மருத்துவம் அறிவோம்- ஆரோக்கியத்துக்கு அவசியம் சுய விழிப்புணர்வு

சின்ன முள் குத்தினால் கூட காலை இழுத்துக் கொள்வது கூட விழிப்புணர்வுதான்.நம் பலம், பலவீனம் இவற்றினை மதிப்பார்கள். மரியாதை கொடுப்பார்கள். சமுதாயம் இவர்கள் சொல்லுக்கு கட்டுப்படும்.
மருத்துவம் அறிவோம்- ஆரோக்கியத்துக்கு அவசியம் சுய விழிப்புணர்வு
Published on

விழிப்புணர்வு: விழிப்புணர்வு இந்த வார்த்தையினை இப்போதெல்லாம் நிறைய பயன்படுத்துகின்றனர். இந்த விழிப்புணர்வு என்பது என்ன? உதாரணமாக இன்று மக்கள் ஆரோக்கிய உணர்வு முறையினைப் பற்றி நல்ல விழிப்புணர்வுடன் இருக்கின்றார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. அறிதல், உணருதல் இவை நன்கு மனிதனின் மனதில் பதிந்துள்ளது என்று பொருள் கொள்ளலாம். நம்மை சுற்றி நிகழும் செயல்களை அறிதல், உணருதல் இவற்றினை விழிப்புணர்வு என்று சொல்லலாம். படிக்கும் மாணவர்களிடம் விழிப்புணர்வு என்பது கற்றல், கேட்டல், அறிதல், புரிதல், பதிய வைத்தல் அதன்படி செயலாற்றுதல் இவற்றினை கூறலாம். சின்ன முள் குத்தினால் கூட காலை இழுத்துக் கொள்வது கூட விழிப்புணர்வுதான்.

சுய விழிப்புணர்வு: சுய விழிப்புணர்வு என்று கூறப்படுகின்றதே அப்படி என்றால் என்ன? தன் மீது தன் எண்ணங்கள், சொற்கள், செயல்கள் இவற்றின் மீது கவனம் செலுத்துவதே சுய விழிப்புணர்வு. இவற்றின் மீது முழு கவனத்துடன் இருப்பது சுய விழிப்புணர்வு ஆகும். பொதுவாக பொது இடங்களில் ஒருவர் இவ்வாறு இருப்பது சமூகத்தில் ஒருவருக்கு நல்ல பாராட்டினைப் பெற்றுத் தரும். அளவாய் பேசுவது, பயனுள்ளதாய் பேசுவது, பண்போடு பேசுவது, இவை அனைத்திற்கும் சுய விழிப்புணர்வு பெரிதும் உதவும். தனிமையில் சுய விழிப்புணர்வு என்பது உதாரணமாக நாளைக்கு ஒரு முக்கிய வேலை- அதனை திறம்பட முடிக்க வேண்டும் என்கிறபோது இந்த எண்ணம் ஒரு வித படபடப்பினைத் தரலாம். இதன் காரணமாக அந்த வேலையினை திறம்பட முடிக்க ஒருவர் தன்னை நன்கு தயார் செய்து கொள்வார். இதுவும் சுய விழிப்புணர்வுதான். சுய விழிப்புணர்வு நமது எண்ணங்கள் செயல்பாடுகள் இவற்றிற்கு வலிமை கொடுக்கும். நம் பலம், பலவீனம் இவற்றினை மதிப்பார்கள். மரியாதை கொடுப்பார்கள். சமுதாயம் இவர்கள் சொல்லுக்கு கட்டுப்படும்.

சுய விழிப்புணர்வு என்பது

* ஒரு செயலில் முழுமையான வெற்றி தரும்.

* நல்ல முடிவுகளை தீர்க்கமாய் எடுக்க உதவும்.

* தன்னம்பிக்கை இருக்கும்.

* பல கோணங்களில் இருந்து ஒரு செயலினை அலசி ஆராய முடியும்.

* நம் மனம் போன போக்கில் ஒரு கருத்தினை பேச மாட்டோம்.

* உறவுகள் வீடு, வெளியிடம் இவற்றால் இவை நன்கு வளரும்.

* உணர்ச்சிகள் கட்டுப்படும்.

* ஸ்ட்ரெஸ் இருக்காது.

* ஆரவாரமற்ற மகிழ்ச்சி இருக்கும்.

இந்த சுய விழிப்புணர்வு சரியான பாதையில் வாழ்க்கையினை கொண்டு செல்லும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஏன்? ஏன்? ஏன்? என உங்களை சுய ஆய்வு செய்வதுதான்.

ஏன் என்னால் அன்று அலுவலகத்தில், பள்ளியில், நட்பு வட்டாரத்தில் முறையாய் என் கருத்தினை பேச முடியவில்லை. தெளிவாய் எதனையும் கூற முடியவில்லை என்று சிந்தியுங்கள்.

