குருவித்துறை குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழா 2-ந்தேதி நடக்கிறது

சோழவந்தானை அடுத்த குருவித்துறை குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழா வருகிற 2-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி கோவிலில் பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன.
குருவித்துறை குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழா 2-ந்தேதி நடக்கிறது
Published on

சோழவந்தானை அடுத்த குருவித்துறை வைகையாற்றங் கரையோரம் வரலாற்று சிறப்புமிக்க சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முன்பு தவக்கோலத்தில் குருபகவான் தனிச்சன்னதியில் வீற்றிருக்கிறார். இங்கு ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டும் வருகிற 2-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9.25 மணிக்கு குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதையொட்டி இந்த கோவிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

முன்னதாக நாளை (வியாழக்கிழமை) பட்டர்கள் ரங்கநாதன், ஸ்ரீதர், சடகோபன், ராஜா ஆகியோர் தலைமையில் லட்சார்ச்சனை தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. 2-ந்தேதி காலை 6.00 மணி முதல் பரிகார மகா யாகசாலை தொடங்குகிறது. அதைதொடர்ந்து காலை 9.25 மணியளவில் குருபெயர்ச்சி நடைபெற்று திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

குரு பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளான ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் தங்கள் பெயர் மற்றும் நட்சத்திரங்களுக்கு பரிகார பூஜைகள் செய்து கொள்ளலாம். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) சக்கரையம்மாள், தக்கார் ஞானசேகரன், கோவில் பணியாளர்கள் வெங்கடேசன், கிருஷ்ணன், நாகராஜ், மணி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

லட்சார்ச்சனை கட்டணம் ரூ. 300 செலுத்துபவர்களுக்கு 2 கிராம் வெள்ளி டாலரும், பிரசாதங்களும் வழங்கப்படும். இதே போல் ரூ. 100 செலுத்துபவர்களுக்கு பிரசாதங்கள் மட்டும் வழங்கப்படுகிறது. லட்சார்ச்சனை டிக்கெட் வேண்டுபவர்கள் கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இதே போல் சோழவந்தான் பிரளயநாதர் (சிவன்) கோவிலில் வருகிற 2-ந்தேதி குருதெட்சிணாமூர்த்தி சன்னதி முன்பாக மகாயாகமும், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்களும் நடைபெறுகிறது. விசேஷமான இந்த கோவிலில் ஸ்தல மூர்த்தியான சனீஸ்வரலிங்கமும், பிரளயநாதர் ராகுவுக்கு அதிபதியாகவும், ஸ்தல நட்சத்திரம் விசாகமும், அது குருவுக்கு உகந்ததுமாக அமையப்பெற்றது சிறப்பம்சமாகும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொழிலதிபர் மணி, பள்ளித் தாளாளர் மருதுபாண்டியன், கோயில் தக்கார் லதா, கணக்கர் பூபதி உள்பட பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com