

இதோ துவங்கி விட்டது தர்ப்பூசணிப் பழப் பருவம். ஐந்து ரூபாய் விலையில் ஒரு கீற்று கால் நடையாக நடந்து செல்லும் வழிப்போக்கருக்கும் கிடைத்து விடும். ஒரு கீற்றினைச் சாய்த்துப் பிடித்தாலே சொட்டும் அளவிற்கு நீர்ச் சத்தும், அந்நீரினை பிடித்து வைத்துக் கொள்ளும் நார்ச்சத்தும் மிகுந்தது தர்ப்பூசணி. கிட்டத்தட்ட ரத்த நிறத்தில் இருப்பதால் நமது ரத்தத்திற்குப் பெரிதும் துணை செய்யக்கூடியது என்பது சொல்லாமலே உணர முடியும்.
உண்மையில் தர்ப்பூசணி அதன் ஆதி வடிவத்தில் இன்றைக்குள்ள ரத்த நிறத்தில் இருக்கவில்லை. உள்ளே சதைப்பகுதி வெள்ளை நிறமாகவும், இன்றுள்ள கெட்டியான நீருடன் கூடிய மேலடுக்கு ஆமையின் ஓடு போன்று திறக்கக் கடினமாகவும் இருந்தது. அதன் சுவையும் இன்றைக்கு இருப்பது போல் இனிப்பும், தீஞ்சுவை மதுரத்தையும் கொண்டிருக்கவில்லை. இளம் இனிப்பும், கசப்பும் கொண்டிருந்தது. பழத்தை அறுவடை செய்து சுமார் மூன்று மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் வைத்திருக்க முடிந்தது. ஒரு பழத்தை உடைத்தால் இரண்டு மூன்று பேர் ஒருவேளை உணவாக எடுத்துக் கொள்வர்.
ஆப்பிரிக்காவில் இருந்து மேற்குலகிற்கும், அமெரிக்கா நாடுகளுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கருப்பு நிறத்தவர் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட உழைப்பாளிகளில் பாதிப்பேர் கூட உரிய இடத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கப்படவில்லை என்ற துயர வரலாற்றையும் சேர்த்தே நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
போகிற வழியில் மிகவும் நெரிசலாக கலன்களில் கைகால்களில் விலங்கிட்டு உண்ண உணவு கொடுக்கப்படாமல், கழிப்பதற்கு வசதியும் இன்றி மிருகத்தை விட மோசமாக நடத்தப்பட்டனர் உலகின் மிகக் கடுமையான உழைக்கும் திறன் கொண்ட அம்மக்கள். கொடுக்கப்பட்ட உணவும் கூட உழைப்பாளிகள் உயிருடன் கொண்டு சேர்த்தால் தான் விலைக்கு விற்க முடியும் என்பதற்காக உயிரைத் தக்க வைப்பதற்காகக் கொடுக்கப்பட்டதே அன்றி அவர்களை மனிதர்களாக மதித்து அல்ல. சுருக்கமாகச் சொல்வதென்றால் இன்றைக்கு காலை வேளைகளில் பிராய்லர் கோழிகளைக் கறிக் கடைக்கு வேன்களில் கொண்டு செல்கிறார்களே அதுபோன்று கீழ்த்தரமான மரியாதையுடனே கொண்டு செல்லப்பட்டனர்.
