மருத்துவம் அறிவோம்- சோர்வு நீங்கினால் நோய்கள் நெருங்காது

உடற்பயிற்சி செய்தாலே சுறுசுறுப்பாகி விடுவீர்கள். சற்று வியர்க்கும் வரை உடற்பயிற்சி செய்யலாமே. மைதா, சர்க்கரை உணவுகள் ஒருவரை சோர்வாக்கி விடும்.
மருத்துவம் அறிவோம்- சோர்வு நீங்கினால் நோய்கள் நெருங்காது
Published on

எப்ப பார் சோர்வாக இருக்கு என்று சொல்கின்றீர்களா? இருந்தாலும் அன்றாட வேலைகளை எப்படியோ செய்கின்றேன் என்கிறீர்களா?

இப்படி ஏற்படுவதற்கு ஒருசில முக்கியமான காரணங்கள் இருந்தாலும் நாம் கவனிக்க வேண்டியது.

* போதுமான அளவு ஆழ்ந்த தூக்கம் இருக்கின்றதா?

* சில வாழ்க்கை முறைகளை மாற்றி உடலுக்கு சக்தி கூட்ட வேண்டுமா? என்பதுதான். சிலருக்கு இரண்டும் கூட தேவையாக இருக்கலாம். அவற்றினை பின்பற்றும் முறைகளை அறிவோமே.

* 7 மணி முதல் 9 மணி நேர தூக்கம் இத்தகை யோருக்கு தேவைப்படுகிறது. இது குறையும்போது பகலில் தூக்கம் தேவைப்படுகின்றது. தேவையான அளவு நீர் குடிக்காமல் இருப்பவர்கள். அவ்வப்போது சிறிது நீர் அருந்திப் பாருங்கள்.

* உடற்பயிற்சி செய்தாலே சுறுசுறுப்பாகி விடுவீர்கள். சற்று வியர்க்கும் வரை உடற்பயிற்சி செய்யலாமே.

* சிலர்  ஏதோ 'பார்ட்டியில்' குடிப்பேன். மற்றபடி பழக்கம் இல்லை என்பார்கள். சிலர் மருந்து போல் இரவில் எடுத்துக் கொண்டால் தான் தூங்க முடிகின்றது என்பார்கள். ஆல்கஹால் முழுமையற்ற, மேல் போக்கான தூக்கத்தினையே தரும் என்பதால் மது முழுமையாய் அகற்றப்பட வேண்டிய ஒன்றே.

* மைதா, சர்க்கரை உணவுகள் ஒருவரை சோர்வாக்கி விடும்.

* மதிய, சாயந்திர காபியினை தவிர்த்து விடுங்கள். இது இரவு தூக்கத்தினை கெடுப்பதால் மறுநாள் சோர்வு ஏற்படுகின்றது.

* அரை வயிற்றுக்கோ அல்லது சிறிது சிறிதாகவோ உண்பது நல்லது. * ஸ்டிரெஸ் அதிகமானால் சோர்வும் அதிகமாகி விடும்.

* இரவில் கம்ப்யூட்டர், செல்போன் என பார்த்து கண்களையும், உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

* பகலில் 20 நிமிடம் சாய்ந்த நிலையில் குட்டி தூக்கம் எடுத்து கொள்ளுங்கள். * சுறுசுறுப்பாக வீட்டிற்குள்ளேயே 10 நிமிடம் நடங்கள்.

* ரூமிற்குள்ளேயே அடைந்து இருக்காமல் வெளி உலகத்தினை சிறிது நேரம் பாருங்கள். கடைக்காவது நடந்து சென்று வாருங்கள். * சிகரெட் பழக்கமே கூடாது. நல்ல இசை கேளுங்கள்.

