6-ம் எண் ஆதிக்கத்தின் பலன்கள்

பெயரெண் 6 தனித்த சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த எண்.
6-ம் எண் ஆதிக்கத்தின் பலன்கள்
Published on

பிறவி எண் 6

சுக்கிரன்: 6, 15, 24, 33, 42, 51, 60, 69, 78, 87, 96, 105, ஆகிய எண்களில் பெயர் அமைந்தவர்களும் 6, 15, 24-ந்தேதிகளில் பிறந்தவர்களும் சுக்கிரனின் ஆதிக்கம் பெற்றவர்கள். 6 என்ற எண் சுக்கிரனின் ஆதிக்கத்தைக் குறிக்கிறது.

ஒன்பது எண்களிலும் பிறவியிலேயே அதிர்ஷ்டசாலிகள் 6-ம் எண்காரர்கள். மனிதன் ஆசை இல்லாமல் வாழமுடியாது. ஆசைக்கு அளவு இல்லை. ஆசை, சொகுசு,காதல்,காம எண்ணங்களுக்கும் சுக்கிரனே அதிபதி. அலங்காரம், ஆடம்பரத்தில் விருப்பம், அமைதியான தோற்றம் இவை சுக்கிரனின் குணங்கள்.

ஆடம்பரமான வீடு, சொத்து சுகம், வாசனை திரவியம் உபயோகிப்பது கவர்ச்சியான தோற்றம், அடிக்கடி தன்னை அழகு படுத்திக் கொள்வது, காதல் சார்ந்த எண்ணங்கள், போன்றவைகள் 6-ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கும். ஒரு வீட்டில் 6-ம் எண்ணின் ஆதிக்கத்தில் குழந்தைகள் பிறப்பது, அந்தக் குடும்பத்தின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.

பெயரெண் 6: தனித்த சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த எண். உலக சுகங்களை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் மிகுதியாக இருக்கும். இவர்களுக்கு உலகமே சொர்க்கமாகத் தெரியும். வாழ்க்கை வாழ்வதற்கே என்று இன்ப உணர்வுடன் வாழ்பவர்கள். இயற்கையிலேயே போகங்கள், வாசனைத் திரவியங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றை அனுபவிக்கும் ஆசையும், அதிர்ஷ்டமும் உண்டு.

பெயரெண் 15: சூரியன், புதனின் ஆதிக்கம் நிறைந்த எண். கலைகளில் தேர்ச்சியும், நகைச்சுவைப் பேச்சும் உண்டு. மக்களை வசீகரிக்கும் தன்மை இயற்கையிலேயே உண்டு. பேச்சுத்திறமையும், கவர்ச்சியும் உண்டு. கலைகளில் தேர்ச்சி, நகைச்சுவையுடன் பேசுதலில் சாமர்த்தியம், எவரையும் பார்த்தவுடன் புரியும் தன்மை உண்டு. அதனால் நாடகம், சினிமா, டி.வி. போன்றவற்றில் ஈடுபடுவார்கள். நல்ல புகழும், அதிர்ஷ்டமும் தேடி வரும்.

பெயரெண் 33: குருவின் ஆதிக்கத்தைப் பிரதிபலிக்கும் சுக்கிரனின் எண். அருளும், பொருளும் ஒருங்கே வளரும். லட்சுமி கடாட்சம் நிரம்பியவர்கள். செல்வத்தைக் குவித்திடும், மகாலட்சுமியின் ஆசி பெற்றவர்கள். தானிய விருத்தி, குறைவற்ற செல்வம், ஐஸ்வர்யம் நிரம்பியவர்கள்.

பெயரெண் 42: ராகு மற்றும் சந்திரனின் ஆதிக்கம் கலந்த எண். ஏழையாக பிறந்து பெரிய அதிகாரப் பதவியை அடைவார்கள். பேராசை மனப்பான்மை படைத்தவர்கள். பிறரை ஏமாற்றியும், வஞ்சித்தும் பிழைப்பார்கள். இவர்களது மனதில் அதிக காமமும், பணத்தாசையும் இருக்கும்.

பெயரெண் 51: புதன் மற்றும் சூரியனின் ஆதிக்கம் இணைந்து புத ஆதித்ய யோகம் பெற்ற எண். ஆறாம் எண்களில் இதுவே அதிர்ஷ்டகரமான எண். திடீர் முன்னேற்றம். சாமானியர்களாக இருந்தவர்கள் கூட எதிர்பாராத வகையில் பெயரும் புகழும் அடைவார்கள்.

