

பிறவி எண் 4
ராகு 4,13, 22,31,40,49,58,67,76,85,94,103 ஆகிய எண்களில் பெயர் அமைந்தவர்களும் 4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் ராகுவின் ஆதிக்கம் பெற்றவர்கள். ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு பிரமாண்ட எண்ணங்கள் இருக்கும். எல்லாம் எனக்குத் தெரியும் என்ற கர்வம் உண்டு. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அனைத்து விஷயத்திலும் தனிப்பட்ட எண்ணம் உள்ளவர்கள். விரோதிகள் அதிகம் கொண்டவர்கள். தன் விருப்பப்படியே அனைத்தும் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உடையவர்கள். சாஸ்திர நம்பிக்கையற்றவர்கள். உழைக்காமல் அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர்கள். உலகில் வாழ்வதற்கு அவசியமான பொருட்களை அடைய அனைத்து விதமான குறுக்கு வழியையையும் நாடும் ஆற்றலைத் தரும் எண்ணாகும்.
பெயரெண் 4: ராகுவின் ஆதிக்கத்தை முழுமையாக கொண்ட எண்.பய உணர்வு மிகுந்தவர்கள். அற்ப காரியங்களுக்கு எல்லாம் பயப்படுவது இவர்களின் அம்சமாக இருக்கும். தனித்து இயங்கும் தன்மை அற்றவர்கள். எல்லாம் தெரிந்தாலும் பிறர் சொல் கேட்டு நடப்பவர்கள் சொந்தத் தொழிலில் விருப்பம் குறைவு. இளமையில் திருமணம் நடந்து குடும்பபாரத்தைச் சுமக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்.
பெயரெண் 13: 1 என்ற சூரியனும் 3 என்ற குரு பகவானும் சேர்ந்து ராகு பகவானின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் எண். பெண்களால் பிரச்சினைகளையும் சிரமங்களையும் இந்த எண்ணில் உள்ளவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும். விரும்பினாலும் விரும்பா விட்டாலும் வேதனை தரும் நிகழ்ச்சிகளும் சம்பவங்களும் வாழ்க்கையில் நடந்துகொண்டே இருக்கும். இந்த எண் பெயரில் வரும் அன்பர்கள் தங்களது வாழ்க்கையில் பல போராட்டங்களை அவசியம் சந்தித்துத்தான் ஆகவேண்டும்.
பெயர் எண் 22: சந்திரனின் ஆதிக்கத்தை முழுமையாக பிரதிபலிக்கும் ராகுவின் எண். இந்த எண்ணும், 13-ம் எண்னை போன்றே பயப்பட வேண்டிய எண்தான். இந்த தேதியில் பிறந்தவர்கள் அல்லது பெயரெண் உள்ளவர்களில் பலர் திடீரெனத் தாழ்ந்து விடுவார்கள். எதிர்பாராத சம்பவங்கள் அடிக்கடி நிகழும். சதாமனக் கவலையும் கஷ்டமும் சஞ்சலமும் துக்கத்தையும் கொடுக்கக்கூடிய எண். கடலில் அலை ஓய்வதில்லை. அதைப் போன்றுதான் இவர்களது பிரச்சிினைகளும் ஓயாது.
பெயரெண் 31: குரு மற்றும் சூரியனின் ஆளுமையில் உருவாகும் ராகுவின் எண்.சற்றேறக் குறைய 13ம் எண்ணிற்குச் சொன்ன அனைத்து பலன்களும் இந்த 31-ம் எண்ணிற்குப் பொருந்தும். மனோவசியம் ஜோதிடம், வேத சாஸ்த்திரங்களில் ஈடுபாடு உண்டு. எதையும் லட்சியம் செய்ய மாட்டார்கள். வெற்றி அடைந்தாலும் மகிழ்ச்சி அடையமாட்டார்கள். எதிர்பாராத நிகழ்ச்சிகள் வாழ்க்கையை பாதிக்கும். சந்தர்ப்பங்களை உணர்ந்து சரியாக செயல்படக் கூடிய ஆற்றல் உண்டு.
பெயரெண் 40: தனித்த ராகுவின் குணங்கள் நிறைந்த எண். நண்பர்களால் பெரிய அந்தஸ்தும் உத்தியோகமும் பெறுவர். புகழ், பட்டம் உண்டு.ஆபரணச் சேர்க்கை சொத்துக்கள் ஏற்படும். அதிக நண்பர்களும், நல்ல பேச்சு சாமர்த்தியமும் உண்டு. துணிந்து இறங்கி விடுவார்கள். பின்பு அதனால் பிரச்சிினைக்குள்ளாவார்கள். தனக்கு ஏற்படும் அனைத்து தீய பலன்களுக்கு சமூகம் என்னை புரிந்து கொள்ளவில்லை என்று குறை கூறுவார்கள்.
