

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது பண்ணாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
பண்ணாரியம்மன கோவில் குண்டம் விழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம். மிகவும் பிரசித்து பெற்ற குண்டம் விழாவில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கர்நாடகா மாநிலத்தின் இருந்தும் பக்தர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், போலீசார், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் வந்து குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்துவார்கள். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்க்கப்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழா தொடங்கியவுடன் பண்ணாரி மாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன், ஆகிய உற்சவர்கள் சப்பரத்தில் எழுந்தருளி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து ஊர் மற்றும் கிராமங்களுக்குச் சென்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் திருவீதி உலா நடந்து வருகிறது.
இதையொட்டி நித்திய பூஜை மற்றும் பீனாட்சி வாத்தியங்களுடன் பண்ணாரியம்மன் மற்றும் நருகு மாரியம்மன் சப்பரம் சிக்கரசம் பாளையம் அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து அம்மன் சப்பரம் சிக்கரசம் பாளையத்தில் திருவீதி உலா நடந்தது.
இதில் கிராம பகுதிகளில் பக்தர்கள் காத்து நின்று அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அம்மன் சப்பரத்தின் முன்பு சாலையில் அங்கப் பிரதட்சனை செய்து வழிபட்டனர்.
இதையடுத்து தொடர்ந்து கிராம பகுதிகளில் திரு வீதி சென்ற அம்மனுக்கு மஞ்சள் நீர் ஊற்றி பூஜைகள் செய்து அம்மா... தாயே.. என வழிபாடு நடத்தினர்.
இதை தொடர்ந்து அம்மன் சப்பரம் இக்கரை நெகமம் புதூரில் எழுந்த ருளினார். அங்கு புதூர் மாரியம்மன் கோவிலில் இரவு தங்க வைக்கப்பட்டது.
இந்த நிலையில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உற்சவர் பண்ணாரி மாரியம்மன் உடன் சருகு மாரியம்மன் எழுந்தருளி கொத்தமங்கலம் வழியாக நேற்று இரவு பவானி ஆற்றில் பரிசலில் கடந்து வந்து தொட்டம்பாளையம் கிராமத்தை அடைந்தது. அங்கு உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் பண்ணாரி அம்மன் சப்பரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து புறப்பட்ட சப்பரம் ஊருக்குள் திருவீதி உலா வந்தது. இதில் ஊர் மக்கள் சர்பாரத்தில் பண்ணாரி மாரியம்மன் உடன் சருகு மாரியம்மனை கண்டு தேங்காய் உடைத்து தீப ஆராதனை காட்டி ஆராத்தி எடுத்தும் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
முன்னதாக ஒவ்வொரு வீட்டின் முன்பும் மஞ்சள் தண்ணீர் தெளித்தும் ஊருக்குள் செல்லும் அனைத்து வழிகளிலும் தண்ணீரை ஊற்றி சாலையை சுத்தம் செய்து கோலம் போட்டு ஊர் மக்கள் காத்து நின்றனர். நேற்று இரவு தொட்டம்பாளையம் கோவிலில் சப்பரம் தங்கியதைத் தொடர்ந்து பாரம்பரிய பாடல்களை பாடி கோலாட்டம் நடனம் ஆடி கும்மி அடித்து ஊர் மக்கள் அம்மனை வழிபட்டனர்.
இன்று காலை அங்கிருந்து புறப்பட்ட பண்ணாரி மாரியம்மன் சப்பரம் வெள்ளியம்பாளையம் புதூர் கிராமத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
இன்று இரவு இக்கரை தத்த பள்ளியில் இருந்து புறப்படும் பண்ணாரி அம்மன் சப்பரம் பவானி ஆற்றை பரிசலில் கடந்து சென்று அக்கரை தத்தப்பள்ளி ஊரிலுள்ள மாரியம்மன் கோவிலை அடையும், தொடர்ந்து சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று சப்பரத்தில் எழுந்தருளி பண்ணாரி மாரியம்மன் உடன் சருகு மாரியம்மன், ஊர் மக்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
பண்ணாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் உற்சவர்கள் சப்பரத்தில் எழுந்தருளி தொடர்ந்து 7 நாட்கள் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கு சென்று ஊர் மக்களுக்கு அருள்பாலிக்கிறார். அதனைத் தொடர்ந்து பண்ணாரி மாரியம்மன் சப்பரம் கோவிலை வந்து அடையும். தொடர்ந்து அன்று இரவு கோவில் முன்பு திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.