* கம்ப்யூட்டரில் முறைத்துக் கொண்டே இருக்கா தீர்கள். அவ்வப்போது எழுந்து நடங்கள். பகலில் சோர்வு என்பது உடல் நல பாதிப்பின் அறிகுறியாகவோ வெளிப்பாடாகவோ இருக்கலாம். மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

பொதுவில் உடலில் சோர்வு நீங்க அவ்வப்போது சிறிது உபவாசம் இருக்கலாம். சோம்பு போட்டு நீர் கொதிக்க வைத்து குடிங்க. புதினா, கொத்தமல்லி சிறிதளவு எடுத்து ஜுஸ் செய்து குடிக்கலாமே.

* ஞாபக சக்தி குறையும் பொழுது கூட ஒரு வித சோர்வு ஏற்படும். சில வகை உணவுகள் கூட மூளையின் செயல் திறனை பாதிக்கின்றன.

* அதிக சர்க்கரை எடுத்துக் கொள்ளும் போது மூளையின் புரதம் உறிஞ்சப்படுவது குறைகின்றது. மூளையின் செயல்பாட்டுத் திறன் குறைகின்றது.

* மைதா போன்ற உணவுகளில் பாஸ்தா, கோதுமை போன்ற பிரிவுகளில் குளுடென் என்ற பொருள் உள்ளது. இது வீக்கத்தினை உண்டாக்கக் கூடியது. இதனால் தலைவலி, படபடப்பு, மனச் சோர்வு உண்டாகின்றது. * கொழுப்பு வகைகள் மூளையின் கூர்மைத் திறனை குறைத்து விடுகின்றது. * அதிக உப்பு வேகமாக மூளையின் செயல் திறனை குறைத்து விடும்.

* அதிக சர்க்கரை உள்ள திரவ பானங்கள் தொடர்ந்து அதிகம் எடுத்துக் கொள்வது ஆபத்தாக கூட முடியும். * மது, அதிக காபி இவை தவிர்க்கப்பட வேண்டும். சில பழக்கங்கள் கூட மூளைக்கு தீங்காக அமையலாம். அவைகள் என்ன என்பதனை அறிவோமா?

* மூளைக்கும் ஓய்வு தேவை. சத்தம், அதிக ஒளி, சுத்தமில்லாத சூழ்நிலை இவற்றினைத் தவிர்த்து நன்கு தூங்க வேண்டும்.

* காலை உணவினைத் தவிர்ப்பதும் அல்லது ஏதோ கையில் கிடைத்ததை காலையில் சாப்பிட்டு ஓடுவதும் காலப் போக்கில் மூளையின் செயல் திறனை பாதிக்கும். இரவில் தண்ணீர் ஊற்றிய சாதம், தானிய கஞ்சி இவை எளிதானது. சத்தானதும் கூட. * சர்க்கரை அதிகமான எல்லாமும் தீங்கானதே.

* புகையினால் ஏற்படும் நச்சுப் பொருட்கள் மூளையினை பாதிக்கும். புகை பிடிப்பதனை அளவோடு நிறுத்தி விடுங்கள். மாசு மிகுந்த சூழ்நிலையிலும் இருக்காதீர்கள். * முகத்தை போர்வையினால் மூடிக் கொண்டு தூங்கும் பழக்கம் கூடாது. மூளை சுறுசுறுப்பாக இயங்க தினம் 20 நிமிடம் காைலயோ, மாைலயோ சூரிய ஒளி படும்படி இருங்கள். செஸ், புதிர் போட்டி, குறுக்கெழுத்து போட்டி, பல்லாங்குழி இப்படி விளையாடலாம்.

* ரிலாக்ஸ் செய்வது கூட உபயோக மான முறையில் இருக்க வேண்டும். * உணர்ச்சிகள் கோபம், பயம் தடித்த சொற்கள் இவற்றினை கட்டுப்படுத்த தெரிய வேண்டும். "தியானம் மூளையின் செயல்பாட்டுத்திறனை கூட்டுவதாக அனைத்து ஆய்வுகளும் கூறுகின்றன.

