நாளை முன் ஜென்ம வினைகளை தீர்த்து அருளும் மோகினி ஏகாதசி

பெருமாளுக்கு துளசி இலைகள் படைத்து, பெருமாளுக்குரிய மந்திரங்களை மனதார சொல்லி வழிபடுவது அதிக பலனை தரும்.
நாளை முன் ஜென்ம வினைகளை தீர்த்து அருளும் மோகினி ஏகாதசி
Published on

வைகாசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி மோகினி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை (புதன்கிழமை) மோகினி ஏகாதசி ஆகும்.

அமிர்தம்

மகாவிஷ்ணு, பாற்கடலைக் கடையும் போது தேவர்களுக்காக அமிர்தத்தை மீட்டுத் தர மோகினி அவதாரம் எடுத்த நாளே இந்த ஏகாதசியாகக் கொண்டாடப்படுகிறது.

ஏகாதசி என்பது விஷ்ணு பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் ஏகாந்த தினமாகவே இருக்கும். பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கருதப்படும் ஏகாதசி திதி, ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தது. விஷ்ணு பகவான் வைகாசி மாத வளர்பிறை ஏகாதசியின் போதுதான் மோகினி அவதாரம் எடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. அதனால்தான் இதற்கு `மோகினி ஏகாதசி’ என்ற பெயர் வந்தது. இந்த நல்ல நாளில், விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் இந்தப் பிறவியின் வினைகள் மட்டும் அல்லாமல் முந்தைய பிறவியின் வினைகளும் சேர்ந்து அழியும் என்பது ஐதிகம்.

திரிஷ்தபுத்தி

முன்னொரு காலத்தில், சரஸ்வதி நதிக் கரையில் பத்ராவதி எனும் நகரத்தை `தியுதி மன்’ என்பவன் ஆண்டு வந்தான். அவனுடைய அரசில் தனபாலன் என்ற வணிகன் ஒருவன் இருந்தான். தனபாலன் சிறந்த திருமால் பக்தன். அவனுக்கு 5 மகன்கள் இருந்தனர். அவர்களுள் இளையவனான `திரிஷ்தபுத்தி’ மிகவும் கீழ்த்தரமான செய்கைகளைக் கொண்டவன். திருடனாகவும், பெரியவர்களை மதிக்காமல், கடவுள்களை நிந்திப்பவனாகவும் இருந்தான். அவனது தீய நடவடிக்கைகளைப் பொறுக்க முடியாத தனபாலன், அவனை வீட்டை விட்டு வெளியேற்றினான். திரிஷ்தபுத்தி ஒரு திருடனாக மாறி கொள்ளையடிப்பதில் ஈடுபட்டான். காவலர்களால் பிடிபட்டு, பல முறை தண்டிக்கப்பட்டான். கடைசியில் அவன் நாடுகடத்தப்பட்டான். காட்டில் வாழ்ந்தபோது அவன் நோய்வாய்ப்பட்டு, அன்றாட வாழ்க்கையை வாழவே சிரமப்பட்டான்.

முனிவர்

ஒவ்வொரு நாளையும் நரகமாகக் கழித்துக் கொண்டிருந்தவன், ஒருநாள் காட்டில் கவுண்டின்ய முனிவரின் குடிலைக் கண்டான். முனிவர் கங்கையில் நீராடிவிட்டு குடிலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவருடைய ஈர ஆடையிலிருந்து சிதறிய நீர்த்துளிகள் சில திரிஷ்தபுத்தியின் மேல் விழுந்தன.

உடனே, அவன் மனதில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அவன், தான் செய்த தவறுகள் அனைத்துக்கும் பிராயச்சித்தம் தேட நினைத்து முனிவர் காலடியில் விழுந்தான். திரிஷ்தபுத்தியின் கதையைக் கேட்ட முனிவர், ``பாவங்கள் செய்யப் பல வழிகள் இருப்பதுபோல, அவற்றிலிருந்து விடுதலை பெறவும் பல வழிகள் இருக்கின்றன. அவற்றுள் தலைசிறந்தது மோகினி ஏகாதசி விரதம். அன்றைய நாளில் விரதமிருந்து மனம், மொழி, மெய் ஆகியவற்றால் பெருமாளை வழிபாடு செய்தால் உனக்கு, உன் பாவங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்” என்றார்.