பெயரெண் 60: தனித்த சுக்கிரனின் ஆதிக்க எண் இவர்கள் மற்றவர்களின் கலைத் திறமையைப் பாராட்டுவார்கள். அடக்க சுபாவமும் ஆழ்ந்த கருத்துக்களும் உண்டு. பொருள் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். யாரால் என்ன நன்மை விளையும் என்பதை உணர்ந்து அவர்களை சரிக்கட்டி காரியம் சாதித்துக் கொள்வார்கள்.உலக கலைகளைஅனுபவிக்கப் பிறந்தவர்கள் இவர்களே.

பெயரெண் 69: சுக்கிரன் மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் சேர்ந்த எண். கருணை உள்ளம் படைத்த யாராவது ஒருவரின் உதவியால் கல்வியை பெறுவார்கள். அரசாங்கத்தால் ஆதரவு உண்டு. அந்தஸ்துக்கு மீறிய வாழ்க்கைத் துணை அமையும். ராஜவாழ்க்கை வாழ்வது இந்த எண்ணின் பலமாகும்.

பெயரெண் 78: கேது மற்றும் சனியின் ஆதிக்கம் நிறைந்த எண். அதிக முதலீட்டில் சுய தொழில் செய்பவர்களுக்கு தொழில் நெருக்கடி மற்றும் தொழிலாளர்கள் மூலம் மிகுதியான மன உளைச்சல், கடன் சுமையை உருவாக்கும். முதலீடு குறைந்த அல்லது முதலீடு இல்லாத தொழில்களுக்கு ஒரளவு சாதகமான பலன் தரும் எண்.

‘பிரசன்ன ஜோதிடர்’ ஐ.ஆனந்தி
‘பிரசன்ன ஜோதிடர்’ ஐ.ஆனந்தி

பெயரெண் 87: சனி, கேதுவின் ஆதிக்கம் சார்ந்த எண். அதிக உழைப்பும் குறைந்த ஊதியமும் உண்டு. சொந்த தொழிலுக்கு ஏற்ற எண் அல்ல. தொழில் மூலம் வம்பு, வழக்கு உண்டு. சமூக சேவை, பொதுத் தொண்டு நிறுவனங்களுக்கு ஏற்ற எண். கடவுள், சாஸ்திரங்கள் மீது மிகுந்த அவநம்பிக்கை கொள்வார்கள்.

பெயரெண் 96: செவ்வாய் மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் சேர்ந்த எண். அரசாங்க ஆதரவு இவர்களுக்குக் கிடைக்கும். அடக்கமும், அமைதியும் இருந்தாலும் அழுத்தம் நிறைந்தவர்கள். பெரிய இடத்துச் சம்பந்தமும்,பெரும் பதவிகளும் தேடி வரும். மிகவும் துணிச்சல்காரர்கள்.

பெயரெண் 105: சூரியன் மற்றும் புதனின் ஆதிக்கம் கலந்த அதிர்ஷ்டமான எண். சகலகலா வல்லவர்களாக இருப்பார்கள். சிறு வயதிலிருந்தே இந்த எண்காரர்கள் ஒழுக்கம், பொறுமை போன்ற நல்ல குணங்களை விடாமுயற்சியுடன் வளர்த்துக் கொள்வார்கள். ராஜ குணங்கள் உடம்போடு ஒட்டிப் பிறந்தவர்கள். பிறவி எண் என்பது ஒருவர் பிறந்த தேதியைக் குறிக்கும் எண் ஆகும். விதி எண் என்பது ஒருவரின் முழு பிறந்த தேதி மாதம், வருடம் அனைத்தையும் கூட்டி வரும் ஒற்றை இலக்க எண் ஆகும்.

பிறவி எண் 6 விதி எண் 1

சுக்கிரன் மற்றும் சூரியன் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் சூரியன் பலம் பெற்றால் பொறுப்பானவர்களாக, வசதியானவர்களாக, புகழ் பெற்றவர்களாக இருப்பார்கள். தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும், தங்களது ஆலோசனைகளையும் கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். பணவரவை நிர்வாகம் செய்யும் தொழிலில் இருப்பார்கள். தங்களது கலாச்சாரத்தை விட்டு வெளியே வரத் தயங்குவார்கள். சுய ஜாதகத்தில் சூரியன், சுக்கிரன் பலம் குறைந்தால் கண் பாதிப்பு நிச்சயம் உண்டு. தைரியம் வீரியம் குறைந்தவர். வருமானத்தை விட நிர்வாகச் செலவு மிகுதியாக செய்வார்கள்.