* சிலர் காலார நடக்க முடியவில்லை. காலில் ஆடு தசை பிடித்துக் கொள்கின்றது என்பார்கள். இவர்கள் மக்னீசியம் குறைபாடு இருக்கின்றதா? என பரிேசாதித்துக் கொள்ள வேண்டும். அதனை மருத்துவர் ஆலோசனை மூலம் சரி செய்து விட்டால் நடப்பதும் எளிதாய் இருக்கும்.

என்ன செய்தாலும் எடை குறையவில்லை என்று அங்கலாய்ப்பவர்கள் பலர் உள்ளனர். இதன் பொருள் ஏதோ எங்கோ சில குறைபாடுகளே காரணமாக இருக்கின்றது. அதனை நம்மால் உணர முடியவில்லை என்பதாகும். அவற்றினை நாம் உணர்ந்து சரி செய்து கொண்டால் உடல் எடை சீராகி விடும். பலர் காலை 7 மணி முதல் 8 மணிக்குள் வீட்டை விட்டு கிளம்ப வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் பசி இல்லாமல் இருக்கலாம். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும் என வற்புறுத்துவார்கள். ஆக பசியில்லாமல் அந்தந்த நேரத்தில் சாப்பிடுவது பலருக்கு வழக்கமாகி விட்டது. ஆனால் பசி இல்லாமல் சாப்பிடும் பழக்கம் கூடாது. இதற்கு மாற்று வழியாக கையில் கொண்டு செல்லலாம்.

உடல் எடை குறைய வேண்டும் என்று முறையான டயட்டில் இருப்பார்கள். குறைந்தவுடன் தனக்கு பிடித்தாற்போல் உண்ண ஆரம்பிப்பார்கள். இதனால் வேகமாய்  எடை கூடி விடுகின்றது. எப்பொழுதும் கடைபிடிக்க கூடிய உணவு முறை, உடற்பயிற்சி என்று இருப்பது நல்லது. காலை உடற்பயிற்சி சற்று எளிதானது. மாலையில் வேலை முடித்து சோர்வாய் இருக்கும் பொழுது உடற்பயிற்சி என்பது உத்வேகம் குறைவாக இருக்கும்.

வீட்டில் ஆரோக்கியமான, கொழுப்பு இல்லாத உணவுகளையே வைக்க வேண்டும். தினமும் காலை உணவினை தவறாது எடுத்துக் கொள்ளுங்கள்.

இன்றைய காலகட்டத்தில் சற்று அதிகமாக காணப்படும் ஒன்று புற்றுநோய். பல ஆய்வு கருத்துகள் கூறுவது பெண்கள் இன்னமும் ஆரம்ப கால அறிகுறிகளை கவனிக்க தவறி விடுகின்றனர் என்பதுதான். மார்பக புற்றுநோய், நுரையீரல், பிராஸ்டேட் என இதனை தாக்குதல் எண்ணிக்கை வாரியாக வரிசைப்படுத்தியும் கூறுகின்றனர்.

பெண்களுக்கு மார்பகம், குடல், கருப்பை, நுரையீரல் இப்படி இதன் பிரிவுகளில் அதிகம் பாதிப்பு ஏற்படுகின்றது. எந்த வயதிலும் ஏற்படலாம் என்றாலும் முதுமையில் இது சற்று அதிகமாக உள்ளது.

பெண்களின் உடம்பு வளர்ச்சி பெறும் காலத்திலும் சரி -பின்பும் சரி பல விதமான நிலைகளை பெறுகின்றது. சில நேரங்களில் இந்த இயற்கைக்கு மாறான பாதையும் ஏற்படலாம். ஆகவேதான் அறிகுறிகளை கவனித்து உடனடி மருத்துவ உதவி பெற வேண்டும்.