மோகினி ஏகாதசி

திரிஷ்தபுத்தியும் தன் உயிர் பிரியும் நாள்வரை, ஒவ்வொரு வருடமும் மோகினி ஏகாதசி நாளில் முனிவர் சொன்ன வண்ணமே விரதம் இருந்தான். இறுதியில் ஆயுள் முடியும்போது பாவங்கள் அனைத்தும் நீங்கி கருட வாகனமேறி, வைகுண்ட பதம் அடைந்தான். மோகினி ஏகாதசியின் பெருமையை உணர்த்தும் இந்தக் கதை ஏகாதசி மகாத்மியத்தில் உள்ளது. இறுதியில் விரதத்தின் புண்ணிய பலனால், கருட வாகனத்தில் விஷ்ணுலோகத்தை அடையும் பிராப்தியும் பெற்றான். இவ்விரதத்தினால் மோகம் என்னும் மாயை அகன்று, மனிதர் முக்தியை பெறுகிறார். இவ்வுலகில் இவ்விரதத்திற்கு இணையான விரதம் வேறெதுவும் இல்லை. இவ்விரத மஹாத்மிய கதையை கேட்பவரும், படிப்பவரும், ஒராயிரம் கோ (பசு) தானம் செய்த புண்ணியத்திற்கு இணையான புண்ணியத்தை பெறுவர்.

பொதுவாகவே, ஏகாதசி விரதம் பல புண்ணிய பலன்களை அருள வல்லது. பாவங்கள் போக்கி, நல்லருள் தருவது. அதிலும் மோகினி ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பகவான் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து, தேவர்களுக்கு அமிர்தம் வழங்கியதுபோல், இந்த விரதத்தை மேற்கொள்ளும் அனைவருக்கும் இறைவன் நன்மையை வாரிவழங்குவார் என்பது ஐதிகம். கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழும் கணவன், மனைவி இந்த விரதத்தை அனுஷ்டித்தால், கருத்து வேறுபாடு நீங்கி, சேர்ந்து வாழ்வார்கள் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.

துளசித் தீர்த்தம்

துளசித் தீர்த்தம்

இந்த நாளில் விரதம் இருந்து, துளசித் தீர்த்தம் மட்டுமே அருந்தி எட்டெழுத்து மந்திரத்தை உபதே சித்து, பாரணை செய்து விரதம் முடிக்க வேண்டும். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதும் செய்துவர, பிறவிப் பிணி நீங்கி இறைவனின் திருவடிகளைச் சேரலாம் என்பது நம்பிக்கை.

மந்திரம்

மோகினி ஏகாதசி அன்று துளசி செடிக்கு முன்பாக ஒரு விளக்கு ஏற்றி வைத்து, “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்ற மந்திரத்தை 11 முறை சொல்லி வழிபட்டால் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி விடும். திருமண வாழ்க்கை இனிமையானதாக இருக்கும்.

இந்த நாளில் குளித்து முடித்த பிறகு மஞ்சள் நிற ஆடை அணிந்து, பெருமாளுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி, பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்தோ அல்லது நைவேத்தியமாக படைத்தோ வழிபடலாம். மஞ்சள் மலர்கள், சந்தனம், அட்சதை ஆகியவை படைத்து வழிபடலாம்.

பெருமாளுக்கு துளசி இலைகள் படைத்து, பெருமாளுக்குரிய மந்திரங்களை மனதார சொல்லி வழிபடுவது அதிக பலனை தரும். மாலையில் விளக்கேற்றி வைத்து, மோகினி ஏகாதசி விரத கதைகளை கேட்பதும், படிப்பதும் மிகப் பெரிய புண்ணிய பலனை தரும். மோகினி ஏகாதசி அன்று விரதம் இருக்க முடியாதவர்களும் இந்த ஆன்மீக பரிகாரங்களை நம்பிக்கையுடன் செய்வதால், பெருமாளின் அருளால் அனைத்து விதமான பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்தும் விடுபட முடியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com