2025 REWIND: அரசியல் கட்சிகளை அலறவிட்ட சிறப்பு தீவிர திருத்தம்: இது வேற SIR

தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.இந்தப் பணிகள் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14, 2026 அன்று வெளியிடப்படும்.
2025 REWIND: அரசியல் கட்சிகளை அலறவிட்ட சிறப்பு தீவிர திருத்தம்: இது வேற SIR
Published on

புதுடெல்லி:

காய்கறி வாங்க மார்க்கெட் சென்று கொண்டிருந்தாள் சுமதி. அப்போது எதிரில் வந்த தோழி ரமாவைப் பார்த்தாள். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, யார் இந்த சார் என கேள்விப்பட்டிருக்கேன். இது என்னடி வேற SIR -புதிதாக இருக்கிறதே என ரமாவிடம் ஆச்சரியமாகக் கேட்டாள் சுமதி.

அதுவா ஒண்ணுமில்ல. தேர்தலுக்கான முதல் கட்ட பணி தான் இது. இதனால் வாக்காளர் பட்டியலில் இருக்கும் நிறைய போலி வாக்காளர்களை நீக்க முடியும் எனறாள் ரமா.

ஆனா பல அரசியல் கட்சிகள் இதுக்கு ஏன் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்களே ஏன்? என்றாள் சுமதி.

இவ்வளவு நாள் தங்களது வாக்கு வங்கியை மெயிண்டெய்ன் பண்ணினவங்களுக்கு இந்த நடவடிக்கையினால அது

குறைஞ்சுடுமோ என்ற பயம்தான் காரணம் என்றாள் ரமா.

ஓ அதுதான் காரணமா? SIR அப்படின்னா என்ன, அதுபத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் என்றாள் சுமதி.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி ரமா சொன்னதன் சுருக்கம் இதுதான்:

வாக்காளர் பட்டியலில் பல இடங்களில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமை, ஒரு குடும்பம் இடம் பெயர்ந்தும் பழைய முகவரி நீங்காமை, ஒரே நபருக்கு இரட்டை பதிவுகள் இருப்பது போன்ற பொதுவான பிழைகள் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்தன.

இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சாதாரண பட்டியல் புதுப்பிப்பால் சரிசெய்ய முடியாத பல பிரச்சனைகள் இருப்பதால், இந்த ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறை பெரும் அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர்கள் பொருத்தமாக உள்ளனவா, இடம் மாற்றியவர்கள் மாற்றமடைந்து உள்ளனரா, இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளனவா, ஒரே நபரின் பெயர் பல இடங்களில் இடம் பெறுகிறதா போன்ற தவறுகளை சரிசெய்வதே இந்தப் பணிகளின் முக்கிய நோக்கமாகும்.

அடுத்த ஆண்டு பல மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தல்களை முன்னிட்டு, துல்லியமான வாக்காளர் பட்டியல் உருவாக்கப்படுவது மிகவும் அவசியமான சூழ்நிலையாக மாறியுள்ளது.

முதலில் பீகாரில் தொடங்கப்பட்ட இந்தப் பணிகள் அதன்பின் தமிழ்நாடு, கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

வரைவுப் பட்டியல் டிசம்பர் 19 அன்று வெளியிடப்பட உள்ளது. அதன்பின் ஜனவரி 15 வரை கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் சமர்ப்பிக்க முடியும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14, 2026 அன்று வெளியிடப்படும்.

சிறப்பு தீவிர திருத்த பணிகள் பணிச்சுமையை அதிகரித்துள்ளது எனக்கூறி பல ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டது பேசுபொருளானது என கூறினாள் ரமா.

ஓகே நானும் SIR விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துட்டேன், நன்றி என கூறியபடி மார்க்கெட் சென்றாள் சுமதி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com