என் பயத்தினை நான் எப்படி நீக்குவது?

இந்த ஆய்வு ஒருவரின் மூளையினை பலப்படுத்தும். செய்திகளை, கருத்துக்களை தேடி அலைந்து சேகரிக்கும். கையில் பணம் இருந்தால் மன தைரியம் இருக்கும். மூளையில் தெளிவான அறிவு இருந்தாலும் மன தைரியம் இருக்கும்.

விழிப்புணர்வு, சுய விழிப்புணர்வு நாம் அடைய வேண்டும் என்றால் மனநிறைவு என்பது பழக்கம் ஆக வேண்டும். மனநிறைவு என்பது என்ன? முழு கவனம் தேவை. எதிலும், எந்த செயலிலும் முழு கவனம் தேவை. ஒவ்வொரு நொடியிலும் முழு கவனம் தேவை. இதனால் சிந்தனை, சொல், செயல் என்பது மிக சிறப்பாய் மாறும். மூளை, மனம், கை மூன்றின் செயலும் ஒருமுகமாக இருக்கும். மூளை, மனம், கை இவை மூன்றும் நொடி பொழுதும் கவனம் தவறாது வேலை செய்யும்.

கண்டிப்பாய் தியானம் பழக வேண்டும். தியானம் என்பது சுய விழிப்புணர்வு, முழு கவனம் ஆகிய தன்மைகள் நம்மிடம் உருவாக பெரும் காரணமாகும்.

தியானம் மனதில் அமைதியினை தரும். மனதினை கனமின்றி வைக்கும். தியானத்தால் ஏற்படும் பல நன்மைகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. படபடப்பு, ஸ்ட்ரெஸ் நீங்குகின்றது. கவனத் தன்மை கூடுகின்றது. வயதாகி விட்டதே. இனி நான் தியானம் பழக முடியுமா என்று நினைக்க வேண்டாம்.

* புதிதாக ஆரம்பிப்பவர்கள் முதலில் 5 நிமிடம் பழகுங்கள். தகுந்த பயிற்சியாளர் மூலம் ஆரம்பியுங்கள். பழக, பழக, நேர அளவினை கூட்டிக் கொள்ளுங்கள்.

*கண்டிப்பாக அமைதியான சுகாதாரமான காற்றோட்டமுள்ள இடத்தினை தேர்வு செய்யுங்கள். ஆரம்ப காலதியானத்திற்கு இவை அவசியம் தேவை.

* தியானம் எந்த மதத்தினையும் சார்ந்தது அல்ல. சுய விழிப்புணர்வினைக் கூட்டும் சிறந்த முறை. இது நமக்குக் கிடைத்த பொக்கிஷம்.

* இதனை முறையாய் தொடர்ந்து பயிற்சி செய்யும் பொழுது உடல் நலம், மனநலம் இரண்டுமே சீராய் இருக்கும்.

* தியானம் செய்யும் முறையினைக் கூட அவரவர் விருப்பத்திற்கேற்ற முறையில் செய்யலாம்.

* மூச்சினை கவனித்தல், குறிப்பிட்ட மந்திரம் (அ) வார்த்தையினை கூறுதல், அமைதியான சூழ்நிலை. இயற்கை அதனை மனதில் உருவகித்து அதனுள் மட்டுமே கவனம் செலுத்துதல், இப்படி அவரவர் தகுதிக்கேற்ப பயிற்சியாளர் தியான முறையினை பயிற்றுவிப்பார். ஆனால் எப்பொழுதும் ஒவ்வொரு நொடியிலும் தம் முழு கவனத்தினை செலுத்துவது சிறந்த வாழ்வியல் தியானம் எனலாம். எதனை செய்தாலும், எந்த முறையில் செய்தாலும் அதனை விடாது தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். அவ்வப்போது மாற்றிக் கொண்டு இருக்கக்கூடாது.

ஆன்மிக ரீதியான தியான பயிற்சி முறைகள் சற்று மாறுபடலாம். அடிப்படையில் ஒன்றாக இருந்தாலும் வாழ்வின் முறை, ஆன்மிக முறை பயிற்சி பயணங்கள் வேறு வேறு பாதையாக இருக்கும்.

தூக்கம்: சுய விழிப்புணர்வு, தியானம் என்றவுடன் இந்த பயிற்சிகளை செய்ய எனக்கு நேரம் பற்றவில்லை. விடியற் காலையில் எழுந்திருக்க வேண்டி உள்ளது. பகலில் மிகவும் சோர்வாக இருக்கின்றது என்று சிலர் கூறுவர். ஆன்மிக பயிற்சி என்பது வேறு. படிப்பு, வேலை, குடும்பம் என்ற இயல்பு வாழ்க்கை என்பது வேறு. முழு மூச்சுடன் தவம், யோகம் என்று இருப்பவர்களின் உணவு முறை, தூக்கம் இவை மாறுபட்டு இருக்கும். அன்றாட வாழ்வியல் முறையில் இருப்பவர்களின் வாழ்வில் முன்னேற்றம், கட்டுப்பாடு இவற்றினை கொண்டு வரும் சுய விழிப்புணர்வு முறைகள் சற்று மாறுபட்டு இருக்கும். இதனை நினைவில் கொள்ள வேண்டும்.