மார்பக கட்டி போன்ற உருண்டைகள் அனைத்துமே புற்று நோய்தான் என்பதில்லை. இருந்தாலும் அதனை சோதனை செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம். திடீரென ஒரு சிறு குழிபோல் சரும மாற்றம், மார்பக காம்புகள் உள் திரும்பியது, திரவ வடிதல், சிகப்பு, ஒரு மாற்ற நிலை இவை அனைத்துமே மருத்துவ உதவி அவசியம் தேவைப்படுபவை ஆகும்.

வயிறு இறுக்கமாக உப்பிசம் கொள்வது பெண்களுக்கு சற்று அதிகமாக ஏற்படக் கூடியது. இது சிகிச்சையில் சரியாகி விடும். அவ்வாறு இல்லாது தொடர்ந்து இருக்கும் உப்பிசம் என்றால் வயிற்று நிபுணரின் ஆலோசனை பெறுவது சிறந்தது.

* மாத விலக்கு சுற்றுக்கு நடுவே ரத்த போக்கு, ரத்த கசிவு இருந்தால் அடுத்து மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

* சருமத்தில் மச்சத்தின் நிற மாற்றம், உருமாற்றம் இருந்தாலும், அடுத்த நொடியே நீங்கள் தாமதிக்காமல் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

* சிறுநீரில் ரத்தம், வெளிப்போக்கில் ரத்தம்

* நிணநீர் கணுக்கால் வீக்கம் பொதுவில் கிருமி காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த வீக்கம் ஒருவாரம் ஆகியும் சிகிச்சைக்குப் பிறகும் மறையவில்லை என்றால் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

* எந்த காரணமும் இல்லாமல் திடீரென எடை குறைந்தால் கவனம் தேவை. அதிக கவலை, தைராய்டு பிரச்சினை இவை கூட எடை குறைப்பினை தரலாம். ஆனால் சில பரிசோதனைகள் மேற்கொள்வதே நல்லது.

* அதிக உணவு, மது, ஸ்டிரெஸ் இவை நெஞ்செரிச்சல் பாதிப்பினை தரலாம். ஆனால் இது தொடர்ந்து இருந்தால் கூடுதல் கவனம் தர வேண்டும்.

* வாய் உள், உதட்டில் மாற்றங்கள் தெரிந்தால், குறிப்பாக புகைபிடிப்பவர்கள் புகையில் இதர வகையருக்களை எடுப்பவர்கள் வாய் புற்று நோய் காரணமாக இருக்கின்றதா என பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

* குணமடையாத ஜுரம், நீங்காத சோர்வு, சிறுநீர் வெளிப்போக்கில் மாற்றம், காரணமில்லாத தொடர் வலி, தொடர்ந்து பல வார இருமல் இவைகளும் கவனம் பெற வேண்டியவை. * கடினமான அசைவ உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. * செயற்கை சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை யினை பயன்படுத்த வேண்டாம். * உருளை கிழங்கு சிப்ஸ் தவிர்ப்பது நல்லது. * மைதா உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

சிறுநீர் பாதையில் கிருமி தாக்குதல் என்பது நாம் சர்வ சாதாரணமாக கேள்விப்படும் ஒன்றாகி விட்டது. சிறுநீரகம், குழாய், பை, வெளி செல்லும் இடம் என எங்கும் ஏற்படலாம். பொதுவில் சிறுநீரக பை, குழாய் இவற்றில் ஏற்படும் அதிக பாதிப்பு சிறுநீரகத்தினையும் பாதிக்கும். பெண்களுக்கு இந்த சிறுநீரக பாதை கிருமி தாக்குதல் பாதிப்பு ஆண்களை விட அதிகமாக ஏற்படுகின்றது.

* சிறுநீர் செல்லும்பொழுது அதிக எரிச்சல். *அடிக்கடி சிறுநீர் செல்ல தோன்றும். ஆனால் மிக சிறிதளவே செல்லும். * ஜுரம், சில்லிப்பு. * சோர்வு

* கீழ் வயிற்றில், பின் முதுகில் வலி, அழுத்தம் * அடர்ந்த, ரத்தம் கலந்த மாறுபட்ட சிறுநீர் வெளிப்போக்கு போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.

