தோவாளை- மோட்டார் சைக்கிளில் ரகசிய கேமிரா பொருத்தி பெண்கள் குளிப்பதை படம்பிடித்த வாலிபர்

தோவாளையில் கால்வாய் அருகே மோட்டார் சைக்கிளில் ரகசிய கேமிரா பொருத்தி பெண்கள் குளிப்பதை படம்பிடித்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மோட்டார் சைக்கிளில் ரகசிய கேமிரா பொருத்தப்பட்டு இருந்த காட்சி.
மோட்டார் சைக்கிளில் ரகசிய கேமிரா பொருத்தப்பட்டு இருந்த காட்சி.
Published on

நாகர்கோவில்:

செல்போன்களில் கேமிராக்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு கேமிராக்களின் தரமும், துல்லியமும் அதிகரித்துவிட்டது. மேலும் கேமிராக்களும் மிக சிறிய வடிவத்திற்கு மாறிவிட்டது. அதேப்போல கண்ணுக்கு தெரியாத வகையில் காமிராக்கள் பொருத்தப்பட்ட நவீன கருவிகளும் தினம், தினம் அறிமுகமாகி வருகிறது. இதனால் பொது இடங்களில் பெண்களின் அந்தரங்கங்கள் அவர்களுக்கு தெரியாமலேயே படம் பிடிக்கப்படுகிறது. இவை சமூக வலைதளங்களில் அடிக்கடி வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

பல சம்பவங்களில் இவை போலீஸ் நிலையம் வரை செல்வதில்லை. அவமானம் கருதி பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யாததால் இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பிவிடுகிறார்கள். இந்த நிலையில் குமரி மாவட்டம் தோவாளை பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரகசிய கேமிரா பொருத்தி பெண்கள் குளிக்கும் காட்சியை வாலிபர் ஒருவர் படம்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கால்வாய்களில் தோவாளை கால்வாயும் ஒன்று. பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்டு உள்ள தண்ணீர் இந்த கால்வாயில் தற்போது அதிக அளவு செல்கிறது.

தோவாளை உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த கால்வாய் குடியிருப்புகளின் அருகில் செல்கிறது. இதனால் தினமும் காலை, மாலை நேரங்களில் இந்த கால்வாயில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பது வழக்கம்.

தோவாளை பகுதியில் இந்த கால்வாயில் பெண்கள் குளிக்கும் படித்துறை அருகே சமீப நாட்களாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருக்கும். ஒரு வாலிபரும் அடிக்கடி மோட்டார் சைக்கிள் அருகே வருவதும், செல்வதுமாக இருப்பார். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்று விடுவார்.

ஒரே எண் கொண்ட மோட்டார் சைக்கிள் தொடர்ந்து அந்த பகுதியில் நிறுத்தப்பட்டது அங்கு குளிக்கும் பெண்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் அதுபற்றி அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் தெரிவித்தனர். இதனால் அவர்களும் அது பற்றி கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலையும் அதே மோட்டார் சைக்கிள் தோவாளை கால்வாய் அருகே பெண்கள் குளிக்கும் படித்துறை பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்தது. வழக்கம்போல டிப்-டாப் வாலிபர் ஒருவர் அடிக்கடி மோட்டார் சைக்கிள் அருகே வந்து சென்றபடி இருந்தார். அவரது நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தும்படி இருந்ததால் அங்கு கண்காணிப்பில் ஈடு பட்டிருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் பெண்கள் குளிக்கும் இடம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சுற்றித்திரிவது பற்றி விசாரித்த போது அவர் சரியான தகவலை தெரிவிக்கவில்லை. முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்து பார்த்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் ரகசிய கேமிரா ஒன்று பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த கேமிரா கால்வாயில் குளிக்கும் பெண்களை படம் எடுக்கும் கோணத்தில் அமைக்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த தகவல் ஆரல்வாய்மொழி போலீசுக்கும் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை மடக்கிப்பிடித்தனர். அவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து அதில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவையும் பறிமுதல் செய்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த வாலிபர் செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

மேலும் அவரது ரகசிய கேமிராவை போலீசார் சோதனை செய்தபோது அதில் பல பெண்கள் குளிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. தெரியவந்தது. அந்த வாலிபர் பல நாட்களாக இதேப்போல மோட்டார் சைக்கிளில் கேமிராவை பொருத்தி பெண்கள் குளிக்கும் காட்சியை படம்பிடித்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com