

சென்னை:
சென்னை பட்டினபாக்கத்தில் போலீஸ் ஆவண காப்பக அலுவலகம் உள்ளது.
அதன் பின்பகுதியில் உள்ள செல்போன் டவரில் இன்று காலை 7 மணியளவில் ஒரு வாலிபர் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
70 அடி உயரமுள்ள டவரில் அவர் ஏறுவதற்கு முன்பு 2 பேனர்களை அங்கு கட்டியுள்ளார். ஒரு பேனரில் ஐ மிஸ் யூ அனிதா எனவும் மற்றொரு பேனரில் ஐ மிஸ்யூ பேபி எனவும் எழுதி வைத்துள்ளார்.
கோபுரத்தின் மேல் பகுதிக்கு சென்று அங்கிருந்து தற்கொலை செய்யும் முயற்சியில் அவர் ஈடுபட்டதை அப்பகுதி மக்கள் பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
பட்டினபாக்கம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 2 வாகனங்களில் வீரர்கள் சென்றனர். செல்போன் டவரில் தீயணைப்பு வீரர்கள் 2 பேர் ஏறி அந்த வாலிபரிடம் நைசாக பேசினர்.
அவர் அருகில் நெருங்கி பேசிய போது தான் வாலிபர் பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டது தெரிந்தது. அவரிடம் சமரச பேச்சு நடத்தி நைசாக கீழே இறக்கினார்கள்.
வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ராக்கி என்று தெரிய வந்தது. அவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்னதாக தனது பேஸ்புக்கில் தற்கொலை செய்யப் போவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
தற்கொலையில் இருந்து வாலிபரை மீட்ட தீயணைப்பு படையினர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காதல் தோல்வியில் ராக்கி இத்தகைய செயலில் ஈடுபட்டாரா? குடும்ப பிரச்சினையில் தற்கொலைக்கு முயன்றாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.