பெயரெண் 49: ராகு மற்றும் செவ்வாயின் சம்பந்தத்தால் உருவாகும் ராகுவின் எண். செல்வம் நீர்வீழ்ச்சி போல் வரும். புயல் போல் புகழ் வரும். பிரமிக்கத்தக்க காரியங்களைச் செய்வார்கள். வித்தியாசமான அனுபவங்கள் வாழ்க்கையில் உண்டு. விபரீத ராஜயோகம், திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு. சிறுசிறு விபத்துகள் ஏற்படும். சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் வரும். வாஸ்து குற்றம் உள்ள சொத்தே அமையும். பெண்களுக்கு மனம் நிறைந்த மணாளனைத் தருவதில்லை அல்லது திருமணத் தடையை தரும் எண்ணாகும்.
பெயரெண் 58: புதன் மற்றும் சனியின் ஆதிக்கத்தைப் பிரதிபலிக்கும் ராகுவின்எண்.வசீகரத்தை தரும். காரியசித்தி ஏற்படும். இவர்கள் துன்பங்களையே அனுபவிக்கப் பிறந்தவர்கள் என்பார்கள். ஜனன கால ஜாதகத்தில் புதன் மற்றும் சனியின் வலிமைக்கு ஏற்ப பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் தொழில் அல்லது பிறரால் ஏமாற்றப்படும் தொழில் கிடைக்கும்.
பெயரெண் 67: சுக்கிரன் மற்றும் கேதுவின் ஆதிக்கம் சேர்ந்த எண். வசீகரத்தை தரக்கூடிய எண் ஏதாவது ஒரு சாஸ்திர ரீதியான கலையில் நல்ல புகழும் செல்வமும் பெற்றுத்தரும். கலை உணர்வு மிக்கவர்கள். நேர்மை நியாயத்தை எதிர்பார்ப்பவர்கள். ஆண்களுக்கு மன நிறைவான மண வாழ்க்கையைத்தராது அல்லது திருமணத் தடையை உருவாக்கும்.
பெயரெண் 76: கேது மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் கலந்த ராகுவின் எண்.திடீரென எல்லா பொருளையும் இழக்க நேரும் பொதுக் காரியங்களில் வெற்றி ஏற்படும். அதிசயப்படும்படியாக புதிய முறையில் செல்வம் சேரும். பின் வயதில் என்ன செய்வது என்று தெரியாமல் உண்டு உறங்கி வாழ்வை கழிப்பார்கள். பொதுவாக அதிர்ஷ்டகரமான எண்ணல்ல.
பெயரெண் 85: சனி மற்றும் புதனின் ஆதிக்கம் சேர்க்கை பெற்ற ராகுவின் எண்.கஷ்டப்பட்டு முன்னேற்றம் அடைவார்கள். பிறர் சங்கடங்களை நீக்குவார்கள். வைத்தியத் தொழிலில் பிரகாசிப்பார்கள். எல்லோராலும் வணங்கப்படும் பதவி கிடைக்கும். கடினமாக உழைத்து முன்னேறச் செய்தாலும் சிறப்பான பயனுள்ள வாழ்வைத் தரும் எண்ணாகும்.
பெயர் எண் 94: செவ்வாய் மற்றும் ராகுவின் ஆதிக்கம் நிறைந்த எண். அரசியல் வாழ்க்கைக்கு நல்ல பலன் தரும் எண்.அரசியலில் ஈடுபட்டால் நல்ல பதவிகள் கிடைக்கும். சமூகத்திற்கு அநேக நன்மை சீர்திருத்தங்களை செய்பவர்கள். சுக வாழ்க்கையும் புகழும் உண்டு. ஆன்மிகம், சோதிடம், வேதாந்த ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உண்டு. இதைப் பெயர் எண்ணாகக் கொண்டவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.
