தஞ்சை பெரிய கோவில் அமைப்பு

தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கில் உள்ள கோபுரங்கள் எல்லாம் ஆதியாய் (முதன்மையாய்) நிற்பது தஞ்சை கோபுரம் ஒன்றேயாகும். இக்கோபுரத்தை நிழல் சாயா கோபுரமென்று உலகம் பாராட்டுகிறது.
தஞ்சை பெரிய கோவில் அமைப்பு
தஞ்சை பெரிய கோவில் அமைப்பு
Published on

பெரிய கோவில் தஞ்சை நகரின் தென்மேற்கில் அமைந்துள்ளது. கோவிலுக்கு மூன்று வாசல்கள் உண்டு. ராஜராஜன் திருவாயில் கேரளாந்தகன் திருவாயில், திருவணுக்கன் திருவாயில் என்பனவே அவ் வாயில்களின் பெயர்கள். இவ்வாயில்களின் மேல் 90 அடி உயரம் உள்ள கோபுரங்கள் அமைந்துள்ளன. அதிக அகலமும் குறைந்த உயரமும் உடையவை.

இக்கோவில் அடி முதல் முடி வரை கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. ஆகவே, இக்கோவில் கற்றளி என்ற பெயரையும் பெறும். அனைத்திலும் பெருமையுற் றிருப்பதால் இதற்கு  பெரியகோவில் என்ற பெயரே நிலைத்து விட்டது. இப்பெரிய கோவிலில் சிற்ப வேலைப்பாடுகளையும், ஓவிய வேலைப்பாடுகளையும் ஒரு சேரக்காணலாம்.

இரண்டாவது வாசலின் உட்புறக் காட்சி: இவ்வாசலுக்கு கதவுகளும் உண்டு. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பரந்து பட்ட வெட்ட வெளி காட்சி அளிக்கும். இவ்வெளியின் அகலம் 220 அடிகள். நீளம் 500 அடிகள் ஆகும். இவ்வெளியைச் சுற்றி வந்தால் யாகசாலை, பாக சாலை (சமைக்கும் சாலை) பண்ட சாலை முதலியவற்றை காணலாம்.

லிங்க வடிவில் அமைந்துள்ள ஒன்பது கோள்கள், 108 லிங்கங்கள், எட்டுத்திக்குப் பாலகர் உருவங்கள் தோன்றும். சுவரில் 64 திருவிளையாடல் சிற்பங்கள் சிறப்புடன் விளங்குகின்றன. பெருவெளியில் நந்தி மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்ட பம் உயரமான மேடை மேல் அமைந்துள்ளது. மண்டபத்தில் பிரமாண்ட நந்தியின் உருவம் பொருத்தப்பட் டுள்ளது. இவ்வுருவத் துக்குரிய கல்லை பச்சை மலையிலிருந்து கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

மேடையில் அமைந்த நந்தி: இந்நந்தி, பெருவுடையாரின் எதிரில் அமைந்துள்ளது. ஒரே கல்லால் செதுக்கப் பட்டுள்ளது. அக்கல் கருங்கல்லின்றி வெண் கல்லல்ல. நந்தியின் உயரம் 12 அடி. நீளம் 19.5 அடி. அகலம் 8.5 அடி. அழகான இந்நந்தியின் வடிவத்தைச் செதுக்கிய சிற்பியின் திறன் பாராட்டுக்குரியதாகும். இதன் அருகில் செல் வோரை அச்சுறுத்துவது போல் தோன்றுகிறது. நந்திக்கிருக்க வேண்டிய உறுப்புக்களை அளவு அறிந்து அமைதியோடு வளவளப்பாக செதுக்கி வைத்துள்ளார் சிற்பி. நந்தி அருகில் செல்வோர் எவரும் விரைவில் அதை விட்டுப் பெயர்வது அரிதே ஆகும். கண்டோரை இழுக்கும் ஆற்றலுடன் காளை மாடு அமைந்துள்ளது. நந்தியும், அது பொருந்திய மேடையும் கோவிலுக்கே பெருமை தருகின்றன.

