அக்னி நட்சத்திர தோஷ காலம்

கோடைக் காலம் என்றாலே கத்தரி வெயில் தாக்கம் பற்றிய சிந்தனைகள் வரும்.
அக்னி நட்சத்திர தோஷ காலம்
Published on

சூரியனின் இயக்கத்திற்கு ஏற்ப பருவ நிலைகளில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். இயற்கையின் காலநிலை மாற்றங்களை வசந்த காலம் கோடை காலம் இலையுதிர் காலம் குளிர் காலம் என நான்கு விதமாக பிரிக்கலாம்.

தற்போது நாம் கோடை காலத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் ஏப்ரல், மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கோடை வெப்பத் தாக்கம் அதிகமாக இருக்கும்.

தமிழ் மாதங்களில் சித்திரை, வைகாசி மற்றும் ஆனி மாதங்களில் வெயில் அதிகமாக இருக்கும். இந்தப் பருவகால சீதோசன மாற்றத்தால் மனிதர்களின் வாழ்வியலில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. கோடைக் காலம் என்றாலே கத்தரி வெயில் தாக்கம் பற்றிய சிந்தனைகள் வரும்.

அதிலும் குறிப்பாக அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பம் பற்றிய பய உணர்வு தோன்றும். கோடை காலத்தின் உச்சகட்ட காலமான அக்னி நட்சத்திரம் காலம் பற்றிய பல்வேறு விதமான கருத்துக்கள் நம்மில் நிலவுகிறது.

ஜோதிட ரீதியாக கோடைக் காலத்தின் உச்சக்கட்ட வெயில் காலமான அக்னி நட்சத்திரம் என்பது சூரியன் பரணி நட்சத்திரத்தின் 3-ம் பாதத்தில் நுழைந்து, தனது சுய நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரத்தை முழுமையாகக் கடக்கும் காலமாகும்.

பராபவ தமிழ் வருடத்தில் 2026-க்கான அக்னி நட்சத்திரம் மே 4-ந் தேதி தொடங்கி மே 28-ந் தேதி வரை நீடிக்கப் போகிறது.

கோடை வெப்பமும் இறைவழிபாடும்

பூமியின் அதிக வெப்பநிலை மாற்றத்தால் இயற்கை அதிக வெப்பத்தை உமிழ்வதால் பல்வேறு விதமான நோய் தாக்கங்கள் உருவாகும். ஆன்மீக ரீதியாக சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து உதித்த முருகப் பெருமான் பிறந்த சூரியனின் ‘கிருத்திகை’ நட்சத்திரத்தில் பயணிப்பதால் பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது என்று நம்பப்படுகிறது.

மாரியம்மன் தமிழ்நாட்டில் ஊர் எல்லையில் அல்லது ஊர் நடுவில் அமர்ந்து, அந்தப் பகுதி மக்களைப் பாதுகாக்கும் ஊர் காவல் தெய்வமாகும். கோடை காலத்தில் அம்மை, தோல் நோய்கள், கண் நோய்கள் மற்றும் காலரா வயிற்று உபாதைகள் அதிகம் பரவும். இந்த கொடிய நோய்களிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், அம்மனை குளுமைப்படுத்தவும் கோடை காலத்தில் அம்மன் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

அம்மனுக்கு வேப்பிலை மாலை அணிவித்து கூழ் படைத்தல், மஞ்சள் நீராட்டல், பால் குடம் எடுத்தல், தீ மிதித்தல் போன்ற வழிபாடுகள் நடைபெறுகின்றன.

‘பிரசன்ன ஜோதிடர்’ ஐ.ஆனந்தி
‘பிரசன்ன ஜோதிடர்’ ஐ.ஆனந்தி

அக்னி நட்சத்திரமும் குழந்தை பிறப்பும்

சித்திரை மாதத்தில் அதுவும் அக்னி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கும் குடும்பத்திற்கு ஆகாது என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆன்மீக ரீதியாக அக்னி நட்சத்திர காலத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அது எல்லா விதத்திலும் சிறப்பாகவே இருக்கும். செல்வாக்கு, அதிர்ஷ்டம் கல்வி, செல்வம், வீரம் ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள்.

