

புதன்
5,14, 23,32,41,50,59,68,77,86,95,104 ஆகிய எண்களில் பெயர் அமைந்தவர்களும் 5,14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் புதனின் ஆதிக்கம் பெற்றவர்கள். இது அனைவராலும் மிகவும் விரும்பப்படும் எண். அனைத்து எண்களுக்கும் இந்த எண் பொதுவானதும், மிக நன்மையும், அதிர்ஷ்டமும் தரும் எண்ணாகும்.
புதனின் ஆதிக்கம் உள்ளவர்களுக்கு அதிக யோகங்களைக் கொடுக்கும். பெரும்பாலான எண்ணியல் நிபுணர்கள் பெயர் எண் 5ல் வரும்படி அமைத்துக் கொடுக்கிறார்கள். புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் பல திறமைகளை தன்னுள் கொண்டவர்கள். தான் மட்டும் அறிவாளி என்று நினைக்க கூடியவர்.
பெயர் எண் 5: தனித்த புதனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுகமான வாழ்க்கை, புகழ், உயர்ந்த அந்தஸ்து, விடாமுயற்சி, மன உறுதி கொண்டவர்கள். அறிவு என்கிற அற்புதத்தின் விளக்கம் இவர்கள் தான். புதியதாக எதையும் அறிந்து கொள்ளும் ஆர்வமும், திறமையும் உண்டு.
பெயர் எண் 14: சூரியன் மற்றும் ராகுவின் ஆதிக்கம் கலந்த எண். சூழ்நிலைக்கு தகுந்தபடி தன்னை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்டவர்கள். வியாபாரத்திற்கு ஏற்ற எண். வியாபாரத்தில் திடீர் லாபம் ஏற்படும். மக்களைக் கவர்கின்ற சிறந்த எண். அரசியலிலும் இவர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டு. காதல் திருமணத்தில் ஏமாற்றம் அடைவார்கள்.
பெயர் எண் 23: சந்திரன் மற்றும் குருவின் ஆதிக்கம் கலந்த குருச்சந்திர யோகம் பெற்ற அதிர்ஷ்டமான எண். எடுத்த காரியத்தில் வெற்றி தரும் ராஜவசியம் கொண்ட எண். பிறர் செய்ய முடியாத காரியங்களையும் செய்து சாதிப்பார்கள். மித மிஞ்சிய அதிர்ஷ்டசாலிகள்.
பெயர் எண் 32: குரு மற்றும் சந்திரன் ஆதிக்கம் கலந்து குருச்சந்திர யோகம் பெற்ற எண். பல விதமான மனிதர்கள் ஆதரவு உண்டு. புதுப்புது கருத்துக்களை தன்னையறியாமல் வெளிப்படுத்துபவர்கள். சமயோசித புத்தி, வேடிக்கையாக பேசும் திறன், மேதாவித் தனம் நிரம்பியவர்கள். முதுமையிலும் இளமையாக இருப்பார்கள்.
பெயர் எண் 41: ராகு மற்றும் சூரியனின் ஆதிக்கம் சேர்ந்த எண். மற்றவர்களைவிட அறிவுத் திறனும், திறமையும் உண்டு. இவர்கள் தொழில் நெளிவு, சுழிவுகள் தெரிந்தவர்கள். மற்றவர்களோடு இணைந்து செயல்படுவதில் அதிக விருப்பம் இல்லாதவர்கள். ஸ்திரமான சுகவாழ்வு வாழ்வார்கள்.
பெயர் எண் 50: தனித்த புதனின் ஆதிக்கம் கொண்ட எண். மிதமிஞ்சிய புத்திசாலி. கல்வி, தேர்வில் புலமை, பிரசித்தி பெற்ற ஆசிரியர். 50 வயதுக்கு மேல் திடீர் தனலாபம், ஆயுள் அதிகமாகும். அடக்கம், அன்பு செலுத்துதல், புகழ் விரும்பாமை, பேராசையற்ற மனப்போக்கு ஆகிய குணங்கள் காணப்படும்.