பிறவி எண் 6 விதி எண் 2

சுக்கிரன் மற்றும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த எண். இளமையான தோற்றம் கொண்டவர்களாகவும் இனிமையாக பேசுபவர்களாகவும் இருப்பார்கள். பல திறமைகளை தன்னுள் கொண்டவர்கள். திட்டமிட்டு செயல்பட்டு வாழ்நாளில் தைரியசாலியாக வலம் வருவார்கள். எதையும் எளிதில் புரிந்து கொண்டு வேலையை சிறப்பாக முடிப்பார்கள். ரகசியத்தைக் வாழ்நாள் முழுவதும் காப்பவர்கள். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்பவர்கள். இவர்களுக்குக் காதல் மீது மோகம் அதிகம். துணிந்து காதலில் ஈடுபடுவார்கள். சுய ஜாதகத்தில் சுக்கிரனும், சந்திரனும் பலம் குறைந்தால் தான் மட்டும் அறிவாளி என்று நினைக்க கூடியவர். பெண்களே பெண்களை எதிரியாக நினைப்பவர்கள்.

பிறவி எண் 6 விதி எண் 3

சுக்கிரன் மற்றும் குருவின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் சுக்கிரனும் குருவும் பலம் பெற்றால் ஒருவிதக் குருட்டுத் தைரியம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். புதிய சாதனைகளை விரைந்து செய்யவேண்டும் என்ற விருப்பம் நிறைந்தவர்கள். இவர்களுக்கு இறைவனின் அருளால், திடீர் யோசனைகள் அல்லது ஞானோதயம் ஏற்படும். எல்லாத் துறையிலும் தனித் தன்மையுடன் ஜொலிப்பவர்கள். எடுத்த காரியத்தில் வெற்றி தரும் ராஜவசியம் கொண்ட எண். அரசனைப் போன்று அனைத்து வசதிகளுடனும் வாழ்வார்கள். சுய ஜாதகத்தில் குரு சுக்கிரன் சம்பந்தம் இருந்தால் பல பூக்களை நுகரும் வண்டுகளாக இருப்பார்கள். முகத்தைப் பார்த்து பேச மாட்டார்கள். மாற்றான் தோட்டத்து மல்லி கைக்கு மணம் அதிகம் என்று நினைப்பார்கள்.

பிறவி எண் 6 விதி எண் 4

சுக்கிரன் மற்றும் ராகுவின் ஆதிக்கம் கலந்த எண். ஆண்களுக்கு கடுமையான திருமணத் தடை அல்லது திருமணத் தோல்வியைத் தரும் ஆதிக்க எண். இவர்களுக்கு துணிச்சலும் அறிவுத்திறமையும் உண்டு. நன்றாக முன்னுக்கு வந்துவிடுவார்கள். தன் திறமையினால் வேகமாக முன்னேறுவார்கள். ஜனவசியர். வெற்றிகளைப் பெறக் கூடியவர். சுயநலவாதிகள். திடீரென தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு பொருள்களை இழக்கும் அபாயமும் உண்டு. முறை தவறிய காதல் விவகாரங்களை தவிர்க்க வேண்டும்.

பிறவி எண் 6 விதி எண் 5

குரு மற்றும் புதனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் சுக்கிரனும் புதனும் பலம் பெற்றால் முக்கியப் பிரமுகராக விளங்குவார்கள். அரசாட்சி, பொது மக்கள் தொடர்பு மற்றையோரைக் கவருகின்ற ஆற்றலைப் பெறுவார்கள். மனோசக்தி புத்திக் கூர்மையாகவும், சிறந்த பேச்சாற்றல், இரட்டை அர்த்தம் நிறைந்த சொற்களைப் பிரயோகிப் பவராகவும் தடையில்லாமல் பேசுபவராகவும். இருப்பார்கள். அனைத்து முயற்சிகளிலும் வெற்றிக் கனியை எட்டிப் பிடித்து விதியை மதியால் வெல்பவர்கள். திடீர்ப் புகழ் உண்டு. சுய ஜாதகத்தில் புதனும், சுக்கிரனும் வலிமை குறைந்தால் நடித்து பிறரை ஏமாற்றி தந்திரமாக பணம் சம்பாதிப்பார்கள். காதல் என்ற பெயரில் ஊர் சுற்றி பல பெண்களை அல்லது ஆண்களை ஏமாற்றி பைத்தியமாக சுற்றலில் விடுவார்கள்.