பெயரெண் 103: சூரியன் மற்றும் குருவின் ஆளுமை நிறைந்த ராகுவின் எண்.மிகவும் அதிர்ஷ்டமான எண்.முதலில் செல்வ நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பிறகு தொழிலில் மாற்றம் ஏற்பட்டு முடிவு மங்களகரமாக இருக்கும். பிறகு தொழிலில் மாற்றம் ஏற்பட்டு மங்களகரமாக இருக்கும் இது வாழ்நாள் முழுவதும் தொடரும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் எண். பிறவி எண் என்பது ஒருவர் பிறந்த தேதியைக் குறிக்கும் எண் ஆகும். விதி எண் என்பது ஒருவரின் முழு பிறந்த தேதி மாதம், வருடம் அனைத்தையும் கூட்டி வரும் ஒற்றை இலக்க எண் ஆகும்.
பிறவி எண் 4 விதி எண் 1: ராகு மற்றும் சூரியனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் சூரியனும் ராகுவும் பலம் பெற்றால் அரசியல், ஆன்மிகம், பொறுப்பான நிர்வாகப் பதவிகளில் தனித் திறமையுடன் ஜொலிக்கிறார்கள். ஆன்ம பலம் நிறைந்தவர்கள்.வம்சா வழியாக அரசியல் அல்லது அரசு உத்தியோகம் மூலம் வருமானம் உண்டு. தந்தையால் ஆதாயம் உண்டு. திட்டமிட்டு காரியம் சாதிப்பதில் வல்லவர்கள். சுய ஜாதகத்தில் ராகுவும் சூரியனும் பலம் குறைந்தால் ஆன்மீகம் என்ற போர்வையில் லவுகீக நாட்டத்துடன் வாழ்வார்கள். ஆரோக்கிய கேடு, கண் பாதிப்பு அதிகம் இருக்கும். தந்தையால் பயன் இருக்காது.
பிறவி எண் 4 விதி எண் 2: ராகு மற்றும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் ராகுவும் சந்திரனும் பலம் பெற்றால் முயற்சி, திறமை, முன்னேற்றமான வாழ்க்கை, உறவினர்களால், லாபம் உண்டு. நம்பிக்கை, நாணயம் மிகுந்தவர்கள். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபடுவார்கள். பிறந்த ஜாதகத்தில் சந்திரன் ராகு பலமிலந்து நின்றால் அடிக்கடி உடல் நல பாதிப்பு இருக்கும். இவர்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டாலும் அலைச்சல், அசதி மிகுதியாக இருக்கும்.
பிறவி எண் 4 விதி எண் 3: ராகு மற்றும் குருவின் ஆதிக்கம் கலந்த எண்.சுய ஜாதகத்தில் ராகுவும், குருவும் பலம் பெற்றால் தைரியம், வீரம், பூர்வ புண்ணியம், பாக்கியம் மிகுந்தவர்கள். மதப் பற்றும் சீர்திருத்த நோக்கமும் உண்டு. வாரிசுகளாலும், சுய உழைப்பாலும் அதிர்ஷ்டம் தேடி வரும். ஜாதகர் முயற்சியை மூலதனமாக கொண்டு முன்னேறுபவர். சுய ஜாதகத்தில் ராகுவும், குருவும் பலம் குறைந்தால் அடிக்கடி மதம் மாறுவார்கள் அல்லது மத நம்பிக்கை குறைந்தவர்களாக இருப்பார்கள்.
பிறவி எண் 4 விதி எண் 4: தனித்த ராகுவின் ஆதிக்கம் நிறைந்த எண். ராகு சுப ஆதிக்கம் பெற்றால் தாத்தா, பாட்டனாரின் குணம், உருவ அமைப்பு உடையவர்கள். தன் சுய முயற்சியால் நல்ல பொருளாதார வளர்ச்சி உண்டு. சிறிய முயற்சியில் பெரிய நன்மை உண்டு. உழைக்காத வருமானம் உண்டு. கடினமாக உழைக்க விரும்ப மாட்டார்கள். சுய ஜாதகத்தில் ராகு அசுபத் தன்மையுடன் இருந்தால் சொத்து விரயம், தூக்கமின்மை ஏற்படும். உறவுகளின் உழைப்பை, ஆதரவை சார்ந்தே வாழ்வார்கள். பிழைக்க தெரியாத ஏமாளிகள்.
பிறவி எண் 4 விதி எண் 5: ராகு மற்றும் புதனின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் ராகுவும் புதனும் பலம் பெற்றால் அழகான தோற்றப் பொழிவும் அன்பு, நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். பள்ளி படிப்பில் முதன்மையான மாணவராக திகழ்வார்கள். சுறுசுறுப்பாக புதிய தொழில் முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். சுய ஜாதகத்தில் ராகுவும் புதனும் பலம் குறைந்தால் தலை கீழே நின்றாலும் படிப்பு வராது. குறிப்பாக கணிதம் இவர்களின் காலை வாரும். ஜாமின், காசோலை வழக்கு உண்டு.
