந்தேதி தேனூர் மண்டபத்தில் மண்டூகமகரிஷிக்கு மோட்சம் தரும் நிகழ்வும், அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரமும் நடக்கிறது. 2-ந்தேதி அதிகாலை மோகினி அவதாரத்தில் கள்ளழகர் காட்சி தருகிறார். அன்று மதியம் ராஜாங்க திருக்கோலத்தில் கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலித்து, இரவு சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளுகிறார்.
தொடர்ந்து 3-ந்தேதி வழிநெடுகிலும் உள்ள திருக்கண், அப்பன்திருப்பதியில் உள்ள மண்டபங்களுக்கு சென்று, 4-ந்தேதி காலை அழகர்கோவில் கள்ளழகர் இருப்பிடம் சென்றடைகிறார். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து உள்பட திருக்கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்