ஆனி திருமஞ்சன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி, தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
நடராஜர் கோவில் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க நடராஜர், சிவகாமிசுந்தரி தேர்கள் அசைந்தாடியபடி வந்த காட்சி.
நடராஜர் கோவில் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க நடராஜர், சிவகாமிசுந்தரி தேர்கள் அசைந்தாடியபடி வந்த காட்சி.
Published on

பல்வேறு சிறப்புமிக்க நடராஜர் கோவிலில் ஆனந்த நடராஜமூர்த்திக்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை, ஆவணி, புரட்டாசி, மாசி, மார்கழி, ஆனி ஆகிய மாதங்களில் மகா அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் சித்திரை, ஆவணி, புரட்டாசி, மாசி ஆகிய மாதங்களில் சித்சபையிலும், மார்கழி, ஆனி ஆகிய மாதங்களில் ராஜசபையிலும் ஆனந்த நடராஜருக்கு மகா அபிஷேகங்கள் நடைபெறும்.

இதில் ஆனி, மார்கழி மாதம் நடைபெறும் மகாஅபிஷேகம் சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும், மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தியே, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார். மறுநாள் ஆயிரங்கால் மண்டபம் என்னும் ராஜசபையில் மூலவர் ஆனந்த நடராஜர், அம்பாளுடன் எழுந்தருள்வார். அங்கு அவருக்கு மகாஅபிஷேகம் நடைபெறும்.

அதன்படி, இந்தாண்டு ஆனி திருமஞ்சன விழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் கடந்த 25-ந் தேதி இரவு தெருவடைச்சான் உற்சவம் நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று ஆனிதிருமஞ்சன தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, மூலவருக்கு ரகசிய பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து, சிவகாமசுந்தரி சமேத ஆனந்தநடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. அதிகாலை 6.30 மணிக்கு மூலவராகிய ஆனந்தநடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் சித்சபையில் இருந்து கனக சபைக்கு எழுந்தருளினர்.

பின்னர் உற்சவ ஆச்சாரியார் தலைமையில் சாமி புறப்பாடாகி, கோவில் உட்பிரகார வலம் வந்து, தட்சணாமூர்த்தி சன்னதி முன்பு எழுந்தருளினர். அங்கு நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் முன்னும், பின்னுமாக நடனமாடியவாறு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.


தேர் வரும் பாதையில் பெண்கள் கோலமிட்ட காட்சி.

இதனை தொடர்ந்து, 21 படிகள் வழியாக கீழவீதி தேர் மண்டபத்துக்கு சுவாமி வந்தடைந்தது. தேர் மண்டபத்தில் பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் கோவில் பொது தீட்சிதர்கள் முன்னிலையில் மண்டகபடி பூஜை நடைபெற்றது. பின்னர், காலை 7.10 மணியளவில் ஆனந்தநடராஜ மூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். முதலில் விநாயகர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதனை தொடர்ந்து, சுப்பிரமணியர் தேர் இழுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, காலை 8.10 மணிக்கு மூலவர் நடராஜர் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். அப்போது, பக்தர்கள் ஓம் நமச்சிவாய, சிவாய நம என்ற பக்தி கோஷங்களை எழுப்பினர்.

சிவகாமசுந்தரி மற்றும் சண்டிகேஸ்வரர் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதியில் 5 தேர்களும் வலம் வந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்தது.

தேர் நிலைக்கு வந்தவுடன் ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சாமி எழுந்தருளினார். பின்னர், அங்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.

ஆனி திருமஞ்சன மகா தரிசன நாளான இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை மூலவர் ஆனந்தநடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர், காலை 10 மணிக்கு ரகசிய பூஜை நடக்கிறது. இதையடுத்து, திருஆபரண அலங்காரமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடக்கிறது. மதியம் 2 மணிக்கு மேல் மகாதரிசன நிகழ்வு நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதியுலா நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com