இத்தனை மோசமான நிலையிலும் கூட அந்தக் கருப்பு உழைப்பாளர்கள் தாங்கள் போகிற இடத்தில் உணவுத் தற்காப்பிற்குப் பயன்படுமே என்று தர்ப்பூசணி விதைகளை இடுப்புக் கயிற்றில் முடிந்து கொண்டு போனார்கள். கரும்புத் தோட்டங்களிலும், பருத்திப் பண்ணைகளிலும், குதிரைக் கொட்டடியிலும் உழைக்கப் போனவர்கள் தர்ப்பூசணி விதைகளை அங்கங்கே நட்டு வைத்து பழம் வளர்ந்த பின்னர் அறுத்து சேமித்து வைத்துக் கொண்டு மாதக் கணக்காக உண்டு வந்தனர். தர்ப்பூசணி காலத்தில் அவ்வுழைப்பாளர்களிடம் தென்பட்ட சுறுசுறுப்பையும் ஆரோக்கியத்தையும் கண்டு கொண்டு அதனைத் தாங்களும் உட்கொள்ளத் தொடங்கினர் ஆதிக்கவாதிகள். குறிப்பாக எகிப்து, லிபியா, சுவீடன் தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதனை முறையாகப் பயிர் செய்யத் தொடங்கினர். அதன் மருத்துவச் சிறப்பை உணர்ந்த பின்னர் பண்டைக்கால மருத்துவத் துறையினரும் தர்ப்பூசணியின் பால் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
அந்த வகையில் தான் தர்ப்பூசணி சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சுவையிலும், நிறத்திலும், வகைகளிலும் நிறைய மாற்றங்களைக் கண்டு வந்துள்ளது. இன்றைக்கு தர்ப்பூசணியில் ஆயிரம் வகை இருப்பதாக உணவியலாளர்கள் கூறுகின்றனர். அதிலும் கிழக்கு ஜப்பான் பிரதேசத்தில் தர்ப்பூசணி காய் விட்டதும் அதனை கனசதுர கண்ணாடிப் பெட்டிகளில் நுழைத்து விடுவார்கள். வளரும் பழம் உருண்டையாக அல்லாமல் கன சதுரமாக வடிவம் பெறும். இதில் என்ன சிறப்பு என்கிறீர்களா.? வேறொன்றும் இல்லைப் பெருந்தகையீர் பெட்டிகளில் அடுக்க, ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நிறையப் பழங்களை எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும். ஆனால் அதற்குக் கூடுதலான விலையை நுகர்வோர் கொடுத்தாக வேண்டும். ஆகையால் கனசதுர தர்ப்பூசணி பணக்காரர்களுக்கான பழமாக இருக்கிறது.
வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட கருப்பின உழைப்பாளிகளுக்குப் பண்ணை முதலாளிகள் சமைத்துக் கொள்ள கிழங்கும், தானியங்களும், மாவு வகைகளும் கொடுத்து விடுவார்கள். அவர்கள் வேலையை முடித்த பின்னர் சமைத்து உண்டு கொள்ள வேண்டும். ஆனால் தர்ப்பூசணி விளைகிற காலத்தில் உழைத்த களைப்பில் சமையல் வேலையில் மெனக்கெடாமல் தர்ப்பூசணியை உண்டு விட்டுப் படுத்துக் கொள்வார்கள். எனவே சமைக்கச் சோம்பல் படுவதால் முற்காலத்தில் தர்ப்பூசணிக்கு சோம்பேறிகளின் பழம் என்று பெயர் வைத்திருந்தார்கள் பண்ணை முதலாளிகள். பொழுதெல்லாம் உழைத்தவன் மேலும் சமைக்கத் தெம்பின்றி பழத்தை உட்கொண்டால் அவன் சோம்பேறியாம். உழைத்தவனுக்கு உணவைக் கூடத் தராமல் வெறும் தானியம் கிழங்கைக் கொடுத்த பண்ணை முதலாளி சுறுசுறுப்பானவனாம். எப்படிப் போகிறது கதை. சுமார் 1500 ஆண்டுகளில் உலகில் அடிமைப்பழமாக அறியப்பட்டிருந்த தர்ப்பூசணிக்கு இன்று ஜப்பான் போன்ற பணக்கார நாடுகளிலும் பணக்காரர் எடுத்துக் கொள்ளும் பழமாக அறியப்பட்டிருக்கிறது.
நல்ல வேளையாக நமக்குத் தர்ப்பூசணி சாமானிய மக்களும் எட்டும் தொலைவில் கிடைக்கிறது. 3500 ஆண்டுகால வரலாறுடைய தர்பூசணி முற்காலத்தில் பழமாக உண்ணும் அளவிற்கு ஊறுகாயாகவும் போடப்பட்டு வந்துள்ளது. விதை முளைத்து விட்டால் போதும் வெறும் தண்ணீரை மட்டுமே குடித்துக் கொண்டு கொடி விட்டுப் பூத்துக் காய்க்கத் தொடங்கி விடும் தர்ப்பூசணி. பகலெல்லாம் வெயிலையும், இரவெல்லாம் பனியையும் குடித்துக் கொண்டு காய் பருத்துக் கனியும். நல்ல சரளைப் பாங்கான நீர் நிற்காத மண்ணில் கொடியாகப் படரும். இதன் விதையை சிறிய மண் சட்டிகளில் நட்டு முளைக்கச் செய்து கொடி விடும் பருவத்தில் மண்ணில் பதியம் இடுகிறார்கள். பெரிய பராமரிப்பு ஏதும் தேவையில்லை. என்ற போதும் தற்காலத்தில் தொழு உரமும், ரசாயன உரமும் இட்டு கூடுதல் மகசூல் பெற முயற்சிக்கிறார்கள் விவசாயிகள்.