ஜோதிட ரீதியாக கால புருஷ ஐந்தாம் அதிபதி சூரியன் உச்சம் பெரும் காலத்தில் பிறக்கும் குழந்தை அதீத ஆத்ம பலம், தலைமைப் பண்பு, அரசு யோகம், சிறந்த ஆரோக்கியம் கவுரவம் தைரியம், நேர்மை, எதற்கும் அஞ்சாத குணம், நிர்வாகத் திறன் மற்றும் பிறரை வழிநடத்தும் ஆற்றல் நல்ல உடல் வலிமை நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களாக இருப்பார்கள்.

வாழ்வில் கடினமாக உழைத்து முன்னேறுவார்கள். பூர்வீக சொத்து சேர்க்கை உள்ளவர்கள். நீதி, நேர்மை மற்றும் உண்மையை விரும்புவார்கள். தன்னைப் போல் பிறரும் நேர்மை நியாயத்துடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதீத கோப குணமும், சண்டையிடும் மனப்பான்மை உடையவராகவும் இருப்பார்கள். நியாயம், தர்மம் இதுதான் சரி, இதுதான் தவறு என்று வெளிப்படையாக பேசும் ஆற்றல் உடையவர்களாக இருப்பதால் குடும்பத்தில் கலகம் உண்டாகும் என்பதால் அக்னி நட்சத்திர காலத்தில் குழந்தை பிறப்பை தவிர்த்தார்கள்.

மேலும் அறிவியல் ரீதியாக சித்திரை மாதம் என்பது உச்சகட்ட வெப்ப மாதம் என்பதால் கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் குழந்தை வைத்துக் கொண்டு வெப்பத்தை தாங்கவே முடியாது. அத்துடன் பிறக்கும் குழந்தைக்கும் வெப்ப நோய்கள் தாக்கக்கூடும். அதனால்தான் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கக் கூடாது என்று பெரியோர்கள் சொன்னார்கள்.

ஜோதிட சாஸ்திரப்படி சூரியன்

இயற்கை பாவ கிரகமாகும். தனது அதீத உஷ்ணம், வெப்பத்தால் ஆத்ம பலத்தை இழக்கச் செய்வார். அவர் ஜாதகத்தில் எந்த பாகவத்தில் அல்லது எந்த கிரகத்துடன் இணைகிறாரோ, அந்த இடத்தின் தன்மையை எரித்து பலவீனப்படுத்தி விடுவார்.

சூரியன் ஒருவரை குடும்பம், உறவுகள் மற்றும் உலக இன்பங்களில் இருந்து விலக்கி வைத்து ஆன்மீக அல்லது தத்துவரீதியான தேடலுக்கு அழைத்துச் செல்வார். மேலும் சூரியன் கிரகங்களின் ராஜ கிரகமாக கருதப்படுகிறது. இவரிடம் இருந்தே மற்ற கிரகங்கள் ஒளி பெறுகின்றன.

சூரியன் இல்லாமல் உயிரினங்கள் உருவாக முடியாது என்பதால் சூரியனுக்கு ஆளுமை குணம் உண்டு. எதிலும் தனக்கு அதிக மரியாதை தரவேண்டும் என்பதில் பிடிவாதம் உண்டு. சூரியன் உச்சம் பெற்ற ஒருவர் பிறரின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள் என்பதால் அக்னி நட்சத்திர காலத்தில் குழந்தை பிறப்பதை முன்னோர்கள் விரும்பவில்லை.

ஆடி மாதத்தில் தம்பதிகள் கூடினால் சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர காலத்தில் குழந்தை பிறக்கும் என்பதால் ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைத்தார்கள். முன்னோர்களின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஆயிரம் அர்த்தம் உண்டு. அக்னி நட்சத்திரத்தில் பிறக்கும் நபரால் மனவருத்தம் தரும் சூழ்நிலைகள் உருவாகுதை தவிர்க்க குழந்தை பிறப்பை தவிர்த்தார்கள் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

அக்னி நட்சத்திர தோஷம்

கத்தரி வெயில் எனும் அக்னி நட்சத்திர காலத்தை இந்து மத சாஸ்திரங்கள் சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற காலம் அல்ல என கூறப்பட்டிருக்கிறது. நமது பஞ்சாங்கம் முறை சூரியனின் இயக்கத்தை மையமாகக் கொண்டவையாகும். சூரிய பகவானின் அதிதேவதையான அக்னி பகவான் தன்னுடைய முழு வெப்ப கதிர்களையம் வெளிவிடும் காலத்தை அக்னி நட்சத்திரக்காலம் என்கிறோம்.

