

கோரக்கச் சித்தர் ஆசிரமத்தை எந்த நாள்களிலும் சென்று வழிபடலாம். ஒவ்வொரு நாளும் மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன. குருவாரம் எனப்படும் வியாழக்கிழமை (கோரக்கர் பிறந்த நாள் என்பர்) அன்று வழிபடுவது பெருஞ்சிறப்பு. பவுர்ணமி அன்று வழிபடுதல் ஒரு மாதம் வழிபட்ட பயனையும், ஐப்பசிப்பரணி வழிபாடு ஓராண்டு வழிபட்ட பயனையும் தரவல்லன.
கோயில் நடை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். பக்தர்கள் அபிஷேகத் திரவியங்களையும், அன்னதானத்திற்கான அரிசி, பருப்பு, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் முதலியவற்றோடு, பணக்காணிக்கையும் செலுத்தி வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளில் ஆசிரமத்துக்கு வந்து வழிபடுவோர் தொகை 100 மடங்கு அதிகரித்திருக்கிறது. தொடர்ந்து 13 பவுர்ணமிகள் வழிபட்டால் நினைத்த காரியம் யாவற்றையும் கோரக்கர் முற்றாக நிறைவேற்றித் தருகிறார்.
கோரக்கச் சித்தரின் அருளால் இளம் பெண்களுக்கு திருமணம் கூடி வருகிறது. திருமணமாகிப் பல்லாண்டுகள் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்குப் பிள்ளைப்பேறு வாய்க்கிறது.
புற்றுநோய் முதலிய அனைத்துக் கொடிய நோய்களில் இருந்து நீங்கி நலம் பெற்றவர்கள் நூற்றுக் கணக்கானவர்கள். மன வளர்ச்சிக் குன்றியோர் வந்து சென்றால் மன நலம பெறுகிறார்கள். களவுபோன பொருள்கள் திரும்பக் கிடைக்கின்றன. வஞ்சகமாகப் பிறர் ஏமாற்றிய உடமைகள் மீண்டும் வந்து அடைகின்றன.
இரவு வழங்கப்படும் அன்னக்காவடி கோயில் பிரசாதம் எல்லா நோய்களுக்கும் மருந்தாகிறது. தடைப்பட்ட குழந்தைகளின் கல்வி வளர்ச்சிச் சிறந்து ஓங்குகின்றது. ககன மார்க்கப் பயணம் மேற்கொண்ட சித்தரை வணங்கிப் புறப்பட்டால், தொலை தூர நாடுகளுக்கான பயணங்கள் சிறப்பதோடு, செல்வ வளமும் கூடுகிறது.
வியாழக்கிழமைகளில் காலை முதல் உபவாசம் இருந்து இரவு வழிபட்டு, பிரசாதம் உண்டு, கோயில் வளாகத்தில் தங்கி உறங்கி, விடியல் நீராடி வழிட்டுத் திரும்ப மனக்கவலைகள் முற்றாக அகலுகின்றன. சித்தரின் திருவுருவப் படத்தை வீடுகளில் வைத்துப் பூசிப்பதும், பயண நேரங்களில் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு பயணிப்பதும் நன்மை தருவன. இயல், இசை, நாடகக் கலை வல்லுநர்கள் வழிபட்டுப் புதிய வாய்ப்புகளைப் பெற்று உயர்கிறார்கள். சிவாலயங்களில் மட்டுமே காணப்படும் சித்தர் ஆசிரம வளாகத்தில் வட திருச்சுற்றில் வளர்ந்துள்ள நாகலிங்க மரத்தை மும்முறை வலம் வந்தால் சிவனருளும், குருவருளும் ஒரு சேர வாய்க்கின்றன.
கருவறையில் சிவன், உமை, சித்தர் திருவடிகளுக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபடுவது குடும்பப் பிரச்சினைகளை நீக்குவதோடு, வெளியில் சொல்ல முடியாத கவலைகளையும் அகற்றத் துணையாகிறது. நூற்றுக்கணக்கான துறவிகள் உலக நாடுகள் முழுவதிலும் இருந்து கோரக்க நாதரை வழிபட்டு ஞான விரிவு பெறுகிறார்கள். ஐப்பசிப் பரணி இரவில் துறவியர் கூட்டத்தில் கலந்து தாமும் அவருள் ஒருவராகத் தக்க ஞானியர்க்குக் கோரக்கர் திருக்காட்சி நல்கியுள்ளார். இன்றும் நல்கி வருகிறார். சித்த மூர்த்திகளுக்கு உலகெங்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.