பாலமுருகன் கோவிலில் பக்தர்கள் மிளகாய் கரைசல் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன்

மேல்மலையனூர் அருகே பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி பக்தர்கள் மிளகாய் கரைசல் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பக்தர்கள் மிளகாய் கரைசல் அபிஷேகம் செய்து கொண்டபோது எடுத்த படம்.
பக்தர்கள் மிளகாய் கரைசல் அபிஷேகம் செய்து கொண்டபோது எடுத்த படம்.
Published on

மேல்மலையனூர் அருகே முருகன்தாங்கல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தன.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடி கிருத்திகை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணிக்கு அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து சக்தி கரகம் மற்றும் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதையடுத்து மாலை 4 மணிக்கு 3 பக்தர்கள் மிளகாய் கரைசல் அபிஷேகம் செய்து கொண்டு சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் பலர் தங்களது உடலில் அலகு குத்தி சிறப்பு வழிபாடு நடத்தினர். 6 மணிக்கு கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com