நோயை காட்டும் கண்ணாடி நாக்கு

மூளையின் ஆணைக்கு முன்பே நாக்கு எச்சரிக்கை அடைந்து விடும். அதனால் தான் உள்ளிருக்கும் சத்துக்களை நாக்கு வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும்.
நாக்கு
நாக்கு
Published on

நம்முடைய உணரும் உறுப்புகளில் மிக முக்கியமானதும், பெரியதுமான உறுப்பு நாக்கு.

உடலின் மற்ற பாகங்களைப் போல நரம்புகளோ, தசை நார்களோ உணரும் உறுப்புகளில் இல்லை என்றாலும் மூளைக்குச் செய்தியைக் கடத்துவதற்கும் மூளையின் ஆணைக்குக் கட்டுப்பட்டு இயங்கவும் உணர் உறுப்புகள் இருக்கவே செய்கின்றன. அவற்றில் மிக அதிகமாக இருப்பது நாக்கு தான்.

நமது உடலுக்கு அவசியமான சத்துக்கள் நிரம்பிய உணவைக் கண்டால் நாவில் எச்சில் ஊறுகிறது. பொதுவாகப் புளிப்பு நிரம்பிய மாங்காய், நெல்லிக்காய், ஊறுகாய் போன்றவற்றைக் கண்டால் பலருக்கும் எச்சில் ஊறுவது இயற்கை. ஆனால் புளிப்பும், உப்பும் ஒருவரது உடலில் நிரம்பி இருக்கும் என்றால் அந்த உடலுக்கு உரியவருக்கு மேற்படி உணவுப் பொருட்களைக் கண்டால் எச்சில் ஊறாது. ஏனென்றால் அவர்களது மூளைக்குத் தெரியும் புளிப்பும், உப்பும் முன்னரே நிரம்பி இருக்கும்போது அந்தச் சுவை உணவுகளை உண்டால் அவற்றிற்கு உரிய உறுப்புகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உடலும் பாதிப்பிற்கு உள்ளாகும் என்ற உண்மை. எனவே அவர் தம் மூளை எச்சிலை சுரக்கச் செய்வதில்லை.

இந்த நேரத்தில் மூளையின் ஆணைக்கு முன்பே நாக்கு எச்சரிக்கை அடைந்து விடும். அதனால் தான் உள்ளிருக்கும் சத்துக்களை நாக்கு வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும்.

எடுத்துக்காட்டாக ஒருவருக்குச் சளிப் பிடித்து உடலில் நீர்த் தன்மை மிகுந்து விட்டதென்றால் அந்த நபருக்கு தான் உண்ணும் உணவில் உப்புச் சுவை அதிகமாக இருப்பது போலத் தோன்றும்.

அதுபோலத்தான் காய்ச்சல் கண்டவரது வாயிலும் நாவிலும் கசப்புச் சுவை தென்படும். எதையும் உண்ணப் பிடிக்காது.

அதாவது காய்ச்சல் கண்ட நபரது உடலின் ஆற்றல் முழுவதும் வெப்பச் சக்தியாக மாறி உடலில் மிகுந்து விட்ட கழிவுகளை (அ) நச்சுப் பொருட்களை எரித்துக் கொண்டிருக்கும்.

சர்க்கரைப் பொருள் அல்லது இனிப்புச் சுவை உடலின் இயங்கு ஆற்றல். இயங்கு ஆற்றல் முடக்கப்பட்ட நிலையில் இனிப்பிற்கு நேர் எதிரான கசப்பு வேகமாக வேலை செய்யத் தொடங்கும். அதுதான் எரிப்பு நடவடிக்கை. உடலில் அந்தச் செயல்பாடு முழுவீச்சில் இருக்கும் பொழுது உள்ளுக்குள் இனிப்பு மட்டுமல்ல எந்தச் சுவையுமே தேவையற்ற ஒன்றாக இருக்கும்.

எனவே தான் கசப்புச் சுவையுள்ள உணவுகளை நாம் எடுக்காத போதும் உடலே கசப்புத் தன்மையை உருவாக்கி நாவில் படிய விட்டு அனைத்துச் சுவைகளையும் அதாவது உணவையே மறுக்கும் நிலைக்குச் செல்கிறது.

உடல் உணவை ஏற்க மறுப்பதால் உடற்சோர்வும் எடைக் குறைவும் ஏற்படவே செய்யும். அதற்காக அதனை நிரந்தரமானதென்று கருத வேண்டியதில்லை. தற்காலிகமானதே. காய்ச்சலின் போது குறைவுபட்ட அளவு, காய்ச்சலில் இருந்து மீண்ட பின்னர் கூடுதல் பசி ஏற்பட்டு எடைக்குறைவு ஈடுசெய்யப்பட்டு விடும்.