8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் பொதுவில் பரிந்துரைக்கப்படுகின்றது. இந்த அளவு இல்லாத பொழுது நாள்பட்ட நோய்களின் அபாயத்தினைக் கூட்டுகின்றது. அறிவாற்றல் திறனை குறைத்து விடுகின்றது. செயல்பாடுகள் முறையுடன் இல்லாது குறைபாடுடன் இருக்கும். அதிக விபத்துகள் ஏற்படும். பிரயாணத்தில் மட்டுமல்ல, வீட்டில், சமையலறையில், குளியல் அறையில் கூட தடுமாற்றத்தின் காரணமாக விபத்துகள் ஏற்படலாம்.

மன நிலை சரியில்லாது இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். எடை கூடும் வாய்ப்பு உண்டு. இருதய நோய் பாதிப்பு கூடும் வாய்ப்புகள் உண்டு. செயல்பாட்டுத் திறன் குறையும்.

பல நோய்களின் பாதிப்பினால் ஆபத்தான நிலைகள் கூட உருவாகலாம். ஆக நல்ல மன நிலை நல்ல கவனம் வேண்டுமெனில் முறையான அளவு தூக்கம் வேண்டும். நல்ல மனநிலை இருக்க புத்தகம் படிக்க வேண்டும் (அ) புத்தக பதிவின் ஒலி நாடாவாக கேட்க வேண்டும். சிறிது நேரம் இனிய இசை கேட்க வேண்டும். பயணம் செய்து பல இடங்களை பார்க்க வேண்டும். ஆழ்ந்த உரையாடல் படித்தவர்களோடு இருக்க வேண்டும்.

*உடற்பயிற்சி தேவை *வேதனை தாங்க முடியவில்லை. தனிமையில் வாய்விட்டு அழுதுவிடலாம். *மன இறுக்கம் நீங்கிவிடும். *ஆழ் மூச்சு பயிற்சி செய்யலாம்.

*தியானம் *சுய ஒழுக்கம் இவை ஒவ்வொருவரின் அடிப்படை தேவை ஆகும்.

இரும்பினை எளிதில் யாரும் அழிக்க முடியாது. ஆனால் அதன் துருவே இரும்பினை அழித்துவிடும். இதுபோல்தான் மனிதனும். எதுவும் அவன் மனநிலையினை பாதிக்காது. அவன் உறுதியாய் இருந்தால் போதும். ஆனால் அவன் மனநிலை துருபிடித்து விட்டால் அதுவே அவனை அழித்து விடும்.

எண்ணற்ற மருத்துவ முன்னேற்றங்கள், வசதிகள், விஞ்ஞான முன்னேற்றம் என்று எந்த எந்த பிரிவிலும் மனிதன் வளர்ந்து கொண்டே இருக்கின்றான். ஆனால் எண்ணற்ற மருத்துவமனைகளும் கூடவே உருவாகின்றன. நிரம்பி வழிகின்றன.

எல்லா சேனல்களும் பெரிய பெரிய மருத்துவ நிபுணர்களை வைத்து உடல் நல, ஆரோக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. அதனை முறையாய் தியானித்து பின்பற்றுபவர் பலர்.

இருப்பினும் சிலரால் முடிவதில்லை. சுய விழிப்புணர்வு, தியானம், யோகா இவற்றின் மூலமே வாழ்வில் பல நன்மைகளை பெற முடியும். இதன் காரணமாகவே இதனைப் பற்றிய கட்டுரை எழுதப்படுகின்றது. முயன்று வெற்றி பெறுவோமே!! இதற்கு இன்னும் சில பண்புகளை நாம் உருவாக்க வேண்டும்.

*பொறாமையினை விட்டுவிட வேண்டும். இது மிகப்பெரிய விஷம்.

* பிறரைப் பற்றிய வம்பினை கேட்பதையும், பேசுதலையும் விட்டு விடவேண்டும்.

* காலத்தினை பணத்தினைப் போல் பத்திரமாய் செலவிட வேண்டும்.

* எப்பொழுதும் குற்றம், குறை என புலம்பக் கூடாது.

* பேசுவதில் உபயோகமற்ற பேச்சினை குறைத்து கொள்ள வேண்டும்.

* வாய் பேசாமல் இருப்பது மவுனம் அல்ல. மனம் பேசாது அமைதியாய் இருக்க பழகுங்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com