பிறவி எண் 6 விதி எண் 6

தனித்த சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றால் சிறு வயது முதலே குறிப்பிட்ட லட்சியத்துடன் வாழ்க்கையை நடத்துவார்கள். சுய முயற்சி, தன்னம்பிக்கை, பெரும்புகழ் உண்டாகும். அயல் நாட்டு பிரயாணங்கள் ஏற்படும். மிகுந்த செல்வச் செழிப்புடன் பொருளாதார கஷ்டம் இல்லாமல் மிகவும் நிம்மதியான வாழ்க்கை நடத்துவார்கள். விபரீத ராஜயோகத்தை அனுபவிப்பார்கள். சுய ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைந்தால் இளம் வயதில் கஷ்டம் தெரியாத வாழ்க்கையை வாழ்ந்தால் வாலிப வயதில் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தீராத நோய், கடனில் அவதிப்படுகிறார்கள்.

பிறவி எண் 6 விதி எண் 7

சுக்கிரன் மற்றும் கேதுவின் ஆதிக்கம் நிறைந்த எண்.சுய ஜாதகத்தில் சுக்கிரன் கேது பலம் பெற்றால் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். அறிவு என்கிற அற்புதத்தின் விளக்கம் இவர்கள் தான். புதியதாக எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வமும், அதை வாழ்வில் உடனடியாக பயன்படுத்திக் கொள்ளும் திறமையும் உண்டு. எந்த வகையான சோதனைகளையும், சிரித்துக் கொண்டே சமாளித்து விடுவார்கள். இந்த எண்காரர்களின் புத்தி அறிவு மிகவும் அற்புதமானது. மற்ற எண்காரர்கள் தங்களது துன்பங்களையும், துயரங்களையும் கண்டு கலங்கும் போது இவர்கள் மட்டும், அவைகளைச் சவால்களாக எடுத்துக் கொள்வார்கள். சுய ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைந்து கேது பலம் பெற்றால் ஆண்களுக்கு கடுமையான திருமணத் தடையைத் தரும் எண்ணாகும்.

பிறவி எண் 6 விதி எண் 8

சுக்கிரன் மற்றும் சனியின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் கக்ரன் சனி பலம் பெற்றால் பொருளாதாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. திருமணத்திற்கு பிறகு வளர்ச்சி இரட்டிப்பாகும். நிரந்தரமான வருமானம் தரக்கூடிய தொழில் அமையும். தொட்டது துலங்கும்.கூட்டுத் தொழிலில் ஆதாயம் கிடைக்கும். எதையும் நேர்வழியில் செய்யக் கூடியவர்கள். சனி, சுக்கிரன் சம்பந்தம் பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண வாழ்க்கையைத் தருகிறது.சுய ஜாதகத்தில் சுக்ரன், சனி பலம் குைறந்தால் திடீரென தனலாபம் குறைவு ஏற்படும்.எளிதில் எரிச்சலும் கோபமும் கொள்வார்கள்.

பிறவி எண் 6 விதி எண் 9

சுக்கிரன் மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் கலந்த எண். சுய ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் பலம் பெற்றால் சுகமான வாழ்க்கை, புகழ்,உயர்ந்த அந்தஸ்து, விடா முயற்சி, மன உறுதி கொண்டவர்கள். ஊர் பெரிய மனிதர்களாக விளங்குவார்கள். சூழ்நிலைக்கு தகுந்தபடி தன்னை மாற்றி கொள்ளும் குணம் கொண்டவர்கள். அறிவுத் திறனும், திறமையும் உண்டு. தொழில் நெளிவு, சுழிவுகள் தெரிந்தவர்கள். வெற்றி வீரர், லட்சியவாதி. முன்னேற்றத்தில் தீவிர ஆர்வம் உள்ளவர்கள் முதுமையிலும் கம்பீரமான இளமையுடன் இருப்பார்கள்.சுய ஜாதகத்தில் செவ்வாயும், சுக்கிரனும் பலம் குறைந்தால் எதிர்காலம் பற்றி பயம் இல்லாதவர்கள். சுய இன்பத்திற்காக சொத்து சுகங்களை இழப்பார்கள்.

பொதுவாக பெயரெண் 6 வரும்படி பெயர் வைக்கும் போது 42, 78, 87 ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

செல்: 98652 20406

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com