ஒவ்வொரு காய்ச்சலும் உடலை முழுமையாக சுத்தப்படுத்தி, இலகுவாக்கி முன்னிலும் ஆற்றல் மிக்கவராக மாற்றுகிறது. எனவே காய்ச்சலை எதிர்மறை எண்ணத்தோடு அணுகத் தேவையில்லை. காய்ச்சலின் போது அதனை அடக்கக் கூடிய உடலின் உயிர் ஆற்றலை எதிர்க்கும் (ஆண்டி பயோடிக்) மருந்துகளை உட்கொண்டு காய்ச்சலால் நிகழும் சுத்திகரிப்புப் பணியை முடக்காமல் இருக்க வேண்டும். இந்தப் பொறுமை தான் நம்மை நிரந்தர நோய்க்குள் சிக்காமல் பாதுகாக்கும் தற்காப்பு அரணாகும்.

குழந்தைகளுக்கு ஏதேனும் உபாதை ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக உணவு எடுப்பதை மறுப்பார்கள். அதனை ஏதோ அடம் என்று தவறாகப் புரிந்து கொள்கிறோம். ஆனால் அதுதான் இயல்புணர்வு. காய்ச்சலின் போது உணவை மறுப்பதன் மூலம் உடலைச் சீர் செய்யும் நடவடிக்கையை முழுமையாக்க குழந்தைகள் தம்மை ஒப்புக் கொடுக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

வற்புறுத்தி ஊட்டினால் வாந்தி எடுப்பதைப் பார்த்திருப்போம். அப்படி வாந்தி எடுத்தால் அவர்களது உடல் உணவின் மூலம் தொல்லைக்கு உள்ளாகிறது என்று பொருள். ஆனால் பெரியவர்கள் தம் திருப்திக்காகக் குழந்தைகள் படும் அவதியைப் பொருட்படுத்துவதில்லை.

ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்டச் சுவை உணவின் மீது நாட்டம் இருக்கும். ஆனாலும் காய்ச்சலில் படுத்து விட்டால் அவருக்குப் பிடித்த உணவை என்ன தான் பிரமாதமாகத் தயாரித்து இருந்தாலும் அவருக்கு எதிரில் வைத்தால் ஆவலுடன் பார்ப்பாரே தவிர எடுத்து உண்ண முடியாது. குமட்டுகிறது என்று பின் வாங்குவார்.

ஏனென்றால் உடலின் உள்ளே இருக்கிற நோய் எதிர்ப்புத் திறன் முழுவேகத்தில் செயல்படுகிற பொழுது வெளியில் இருந்து உள்ளே எதையும் அனுமதிக்காது. உடலின் ஆற்றல் முழுவதும் கழிவுகளை எரிக்கும் நடவடிக்கைக்காகத் தான் பயன்படுத்தப்படுமே தவிர உண்ட உணவைச் செரிப்பதற்கு உரிய எரி திறனுக்கு உடல் செலவளிக்கத் தயாராக இருக்காது.

காய்ச்சலின் போது நாக்கில் மாவுப் படிவம் மிகுந்து இருக்கும். நாம் என்ன தான் வழிப்பான் போட்டு சுரண்டி எடுத்தாலும் மீண்டும் மீண்டும் நாவில் படியும் மாவுப் படலம் படராமல் தடுக்க முடியாது. இந்த மாவுப் படலமானது வயிற்றில் இருந்து மேல் நோக்கி அனுப்பப்பட்ட கெட்டுப் போன நச்சுக் கழிவாகும். இந்த மாவுப் படலம் நாக்கின் மேல் அடுக்கில் அமைந்துள்ள சுவை மொட்டுகளின் மீது உணவின் சுவையை அறிய விடாமல் தடுக்கிறது.

நாக்கு என்பது நாம் உண்ணும் உணவை அரைப்பதற்குத் துணை செய்யும் ஓர் உறுப்பாகும்.

நாக்கு உணவைத் தள்ளுகிற வேலையை மட்டும் செய்வதில்லை. வாயில் அரைபட்ட உணவை உணவுக் குழலுக்குள் தள்ளுகிற வேலையையும் செய்கிறது. தன் மீது பட்ட உணவு அரைபடுகிற பொழுது கெட்டிப்பட்டால் அதற்கு உரிய நீரை எச்சில் என்ற பெயரால் சுரந்து சுயமாகவே நீர்க்கச் செய்கிறது. சுவையின் தன்மையை உணர்ந்து அதன் கூடுதல் குறைவை மூளைக்கு அனுப்பி ”என்ன காரமே இல்லாம சப்புன்னு இருக்கு” என்று சொல்ல வைக்கிறது. ”அய்யோ பயங்கரக்காரம்” என்று காரத்தின் கூடுதலைத் தணிக்க நீரைக் குடிக்க வைக்கிறது. மறுபுறம் அதே நொடியில் ரத்தத்தில் கலந்து விட்ட காரச் சுவையின் மிகுதியை வியர்வையாக வெளியேற்றத் துணை செய்கிறது.

ஆக நம்முடைய புற உணர்விற்கு அப்பாற்பட்டு உடலுக்குப் பொருத்தமான பல்வேறு பணிகளைத் தானாகவே நிறைவேற்றிக் கொள்கிறது.

ஆனால் நாமோ நாவின் முக்கியத்துவம் குறித்த எவ்வித அக்கறையும் இல்லாமல் பேசிக் கொண்டே உண்கிறோம். அந்தப் பேச்சிற்கும் உச்சரிப்பை முறைப்படுத்திக் கொடுக்கிற உறுப்பு எது என்றால் நாக்கு தான். நாக்கு சுழலாமல் நாம் பேச முடியுமா? நாக்கு என்பது பேச்சிற்கும், சுவை உணர்வதற்கும், உணவை அரைப்பதற்குமான உறுப்பு மட்டுமே அல்ல. அது வயிற்றில் உள்ள பல்வேறு உறுப்புகளுக்கும் கண்ணாடியாகவும் இருக்கிறது.

முன்னரே சொன்னது போல இரைப்பையில் படிந்து விட்ட மாவுப் பாசியை தன்மீதுப் படர விட்டு எச்சிலோடு கலந்து உமிழ்ந்து விடச் செய்கிறது. அதே போல உள்ளுறுப்புகளில் ஏற்பட்டுள்ள பல கோளாறுகளையும் உணர்த்துகிறது நாக்கு.

நாக்கானது வாலை மீன் போல நீண்டு, நுனி சுருங்கி ரோஜா வண்ணத்தில் இருக்க வேண்டும். அதுவே ஆரோக்கியத்தின் அடையாளம். இதில் இருந்து மாறுபட்டு அங்கங்கே ரேகை போல கோடு விழுந்து இருந்தால் குடலில் வறட்சி ஏற்பட்டு விட்டது என்று பொருள்.

மாவுப் படலம் கொண்டிருந்தால் உடலில் வாயுத் தேக்கம் அடைந்து செரிமானப் பாதையில் கழிவுச்சவ்வு படர்ந்திருக்கிறது என்று பொருள்.

நாக்கில் புண் ஏற்பட்டு காரம் உண்ண முடியாமல் இருந்தால் இரைப் பையில் வெப்பம் அதிகரித்து விட்டது என்று பொருள்.

நாக்கு தடித்து இரண்டு பக்கங்களிலும் கொப்புளம் போலக் குமிழ் குமிழாக இருந்தால் பித்தப்பையிலும், கல்லீரலிலும் வெப்பம் மிகுந்து விட்டது என்று பொருள்.

இப்படியான மாற்றங்கள் பொதுவான அறிகுறிகள் தாம். இவற்றைக் கொண்டு மாற்று மருந்துகளுக்குச் செல்வதற்குப் பதிலாக பசித்து உண்பது, இரவில் நீண்ட நேரம் விழித்திருக்காமல் ஒன்பது மணிக்காவது படுப்பது என்ற பழக்கத்திற்கு நம்மை உட்படுத்திக் கொண்டால் உடலின் உணர்வுத் திறன் மேம்படும்.

உடலின் உணர்வுத் திறன் மேம்படுகிற பொழுது தானாகவே நாவின் சுவை உணர்வும் மேம்படும். அப்பொழுது நம்முடைய உடலுக்கு ஏற்ற உணவுகளை தேர்ந்து உண்பதற்கு உடல் அறிவுறுத்தும். அதனைப் பின்பற்றினால் போதும் வெகு சீக்கிரமாகவே உடல் நிலை இயல்புக்குத் திரும்பி விடும்.

உடலின் மென்னுணர்வு தான் உலகில் உள்ள 105 மருத்துவங்களைக் காட்டிலும் ஆகச் சிறந்த மருத்துவர். எத்தனை பெரிய அறியாத நுட்பங்களையும் உணர்த்த வல்லது நமது உடலின் மென்னுணர்வு. அந்த மென்னுணர்வானது நாக்கில் இருந்தே துவங்குகிறது.

நாக்கின் வழியாகவே சுவைக்கு அடிமைப்பட்டு நாம் நம்முடைய உடலின் மென்னுணர்வை இழக்கத் தொடங்குகிறோம். நாவின் சுவை மொட்டுக்களைக் கெடுக்கும் விதமாகவே இன்றுள்ள பெரும்பாலான உணவு வகைகள் உள்ளன. அவற்றில் இருந்து எச்சரிக்கை அடையாமல் நாவின் மென்னுணர்வைத் தக்க வைப்பது சாத்தியமே இல்லை.

இன்று இளைஞர்களிடம் பரவலாகி வரும் பான்பராக் போன்ற பல பழக்கங்களும், குழந்தைகள் விரும்பி உண்ணும் நொறுவி வகைகளும் நாவின் சுவை மொட்டுகளைக் காவு வாங்குவதாகவே உள்ளன. அவை என்ன என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.

X

Maalai Malar
www.maalaimalar.com