

நவகிரக தலத்தில் சனீஸ்வரனுக்கு என்று பிரசித்தி பெற்ற திருத்தலம், காரைக்காலில் உள்ள திருநள்ளாறு. அங்குள்ள இறைவன் தர்பாரண்யேஸ்வரஸ்வாமியை நளமஹாராஜன் வழிபாடு செய்து சனியின் தாக்கத்தில் இருந்து விடுபட்டார்.
திருநள்ளாறு, குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் போன்றவை தமிழகத்தில் சனிக்கென்று உள்ள கோவில்களாகும்.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலும் ஒன்பது நவகிரகங்களுக்கென்று தனித்தனியே கோவில்கள் உண்டு. அவ்வகையில் கர்மபலனை அளிக்கும் சனீஸ்வரனுக்கு உரிய தலமாக, பல்லாவரத்தின் அருகே பொழிச்சலூரில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோவில் விளங்குகிறது. தொண்டை மண்டலத்தில் உள்ள இக்கோவில் சோழர் காலத்தைச் சேர்ந்தது. இக்கோவில் கருவறையின் கோபுர அமைப்பு சோழர்காலத்து கட்டிட அமைப்பை இன்றும் மிளிரச்செய்கிறது.
இறைவன்: அகதீஸ்வரர்
இறைவி: ஆனந்தவல்லி
தல விருட்சம்: மாமரம்
தீர்த்தம்: சனி தீர்த்தம்
சிவன் பார்வதி இருவருக்கும் கைலாய மலையில் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு முப்பது முக்கோடி தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் என உலகத்து உயிர்கள் அனைவரும் கூடியிருந்தனர். அப்போது பாரம் தாங்காமல் பூமி சமநிலையை இழந்தது. சிவபெருமான் பூமியைச் சமநிலைப்படுத்துவதற்காக அகத்தியரை தெற்கு நோக்கிச் செல்லுமாறு கட்டளையிட்டார்.
இறைவனின் கட்டளைப்படி, பூமியின் எடையைச் சமநிலைப்படுத்துவதற்காக அகத்தியர் தென்பகுதிக்கு வந்தார். அவர் பொதிகை மலைகளுக்குச் செல்லும் வழியில், இங்கே சுயம்பு லிங்கம் ஒன்றை செய்து சிவபெருமானை வழிபட்டார். பல ஆண்டுகள் இங்கேயே தங்கியிருந்து சிவனை வழிபட்டார் என்று தலபுராணம் கூறுகிறது.
இத்தலத்தில் இறைவன் தந்த வரத்தின் படி அகத்தியர், சிவன் பார்வதி திருக்கல்யாண தோற்றத்தை கண்டு தரிசித்தார்.
சனீஸ்வரன் தான் பெற்ற தோஷத்தை போக்கிக்கொள்ள சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். அவர் தவத்தில் தோன்றிய சிவன், இத்தலத்திற்கு வந்து தன்னை வழிபடுமாறு கூறினார். சிவனின் வழிகாட்டுதலின் படி சனீஸ்வரப்பெருமான் இத்தலத்திற்கு வந்து ஒரு குளத்தை உருவாக்கி சிவபெருமானை வழிபட்டு நலம் பெற்றார். மேலும் சிவபெருமானின் அருளின்படி சனீஸ்வரர் இங்கு மங்கள சனீஸ்வரராக காட்சி தருகிறார். இக்கோவில் வடதிருநள்ளாறு என்றும் அழைக்கப்படுகிறது.
இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவர் கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். இக்கோவிலில் சனிபகவானுக்கென்று தனிச் சன்னதி உண்டு. மூலவரான சிவபெருமானை நோக்கியபடி, சனிபகவான் மேற்கு நோக்கி காட்சிபுரிகிறார். அத்துடன் விநாயகர், ஆஞ்சநேயர், போன்ற பரிவார தெய்வங்களும் இக்கோவிலில் இடம்பெற்றுள்ளனர்.
இக்கோவில் சனிபகவானின் பரிகாரத் தலமாக விளங்குகிறது. மேலும் ராகு மற்றும் கேதுவின் பரிகாரத்தலமாகவும் உள்ளது. ராகு காலம், பிரதோஷம், ஆருத்திரா தரிசனம், சிவராத்திரி, சனிப்பெயர்ச்சி, கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. சனிக்கிழமைகளில் சனீஸ்வரனுக்கு எள் தீபமிட்டு வழிபாடு செய்வது நலம் தரும்.
பல்லாவரம் ரெயில் நிலையத்திலிருந்து குன்றத்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
காலை 5:45 மணி முதல் மதியம் 12:00 மணி வரை
மாலை4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை