

தஞ்சை பெரிய கோயில் மகாமண்டபத்திற்கும் ராஜராஜன் திருவாயிலுக்கும் இடையே அமைந்துள்ள உயரமான மேடையோடு கூடிய மண்டபத்தில் 12 அடி உயரமுடைய மிகப்பெரிய நந்தி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நந்தி ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்டதாகும். இந்த நந்தியும், மண்டபமும் நாயக்க மன்னர்களின் கொடைகளாம். ராஜராஜன் வைத்த நந்தி, ராஜராஜன் திருவாயிலுக்கு வெளியே இருந்திருக்கலாம் என்றும், அது தற்போது வராகி அம்மன் கோயிலுக்கு அருகே இருப்பதாகும் என்று கருதப்படுகிறது.
இந்த நந்தி மண்டபம் சுமார் 5 அடி உயரமுடைய மேடை மீது 16 தூண்கள் கொண்டு எடுக்கப்பெற்றுள்ளது. மேற்கூரை ஓரே மட்டமாக இல்லாமல் நடு அங்கணம் உயரமாகவும் மற்ற இரு அங்கணங்களும் தாழ்வாகவும் உள்ளன. ஈசனாரை நோக்கிய வண்ணம் படுத்த நிலையிலுள்ள இந்த நந்தி உருவால் பெரிதெனினும் எழிலால் சோழர்களின் படைப்பவைவிடச் சற்றுக் குறைவுடையதாகவே திகழ்கின்றது.
இம்மண்டபத்து நடுஅங்கணத்தின் இரண்டு தூண்களில் தஞ்சை நாயக்க மன்னர்கள் இருவரது உருவச்சிலைகள் உள்ளன. தலையில் வளைவு பெற்ற குல்லாய் அணிந்து, நாயக்க மன்னர்களுக்குரிய உடையலங்காரங்களுடன் கைகூப்பித் தொழுகின்ற நிலையில் இச் சிலைகள் உள்ளன. இச்சிலைகள் சற்றுச் சிதைவு பெற்றுள்ளன. ஆறு தூண்கள் பாயும் யாளியின் முதுகில் வீரனைப் பெற்ற யாளித்தூண்களாக உள்ளன. மற்ற எட்டும் சதருத் தூண்களாகப் பல்வேறு சிற்பங்களைத் தாங்கி நிற்கின்றன.
நந்தி மண்டபத்தைக் கட்டியபோது இதை மகாமண்டபத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பெற்றுள்ளன. ஆனால் அது முடிக்கப் பெறாமல் தொடக்கப்பணிகளோடு நின்று விட்டது. இவ்விரண்டு மண்டபங்களுக்கிடையே தூண்கள் நிறுத்த அடித்தளமிட்டுள்ளனர். கொடி கம்பம் அருகே ஒரு தூண்மட்டும் நிறுத்தப் பெற்றுள்ளது. அதில் முடிந்த கொண்டை, கூப்பிய கரங்களோடு திகழும் ஒரு நாயக்க மன்னரின் சிலை உள்ளது. இது ரகுநாத நாயக்கர் அல்லது அச்சு தப்ப நாயக்கரது சிலையாக இருந்தல் கூடும். நந்தி மண்டபத்திலுள்ள சிலைகளுள் ஓன்றினை விசயராகவ நாயக்கரது உருவமாகவும், மற்றொன்றை ரகுநாதர் அல்லது ராமபத்ர நாயக்கரது உருவமாகவும் கொள்ளலாம்.
பெரிய கோயிலில் செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்ட கல்வெட்டு ஓன்றுள்ளது. இவர்கள் காலத்தில்தான் ராஜ கோபுரத் திருப்பணி நிகழ்ந்துள்ளது என்பதனைக் கோபுரத்திலுள்ள செவ்வப்ப நாயக்கரின் உருவச்சிலையாலும் மற்ற சுதை உருவங்களாலும் அறியலாம். அப்போது இந்தப் பெரிய நந்தியும் இடம் பெற்றிருக்கலாம்.
ஒவ்வொரு பிரதோஷ நாளன்றும் இந்த நந்திக்கு நடக்கும் அபிஷேகங்களை காண கோடி கண் வேண்டும். பொங்கல் உள்ளிட்ட முக்கிய நாட்களில் நந்திக்கு செய்யப்படும் பூ மற்றும் காய்கறி அலங்காரங்களும் கண்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும்.