வடகிழக்கு ஆப்பிரிக்க நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட தர்பூசணி முன் சொன்னது போல கருப்பின உழைப்பாளர்களால் உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பரவியது. இன்று சீனா தான் தர்ப்பூசணி உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது. உலகத்தில் விளையும் தர்ப்பூசணியில் மூன்றில் இரண்டு பங்கு சீனாவில் விளைகிறது. இந்தியாவில் உபி, மத்திய பிரதேஷ், மேற்கு வங்காளம், அரியானா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பெருமளவு விளைகிறது. என்றாலும் இதனை விரும்பி உண்போர் இந்தியா முழுவதும் பரவலாக இருக்கின்றனர்.
நவம்பர் இறுதியில் நட்டு ஜனவரி பிற்பகுதியில் அறுவடை நடக்கிறது. ஆனால் ஏப்ரல், மே மாதங்களில் பலன் கிடைக்கும்படி பயிர் செய்கின்றனர். சில குறிப்பிட்ட வகைகள் ஆண்டு முழுவதும் அறுவடை செய்யுமாறு பயிரிடப்படுகிறது. ஆனாலும் மார்ச் முதல் மே மாதம் வரை நல்ல வெயிலில் பழுக்கும் பழங்கள் தான் சுவையும் மருத்துவக் குணமும் மிக்கதாக இருக்கின்றன. மணற் பாங்கான நிலம் இதன் விளைச்சலுக்குப் பொருத்தமானது என்றாலும் இன்று அனைத்து விதமான மண்ணிலும் நடத் தொடங்கி விட்டனர். தென்னை, மல்லிகை போன்ற நீண்ட காலப் பயிர்கள் வைத்த பின்னர் ஊடு பயிராகவும் தர்ப்பூசணி வைக்கப்படுகிறது.
பூசணியைப் போல உருண்ட நிறத்தில் இருப்பதால் இதனை நாம் தர்ப்பூசணி என்கிறோம். ஆனால் உண்மையில் இப்பழம் வெள்ளரிப் பழ வகையைச் சேர்ந்ததாகும். பழந்தமிழில் இதனை நீர்ப்பழம் என்றே குறிப்பிடுவர்.
90 சதவீதம் நீரால் நிரம்பிய பழம், மீதி 10 சதவீதம் உள்ள நார்ச் சத்து நீரைப் பிடித்து வைக்கும் கொள் கலனாக இருக்கிறது. இந்த நீரும், நாறும் முழுமையாக மருத்துவக் குணத்தைக் கொண்டுள்ளது. மேலே உள்ள பூச்சினைத் தோல் என்று குறிப்பிட முடியாத அளவிற்குத் தடிமனாக ஓரங்குல அளவிற்கு பழத்தின் நீரையும், குளிர்ச்சியையும் பாதுகாக்கும் கவசமாக இருக்கிறது மேலடுக்கு. இந்தப் பகுதியை மாட்டிற்குப் போட்டால் நாம் பிரியாணியை விரும்பி உண்பது போல் மாடுகள் தோலினை உண்பதைக் காண முடியும்.
மற்ற பழங்களில் சிறிதளவேணும் புளிப்புச் சுவை இருக்கும். ஆனால் நீர்ப்பழத்தில் முழுக்க இனிப்புச் சுவை மட்டுமே. இனிப்பிலும் அடர்ந்த இனிப்பாக இல்லை என்பதால் உடனே ரத்தத்தில் கலந்து உடனடியாக வெளியேறவும் செய்கிறது. உண்டதும் ரத்தத்தில் கலப்பதால் உடனடி ஆற்றலைத் தருவதாக இருக்கிறது. உடனே வெளியேற வேண்டியும் இருப்பதால் சிறுநீரக வடிகட்டியான நெப்ரான்களைத் தூய்மைப்படுத்தி விட்டு தன்னை வெளியேற்றிக் கொள்கிறது. இவ்வளவு நல்ல பையனாக உள்ள இந்த நீர்ப்பழத்தின் மருத்துவக் குணத்தைக் கணக்கில் கொண்டால் இவ்வளவு மலிவான பழம் இன்னொன்று இல்லையென்றே துணிந்து சொல்லலாம்.