பெயர் எண் 59: புதன் மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் கலந்த எண். நிறையப் பணம் கிடைப்பதென்றால், தீய வழிகளிலும் துணிந்து இறங்கி விடுவார்கள். இவர்களைப் புகழ்ந்தால் அப்படியே மயங்கி விடுவார்கள். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிக எளிதில் தீர்வுசொல்லி விடுவார்கள்
பெயர் எண் 68: சுக்கிரன் மற்றும் சனியின் ஆதிக்கம் இணைந்த எண். அதிர்ஷ்டமான எண்ணல்ல. வசதியான, வேலைபார்க்கும் மனைவியையே தேடுவார்கள். பணம் சம்பாதிக்கும் தொழில்களில் இவர்களது எண்ணம் செல்லும். எவ்வளவு பெரிய காரியமானாலும் பயமோ, தயக்கமோ இன்றித் துணிந்து ஈடுபட்டு துன்பம் அடைவார்கள்.
பெயர் எண் 77: கேதுவின் ஆதிக்கத்தை பிரதிபலிக்கும் புதனின் எண். நல்ல தெய்வீக வாழ்க்கை அமையும். அறிவும், தெளிவும் உண்டு. இவர்கள் மற்றவர்களை மதிப்பவர்கள். இவர்களின் பேச்சிலும் நடத்தையிலும் ஒருவித ஈர்ப்புச் சத்தி உண்டு. சிறு வயது முதலே குறிப்பிட்ட லட்சியத்துடன் வாழ்க்கையை நடத்துவார்கள்.
பெயர் எண் 86: சனி மற்றும் சுக்ரனின் ஆதிக்கம் நிறைந்த எண். சொந்தத் தொழில் செய்யவே இவர்கள் விரும்புவார்கள். ஆனால் மற்றவர்களிடம் வேலை செய்யும் அமைப்பே உண்டாகும். தான் வேலை பார்க்கும் முதலாளிகளுக்கு பல ஆலோசனைகளையும், பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளையும் கூறுவார்கள்.
பெயர் எண் 95: செவ்வாய் மற்றும் புதனின் ஆதிக்கம் கலந்த எண். தங்களது பேச்சிலும், முடிவு எடுப்பதிலும் வேகமாகச் செயல்படுவார்கள். மற்றவர்களுக்குப் புரியவில்லையென்றால் கோபம் எளிதில் வந்துவிடும். தங்களைப் பற்றி பலர் வியப்போடு பேசக்கூடிய சூழ்நிலையை அமைத்து மிக சுலபமாக பிரபலமாகி விடுவார்கள்.
பெயர் எண் 104: சூரியன் மற்றும் ராகுவின் ஆதிக்கம் சேர்ந்த எண். விசேஷமாக தொடங்கிய வாழ்க்கை போகப் போகச் சுமாரான நிலைக்கு வரும். புகழ் மட்டும் மிஞ்சும். தங்களின் அறிவாற்றல் சாதனைகள் மூலம் மக்களுக்கு மத்தியில் புகழ் பெறுவார்கள். இவர்களது வாழ்வில் பெருமளவிற்கு பொருளாதாரம் பெருகாது. பிறவி எண் என்பது ஒருவர் பிறந்த தேதியைக் குறிக்கும் எண் ஆகும். விதி எண் என்பது ஒருவரின் முழு பிறந்த தேதி மாதம், வருடம் அனைத்தையும் கூட்டி வரும் ஒற்றை இலக்க எண் ஆகும்.
பிறவி எண் 5, விதி எண் 1
புதன் மற்றும் சூரியன் ஆதிக்கம் கலந்த புத ஆதித்ய யோகம் நிறைந்த எண். ஜாதக ரீதியாக சூரியனும் புதனும் பலம் பெற்றால் புத்திக் கூர்மை, விவேகம் நிறைந்தவர்கள். குலத் தொழிலைச் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள். எந்த படிப்பு அறிவும் இல்லாத இந்த அமைப்பினர் பலர் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டு சாதனையாளர் பட்டியலில் இடம் பெறுகிறார்கள். பலர் இலக்கணப் பிழை இல்லாமல் தெளிவாக ஆங்கிலம் எழுதுவார்கள், பேசுவார்கள். உள்ளுணர்வு நிரம்பியவர்கள். புதனும், சூரியனும் சுய ஜாதகத்தில் அசுபத் தன்மையுடன் செயல்பட்டால் கிடைக்கும் சந்தர்ப்பத்தையும், வாய்ப்பையும் பயன்படுத்த தெரியாதவர்கள்.