பிறவி எண் 4 விதி எண் 6: ராகு மற்றும் சுக்கிரனின் அதிர்வலைகள் கலந்த எண்.சுய ஜாதகத்தில் சுக்ரனும் ராகுவும் பலம் பெறறால் வாழ்க்கை வாழ்வதற்கே, வாழும் காலத்தில் அனைத்து அதிர்ஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர்கள். வாசனை திரவியங்கள் அழகு, ஆடம்பர மோகம், சேர்க்கை மிகுதியாக இருக்கும். சுய ஜாதகத்தில் சுக்ரனும் ராகுவும் பலம் இழந்தால் காதல் காமத்தில் பருவ வயதில் வாழ்க்கையை தொலைப்பார்கள். சுய கட்டுப்பாடு இல்லாமல் வாழ்வார்கள்.
பிறவி எண் 4 விதி எண் 7: ராகு மற்றும் கேதுவின் ஆதிக்கம் நிறைந்த எண். ராகுவும் கேதுவும் எதிர் எதிர் துருவங்கள். ராகு லவுகீகம், கேது ஆன்மீகம். வாழ்க்கை போராட்டம், அதிருப்தி மற்றும் துக்கம் நிறைந்ததாக இருக்கும். இவர்களுக்கு பூர்வ புண்ணியத்தில் தடை உள்ளது என அர்த்தம். ஜாதகர் முன் விளைவுகள் சார்ந்த அனுபவிக்க வேண்டிய வினைப் பதிவு மிகுதியாக உள்ளது என பொருள். குல தெய்வ அருள், ஆன்மீக சிந்தனை, நிதானம், சகிப்புத் தன்மை, பொறுமையின் மூலம் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க முடியும்.
பிறவி எண் 4 விதி எண் 8: ராகு மற்றும் சனியின் ஆதிக்கம் கலந்த எண். சுய ஜாதகத்தில் ராகுவும் சனியும் பலம் பெற்றால் பிறக்கும் போது சாதாரண மனிதராக இருப்பார். வாழ்நாள் முடிவில் சாதனை மனிதராக சரித்திரத்தில் இடம் பிடிப்பவர்கள். முன்னோர்களின் சாஸ்திர சம்பிரதாயத்தை முறையாக கடைபிடிப்பார்கள். சுய ஜாதகத்தில் சனி ராகு பலம் குறைந்தவர்கள் முதலீடு இல்லாத தொழில் சிறப்பு. தொழில் தொடர்பான ஏக்கம் இருக்கும் ஆனால் தொழிலில் ஸ்திர தன்மை இருக்காது. ராகு, சனி எப்படி யோசித்து திட்டமிட்டுச் செய்தாலும் நினைத்ததற்கு எதிராகவே நடக்கும்.
பிறவி எண் 4 விதி எண் 9: ராகு மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்த எண். சுய ஜாதகத்தில் ராகுவும் செவ்வாயும் பலம் பெற்றால் வாழ்நாள் முழுவதும் சொந்த வீட்டிலேயே இருப்பவர்கள். சொத்துக்கள் குவிந்து கொண்டே இருக்கும். சொத்துக்கள் மூலம் நிரந்தர வருமானம் உண்டு. பல அடுக்குமாடி வீடு கட்டுபவர்கள், ரியல் எஸ்டேட் துறையில் கொடி கட்டி பறப்பவர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும். சுய ஜாதகத்தில் ராகுவும் செவ்வாயும் பலம் குறைந்தால் சொத்துக்களாலும் சொந்தங்களாலும் மன உளைச்சல் மிகுதியாக இருக்கும். ஆண்களுக்கு உடன் பிறந்தவர்களுடனும், பெண்களுக்கு கணவருடனும் மன வேதனையை ஏற்படுத்தும் கிரக எண்களின் சேர்க்கை. கணவனை பாம்பு என்று தாண்டவும் முடியாமல் பழுது என்று நினைத்து மிதிக்கவும் முடியாமல் வாழ வைக்கிறது.
பொதுவாக பெயர் எண் நான்கு வரும்படி பெயர் வைக்கும்போது 4, 13, 22, 31,40, 76 ஆகிய எண்களில் பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
ராகுவின் ஆதிக்க எண்களால் அசுப பலன்களை சந்திப்பவர்கள் தினசரி காலபைரவர் அஷ்டகம் படிக்க வேண்டும்.
செல்: 98652 20406