வாயில் காவலரும் மண்டபங்களும்: பெருவுடையார் திருக்கோவிலின் வாயிலில் தெற்கும் வடக்குமாகப் படிகள் அமைந்துள்ளன. இரு பக்கங்களில் கணபதி, துர்க்கை, பைரவர், சனிபகவான் தோற்றமளிக்கின்றனர். வாயிற் படிக்கு அருகில் அருகில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வழி காப்பாளர்கள் சிலைகளும் உள்ளன. இச்சிலைகளின் உயரம் 18 அடி. அகலம் 8 அடி. காவலருக்கு இருக்க வேண்டிய தோற்றத்தில் கற்சிலைகள் காணப்படுகின்றன. வழி காப்பாளர் இசைவு பெற்று உள்ளே சென்றால், பல மண்டபங்கள், அவைகள் வாத்திய மண்டபம், நர்த்தன மண்டபம், தியாகராஜர் கோவில், உள்ளடக்கிய மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் என்ற பெயர்களைப் பெற்றுள்ளன. இம்மண்டபங்களை அடுத்து கருவறையும் உள்ளது.

கருவறையும் பெருவுடையாரும்: கருவறை பெரியதாகவும், சதுரமாகவும் அமைந்துள்ளது. இதன் உட்புறச் சுவரில் ராஜ ராஜன் காலத்து, ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவைகள் இன்றைக்கும் தெளி வோடு காணப்படுகின்றன. வெளிச் சுவரில் பல தெய்வக் கோவில்கள் வரையப்பட்டுள்ளன. கருவறையில் பெரு வுடையார் சிவலிங்கத் திருமேனியராக எழுந் தருளியுள்ளார். கருவறையில் பொருந்தியுள்ள பெருவுடையாராகிய சிவலிங்கம் மிகவும் பெரியது. இதுபோன்று வேறொரு பெரிய லிங்கம் வேறு எங்கும் இல்லை.

சத்தியைக் குறிக்கும் லிங்கத்தின் அடிப்பீடத்தின் (ஆவுடையாரின்) சுற்றளவு 54 அடிகள். உயரம் 6 அடிகள் (12 என்று கூறு வாரும் உள்ளன.) இந்த லிங்கத்துக்குரிய கல்லை நர்மதை ஆற்றங்கரையில் இருந்து கொண்டு வந்ததாக கூறுகின்றனர். லிங்கம் நிலைத்த வரலாறு: ராஜராஜ சோழன் யாதொரு குறையின்றி முறையு டன் கோவிலைக் கட்டி முடித்து விட்டான். கருவறையில் வைக்க வேண்டிய லிங்கத்தையும் அறிவு, ஆற்றல், அமைதி, ஒழுக்கம் முதலியற்றில் சிறிதும் மாறாச் சிற்பிகளைக் கொண்டு நன்கு அமைத்துக் கொண்டான்.

ஆதி சைவர்களைக் கொண்டு மருந்து சாத்தி பிணித்தபோது (பந்தனம் செய்தபோது) மருந்து இளகி விட்டதால் லிங்கம் பீடத்தில் சிறிதும் பொருந்தவில்லை. மன்னன் மதி மயங்கி நின்றான். அது சமயம் கருவூர்த்தேவர் ஈண்டு வந்தால் செயல் நிறைவுறும் என்று வானின்று ஓர் ஒலி வந்தது. அதை கேட்ட சோழ மன்னன் தெளிவு பெற்றான். தேவரைத் தருவிப்பது எப்படி? என்று எண்ணிக் கொண்டிருந்தான். அது காலை, அங்கிருந்த போகநாதர் என்னும் ஞானியார் மாற்று வேடந்தாங்கி மன்னன் முன் வந்து நின்றார்.