பிறவி எண் 5 விதி எண் 2
புதன் மற்றும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் புதனும் சந்திரனும் பலம் பெற்றால் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் இருக்கும். பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை உணரும் வலிமை உண்டு. கடினமான விடாமுயற்சி உள்ளவராக இருப்பார்கள். பகல் இரவு பாராமல் உழைத்து அனைத்து வசதிகளையும் தேடிக்கொள்பவர்கள். வாய் ஜாலம் நிறைந்தவர்கள். சந்திரனைப் போல வருமானம் நிலையற்றதாக இருக்கும். சுய ஜாதகத்தில் புதனும் சந்திரனும் பலம் குறைந்தால் மன சஞ்சலம் மிகுந்தவர்கள். வெளித் தோற்றத்திற்கு நிம்மதியாக வாழ்பவர்கள் போல் இருந்தாலும் மனதில் துக்கம், துயரம் நிறைந்தவர்கள்.
பிறவி எண் 5, விதி எண் 3
புதன் மற்றும் குருவின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் புதன் குரு பலம் பெற்றால் நல்ல கல்வி கற்று உயர்ந்த உத்தியோகம், பதவியில் இருப்பார்கள். இவர்களை விட இவர்களின் குழந்தைகள் கல்வியில் படிப்பில் படு சுட்டியாக கெட்டியாக இருப்பார்கள். இன்சூரன்ஸ், உயில் சொத்து, போட்டி, பந்தய வெற்றி போன்ற அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பெரிய பதவிகளைப் பெறுவார்கள். சிறிய முயற்சி செய்தால் கூட எல்லாம் தானாகவே சுபமாக நடந்து முடியும். சுய ஜாதகத்தில் புதனும் குருவும் பலம் குறைந்தால் பலருக்கு நல்ல உயர்கல்வி அமைந்தாலும் திறமைக்கேற்ற ஊதியம் கிடைக்காது.
பிறவி எண் 5 விதி எண் 4
புதன் மற்றும் ராகுவின் ஆதிக்கம் நிறைந்த எண். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற பழமொழி இவர்களுக்கு மிகப் பொருந்தும். துரும்பையும், தூணாக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. தொழில் ஆர்வம் நிறைந்தவர்கள். எல்லா விதமான தொழில் ஞானம் இருந்தாலும் நிலையற்ற எண்ணத்தால் எதையும் சாதிக்க முடியாது. தனிமையை விரும்புவார்கள் அல்லது கடன், எதிரி தொல்லைக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்வார்கள். கணித பாடத்தில் ஆர்வம் குறையும். சிலர் பல முறை பெயரில் திருத்தம் செய்வார்கள். சிலருக்கு ஜாமின், காசோலை வழக்கு இருக்கும். மனக்கவலை, மனச்சோர்வு, பய உணர்வு, அரிப்பு நோய் உண்டு.
பிறவி எண் 5 விதி எண் 5
தனித்த புதனின் ஆதிக்கம் நிறைந்த எண். ஜாதகத்தில் புதன் வலிமை பெற்றவர்கள் நல்ல அழகான தோற்றம் உடையவர்கள். இவர்களின் பேச்சிலும் நடத்தையிலும் ஒருவித ஈர்ப்புச் சத்தி உண்டு. மிதமிஞ்சிய புத்திசாலி. நல்ல கல்வி ஞானம் உண்டு. பிறரைத் தூண்டிவிட்டு வேகமாக எந்த வேலையையும் வாங்கி விடுவார்கள். உடல் உழைப்பை விட மூளை உழைப்பில் சிறந்து விளங்குவார்கள். சுய ஜாதகத்தில் புதன் வலிமை இழந்தவர்கள் இளகிய மனத்தால் எல்லோரையும் எளிதில் நம்பி கொடுத்து விட்டு பின் யோசிப்பார்கள். நிறைய நண்பர்கள் இருப்பார்கள்.