வயது முதிர்ந்து எழுபதிற்கு மேற்பட்டவர்கள் முடக்கு வாத நோய்க்கு ஆட்பட்டு நடமாட்டத்தை இழந்து படுத்த படுக்கையாக இருப்பவர்கள் தவிர எந்த வயதினரும் தர்ப்பூசணி எடுத்துக் கொள்ளத் தடையில்லை. பிற பழங்களைக் காட்டிலும் சாந்தமான பழம் தர்ப்பூசணி. இதனைச் சொல்வதற்குக் காரணம் மற்ற பழங்களில் ஏதேனும் சில சத்துக்கள் அடர்ந்து காணப்படும். ஆகவே அவற்றை உள்வாங்கிச் செரிக்க சில உடல் தன்மை உடையவர்களுக்கு முடியாமற் போகக்கூடும். ஆனால் தர்ப்பூசணி அப்படியல்ல. நீர்ச் சத்துடன் மெலிதான இனிப்பும், நார் மிகுந்து இருப்பதால் ஓரளவு காரத்தன்மையும் கொண்டிருக்கிறது. எனவே எத்தகைய உடல் வாகினர்க்கும் தர்ப்பூசணி செரிக்க எளிதாக இருக்கும்.
கூடுதலாக அறவே மாவுத் தன்மை அற்றது என்பதால் வயிற்றிற்கும் சிறு, பெருங்குடல்களை சிரமத்திற்குள்ளாக்காமல் எளிதில் கடந்து செல்லும். இந்தக் கொரோனா காலத்தில் நோயெதிர்ப்புத் திறன் என்ற சொல் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. உண்மையில் உடலில் நோயெதிர்ப்புத் திறனுக்கு உரிய முதன்மைக் களம் சிறு பெருங் குடல்களே ஆகும். இவையிரண்டிலும் உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களும், நுண்ணுயிரிகளும் இயற்கையாகவே மிகுந்துள்ளன. நாம் உண்ணும் உணவிலும், நமது வாழ்வியல் முறையினாலும் இந்த நுண்ணியிரிகள் அழிய நேரிடுகிறது. அவ்வாறு அழியும் போது உடலில் நோயெதிர்ப்புத் திறன் குறையத் தொடங்குகிறது.
சத்துக்கள் குறைவாக உள்ள நொதித்த நீராகாரம், மோர் போன்றவற்றை நாம் எடுத்துக் கொள்கிற பொழுது அவை சிறு பெருங்குடல்களில் உள்ள நுண்ணியிரிகளுக்கு உயிர்ப்பைத் தருகின்றன. அதேபோல நீர்த்தன்மை மிகுந்த காய்கறிகளும் பழங்களும் அதே அளவிற்கு நன்மை செய்கின்றன. அந்த வகையில் தர்ப்பூசணியில் உள்ள நீர் சிறு பெருங்குடல்களுக்கு உயிர்ப்பை வழங்குகிறது. எனவே அப்பகுதிகளில் தேங்கியுள்ள வாயுக்களை விரைவாக நீக்கி விடுவதால் சுமார் 100 கிராம் அளவிற்கு தர்ப்பூசணி சாப்பிட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் சிறுநீர் கழித்ததும் அடிவயிற்றின் கணம் குறைந்தது போன்ற இலகு உணர்வு ஏற்படுவதைக் காண முடியும்.
அதுபோக எளிதில் செரிக்கும் தன்மை உடையதால் தர்ப்பூசணி செரிமானத்திற்காக நம் வயிற்றில் தங்குவதில்லை. ஆகவே இதன் நார்ச் சத்து நம் வயிற்றில் தேக்கமடைந்துள்ள அமிலத்தையும், மாவுப் படிமமாகப் படிந்துள்ள கசடுகளையும் நீக்கி விடுகிறது. செரிமான மண்டலத்தில் உள்ள புண்களையும் விரைந்து ஆற்றுகிறது. வர இருக்கும் கோடையில் நாம் அதிகமும் எடுத்துக் கொள்ள வேண்டிய மிக விலைக் குறைவான எளிதில் கிடைக்கப் போகிற பழமாகிய தர்ப்பூசணி குறித்து அடுத்த வாரமும் விரிவாகப் பார்ப்போம்.