சோழப் பெருவேந்தனே! சோர்வு கொள்ளற்க! கருவூர்த் தேவரை யாமே தருவிப் போம் என்று போகநாதர் உறுதி அளித்தார். யோகி யார் தன் கருத்தைச் சீட்டில் வரைந்தார். அதைக் காகத்தின் காலில் கட்டி பொதிகைக்கு அனுப்பினார். சீட்டைக் கண்ட கருவூர்த்தேவர் தஞ்சை வந்தடைந்தார். நிலை உணர்ந்த தேவர் கோவிலுக்குள் புகுந்தார். இறைவனைச் சிந்தித்தார். அறிவிலும் ஒழுக்கத்தில் மிக்க அந்தணர்கள் பலரை உடன் வைத்துக் கொண்டார். விதிமுறைப்படி மறைகளை ஓதினார். சிவலிங்கத்தை ஆவுடையாருடன் செவ்வனே நிறுத்திப் பொருத்தினார். லிங்கம் நிலைத்து விட்டது. சோழன் பெருமகிழ்வெய்தினார். மற்றையோரும் வியப்பில் ஆழ்ந்தனர். இது கருவூர்ப் புராணக் கருத்தாகும்.

லிங்கத்திற்கு ராஜராஜசேஸ்வர முடையார், ஆடவல்லான், தட்சண மேரு விடங்கர், பெருவுடையார் என்ற நான்கு திருப் பெயர் களைச் சூட்டினர்.

கருவறைக்கு மேல் அமைந்துள்ள விமானம் கோபுரம் முதலியவற்றின் சிறப்பியல் புகள்: கருவறையின் மீதுள்ள விமானமும் கோபுரமும் மிகப்பெரியன. கோபுர நிழல் கீழே விழுந்ததை எவரம் பார்த்ததில்லை. இது சிற்பியின் நுண்ணறிவையும், கைவினைகளையும் சிறப்புறக் காட்டுகிறது. கோவிலுக்கு வரும் பெருமை எல்லாம் சிற்பக் கலை யிலும், கட்டிட கலையிலும், ஓவியக்கலையிலும் வல்ல அறிஞர் பெருமக்களையே சாரும். அம்மை யப்பர் வீற்றிருக்கும் கயியை மலைக்கு உத்தரமேரு என்று பெயர். பெருவுடையாரும் - பெரிய நாயகியும் அமைந்துள்ள இப்பெரிய கோவிலின் கோபுரத்திற்குத் தட்சின மேரு என்று பெயர். கோபுரம் நாற்கோண வடிவில் அமைந்துள்ளது. 14 தளங் களை உடையது. 216 அடி உயரம் கொண்டது. கோபுரம் கழுத்து (கிரீவம்) தலை (சிகரம்) கலசம் (ஸ்தூபி) ஆகிய மூன்றையும் பெற்றுள்ளது.

14 தளங்களும் சதுர வடிவத்தோடு மேல் செல்லச் செல்ல குறுகிக் கொண்டே போகின்றன. தளங்களில் அறைகளும் (கூடம்) அறைவழியாக ஏறிச் செல்ல வழிகளும் (சாலையும்) உள்ளன. 14 தளங்களுக்கு மேலே பிரம்மரந்திர தளம் ஒன்றுண்டு. இது ஒரே கல்லால் ஆனது. 80 டன் நிறையுடையது. இதைக் கோபுரத்தின் மேல் ஏற்ற நெடுந்தூரம் வரை சாரங்கட்டியதாக வரலாறு கூறுகிறது. சாரம் (மேடு) அமைத்த பகுதிக்குச் சாரைமேடு என்ற பெயர் இன்றும் உள்ளதாகக் கூறுகின்றனர். பிரம்ம மந்திரத்தின் முடியில் கலசம் (ஸ்தூபி) பொருத்தப்பட்டுள் ளது. கலசத்திற்குப் பொன்தகடு வேயப்பட் டுள்ளது. தளங்களின் கழுத்தும், உச்சியும் வட்டமாகவே இருக்கின்றன. ஆனால் கலசம் மட்டும் எண்கோண வடிவம் பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கில் உள்ள கோபுரங்கள் எல்லாம் ஆதியாய் (முதன்மையாய்) நிற்பது தஞ்சை கோபுரம் ஒன்றே யாகும். இக்கோபுரத்தை நிழல் சாயா கோபுரமென்று உலகம் பாராட்டுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com