பிறவி எண் 5 விதி எண் 6
புதன் மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த எண். ஜாதகத்தில் புதனும் சுக்ரனும் வலிமை பெற்றால் அழகும், இளமையும் கவர்ச்சியும் நிரம்ப பெற்றவர்கள். தாங்கள் உடுத்தும் உடைகள் மற்றும் அணியும் ஆபரணங்கள் மிகவும் மதிப்பாகத் தெரிய வேண்டும் என்று விரும்புவார்கள். ஜோதிடம், வைத்தியம், நடிப்பு, போன்ற கலைகளில் ஈடுபாடு உண்டாகும். பலதுறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள். காதல் திருமணம் அல்லது நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும். சுய ஜாதகத்தில் புதனும், சுக்கிரனும் பலம் குறைந்தால் தவறான, நட்பால் காதல் திருமணத்தால் மனஸ்தாபம் உண்டு. திருமணமான தம்பதிகளுக்கு கருத்து வேறுபாடு, பிரிவினை இருக்கும்.
பிறவி எண் 5 விதி எண் 7
புதன் மற்றும் கேதுவின் ஆதிக்கம் கலந்த எண். சுய ஜாதகத்தில் புதன், கேது சம்பந்தம் இல்லாமல் இருப்பது சிறப்பு. புகழ், அந்தஸ்து சுயகவுரவம் இவர்களது தாரக மந்திரம். அறநெறியில் விருப்பம் உடையவர்கள் உண்மை விளம்பிகள், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவர்கள். பழைய சாஸ்த்திரங்கள், பழைய பழக்கங்கள் ஆகியவற்றின் மீது மிகவும் மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள். எனவே, கட்டுப்பாடுகளை மீற மாட்டார்கள். இவர்கள் அதிகமாகச் சிந்தனைகளில் ஈடுபடுவதால் மனஅமைதிக் குறைவு, மன இறுக்கம் (டென்ஷன்) மனச்சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள். எனவே இவர்கள் நல்ல தூக்கம் நல்ல உணவு, ஆகியவைகளைக் கடைப்பிடித்தால், பல நோய்களைத் தவிர்த்துவிடலாம்.
பிறவி எண் 5 விதி எண் 8
புதன் மற்றும் சனியின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் புதனும் சனியும் பலம் பெற்றால் முன்னோர்களை பின்பற்றி நடப்பவர்கள். முன்னோர்களின் நல்லாசி பெற்றவர்கள். தன்னை நம்பி வருவோர்க்கு நிச்சயம் உதவி செய்வார்கள். அறிவைத் தூண்டும் தொழில்களான ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தத்துவப் பேராசிரியர்களாக இருப்பார்கள். மேலாளர்கள், மந்திரி, கவுரவமான தொழில், நீதிபதிகள், அரசு துறை, நீதித்துறை, வங்கி அதிகாரிகள், ஆலோசகர் பதவி, எழுத்து துறை. தர்ம ஸ்தாபனங்கள், ஊர்த்தலைமை, போன்றவற்றில் கவுரவப் பதவி வகிப்பார்கள்.புதனும், சனியும் பலம் குறைந்தால் சொல் புத்தியும் இருக்காது. சுய புத்தியும் இருக்காது.
பிறவி எண் 5 விதி எண் 9
புதன் மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் கலந்த எண். சுய ஜாதகத்தில் புதன் செவ்வாய் சம்பந்தம் இல்லாமல் இருப்பது சிறப்பு. முயற்சியால் உழைப்பால் உயர்ந்த, உயர விரும்பும் உத்தமர். ஜாதகர் தைரியமானவர். பலசாலி. வீரியம் உடையவர். எண்ணியதை ஈடேற்றும் திறமைசாலிகள். மற்றவர்களை விடத் தாங்கள்தான் அறிவிலும், அதிகாரத்திலும் உயர்ந்து விளங்க வேண்டும் என்ற எண்ணமும், அதற்கேற்ற உழைப்பும் உண்டு. சொத்துக்கள் விஷயத்தில் உடன் பிறந்தவர்களுக்கு விட்டுக் கொடுக்கு விட்டு எதார்த்தமாக இருப்பார்கள். காதல் திருமணம் செய்து கொண்ட பலர் விவகாரத்தை சந்திக்கிறார்கள் அல்லது மன ஆறுதலுக்காக தவறான நட்பில் ஈடுபடுகிறார்கள்.
சுருக்கமாக பெயரெண் 5 வரும் படி பெயர் வைக்கும் போது 68,86,104 ஆகிய எண்களை தவிர்ப்பது உத்தமம்.
செல்: 98652 20406