சிலருக்கு குடும்ப ரத்த உறவுகளில் இவ்வாறு பாதிப்பு இருக்கலாம். சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும் வாய்ப்பு கள் அதிகம் என்பதால் அடிக்கடி பாதிப்பு ஏற்படலாம். ஹார்மோன் மாறுபாடு, சிறுநீரக கல், பக்கவாதம், தண்டுவடம் அடிபடுதல், மற்றும் சில மருத்துவக் காரணங்களாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.

பொதுவில் சிறுநீர் பரிசோதனை மூலம் உறுதி செய்து மருந்து வழங்கப்படும். அடிக்கடி இந்த பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர் கூடுதல் பரிசோதனைகளை செய்வார். இன்று இதற்கு பல்வேறு விதமான முன்னேற்ற சிகிச்சைகள் உள்ளன. இருப்பினும் வரும் முன் தவிர்ப்பதே நல்லது. * சிறுநீரினை வெகு நேரம் அடக்கி வைக்கக் கூடாது. உணர்வு ஏற்பட்டவுடன் வெளியேற்றி விட வேண்டும். * இப்பகுதிகளை மிக சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் அவசியம். * போதுமான அளவு நீர் குடித்தல் வேண்டும். * ஷவர் குளியல் உகந்தது. * உள்ளாடைகள் பருத்தி யில் மட்டுமே இருக்க வேண்டும். அதிகம இறுக்கம் கூடாது.

* கர்ப்ப காலத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்:

பாதிப்பு இருக்கும் நேரத்தில் * டீ, காபி, சாக்லேட் இவை பாதிப்பு காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். * பாட்டிலில் அடைக்கப்பட்ட நுரைக்கும் பானங்கள் கூடாது. * ஆல்கஹால் எப்பொழுதுமே கூடாது. * காரம், எண்ணெய், மசாலா உணவுகள் கூடாது. * வெள்ளை சர்க்கரை வேண்டாம். * ஜுரம் * பக்க வாட்டில் வலி * பின் கீழ் முதுகு வலி.

* வயிற்றுப்பிரட்டல் * வாந்தி இவை உடனடியாக மருத்துவர் கவனம் பெற வேண்டியவை.

* பொதுவில் அதிக கொழுப்பு இல்லாத தயிர் சிறுநீரக பாதை கிருமி தாக்குதல் அபாயத்தினை மிக அதிகமாய் குறைக்க வல்லது. பெண்களின் பிறப்புறுப்பு பூஞ்சை தாக்குதலையும் கட்டுப்படுத்த வல்லது.

கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் உங்கள் உடல், ரத்தம், உள் உறுப்புகள் சுத்தம் செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

* வயிறு உப்பிசம் * அதிகம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருத்தல் * மலச்சிக்கல் * எரிச்சல் * அடிக்கடி சளி பிடித்தல் * எப்பொழுதும் சோர்வு * தூங்குவ தில் பிரச்சினை * தலைவலி * சரும பாதிப்பு இருந்தால் நாம் உடனடியாக உடலுக்கு கூடுதல் கவனம் கொடுக்க வேண்டும் என்று சொல்பவை ஆகும்.

தினம் ஒரு ஆப்பிள், மருத்துவரை தள்ளி வைக்கும் என்ற தொடர் ஆங்கில மொழிபெயர்ப்பு. உண்மையிலேயே பல நல்ல சத்துகள் நிறைந்தது தான். இதனை கழுவி தோலோடு உண்பதே நல்லது. இதனுடன் சமமாக சில பழங்களை ஒப்பிடலாம். இருப்பினும் அநேக நன்மைகள் ஒரு சேர உள்ள பழம் ஆப்பிள் எனலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com