வருடந்தோறும் கோடை காலத்தில், சூரிய பகவான் பரணி நட்சத்திரம் துவங்கி, கிருத்திகை நட்சத்திரம் வரை பயணிக்கும் காலத்தில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும். இந்த காலத்தில் உடல் மற்றும் மன ரீதியான சோர்வால் எந்த ஒரு சுப காரியங்களை செய்தாலும் அது வெற்றிகரமாக அமையாது என்பது நம்பிக்கை.

அத்துடன் அக்னி தோஷம் எனப்படும் அக்னி நட்சத்திரக் காலத்தில் எந்தெந்த காரியங்களை செய்யலாம், எவற்றை எல்லாம் தவிர்க்கலாம் என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்னி நட்சத்திர காலங்களில் தவிர்க்க வேண்டியவை

புதிய வீடு கட்ட துவங்குவது, கிரகப்பிரவேசம் செய்வது, பூமி பூஜை, காது குத்துதல் மற்றும் மொட்டை போடுதல், புதிய செடி, மரம் நடுதல், விதை விதைத்தல், கிணறு வெட்டுதல், குரு தீட்சை பெற்றல், நீண்ட தூர பிரயாணம் செய்தல், கடன் பெறுதல் கடன் கொடுத்தல்

அக்னி நட்சத்திரத்தில் செய்ய தகுந்தவைகள்

திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பெண் பார்த்தல், மஞ்சள் நீராட்டு விழா, வாடகை வீடு மாறுதல் போன்ற சுப விசேஷங்களை செய்யலாம்.

12 ராசியினரும் அக்னி நட்சத்திர காலத்தில் செய்ய வேண்டிய தான தர்மங்கள்.

மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வத்தை வழிபட்டு ஆரஞ்சு பழம் தானமாக கொடுக்க வேண்டும்.

ரிஷப ராசிக்காரர்கள் வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்களுக்கு சர்க்கரைப் பொங்கல் தானம் வழங்க தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.

மிதுன ராசிக்காரர்கள் ஏழை மாணவர்களுக்கு பாசிப்பருப்பு பாயாசம் தானம் கொடுப்பது நல்லது.

கடக ராசிக்காரர்கள் தண்ணீர் உணவை தானம் செய்தால் வறுமை நீங்கி செல்வம் சேரும்.

சிம்ம ராசிக்காரர்கள் வயது முதிர்ந்த பெரியோர்களின் விருப்பங்களை நிறைவு செய்து நல் ஆசி பெற்றால் கோடி புண்ணியம் தேடி வரும்.

கன்னி ராசிக்காரர்கள் திராட்சை பழம் தானம் வழங்க நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

துலாம் ராசியினர் கல்கண்டு சாதம் தானம் செய்யவதால் மன அமைதி ஏற்படும்.

விருச்சிக ராசிக்காரர்கள் வாழைப்பழம் தானம் தர வறுமை நீங்கி செல்வம் சேரும்.

தனுசு ராசிக்காரர்கள் பானகம் தானம் வழங்க வளர்ச்சி கூடும்.

மகர ராசிக்காரர்கள் கூலித் தொழிலாளிகளுக்கு உணவு தானம் வழங்க தடைபட்ட காரியம் கூடி வரும்.

கும்ப ராசிக்காரர்கள் ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு, உடை தானம் தர மன நிம்மதி கிட்டும்.

மீன ராசிக்காரர்கள் குடை, விசிறி தனம் வழங்க மகிழ்ச்சிகள் கூடும். அக்னி நட்சத்திர காலம் தோஷமா, தோஷம் அற்றதா என்ற விவாதத்தை தவிர்த்து இது கடுமையான கோடை காலம் என்பதால் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொண்டு போதிய ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது.

செல்: 98652 20406

X

Maalai Malar
www.maalaimalar.com