

உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே உலக புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் சித்திரை பெருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி அடுத்த மாதம் 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சாகை வார்த்தலுடன் விழா தொடங்குகிறது. மறுநாள் (15-ந் தேதி) மாலை பந்தலடியில் காப்பு கட்டுதல் நடைபெறுகிறது.
தொடர்ந்து 27-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை கம்பம் நிறுத்துதலுடன் உள்ளூர் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்வார்கள். 28-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) சுவாமி திருக்கண் திறத்தலுடன் வெளியூர், வெளி மாநிலத்தில் இருந்து வரும் திருநங்கைகள் தாலி கட்டிக்கொண்டு இரவு கும்மி அடித்து, ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
அதனைத்தொடர்ந்து 29-ந் தேதி (புதன்கிழமை) காலை திருத்தேர் வடம் பிடித்து இழுத்து பொது மக்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். பின்னர் அங்கிருந்து தேர் புறப்பட்டு தெய்வநாயக செட்டியார் பந்தலடையை அடைந்த பின்னர் அங்கு புளிசாதம் படைத்து திருநங்கைகள் கணவரை நினைத்து ஒப்பாரி வைத்து அழுது பூசாரி கையால் வளையல் போட்டு தாலி அனைத்தையும் அறுத்து விட்டு அருகில் உள்ள கிணறு, குளம் ஆகிய இடங்களில் குளித்துவிட்டு வெள்ளை புடவை அணிந்து கொண்டு அவரவர் வீட்டிற்கு செல்வார்கள்.
அதனைத்தொடர்ந்து மே மாதம் 1-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகம், மஞ்சள் நீராடுதல் நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது.