

சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகன் ஜெயக்குமார் (20). பிராட்வேயில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார்.
அந்த கடையில் அவருடன் அஜித்குமார், விக்னேஷ் ஆகிய வாலிபர்களும் வேலை செய்து வருகிறார்கள். கடையின் மேல்பகுதியில் குடியிருப்பு பகுதி உள்ளது. மாடியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் நகை திருட்டு போய் உள்ளது.
இதுபற்றி எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் ஜெயக்குமார் உள்பட 3 பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர்களை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்தார்கள்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ஜெயக்குமாரின் உறவினருக்கு போலீசார், ஜெயக்குமார் உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.
உதவி கமிஷனர் லட்சுமணன், இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் அவர்களை சமாதானப்படுத்தினர்.
இதற்கிடையில் போலீஸ் நிலையத்தில் இறந்த ஜெயக்குமாரின் உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அஜித் குமார், விக்னேஷ் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்கியதால்தான் ஜெயக்குமார் உயிர் இழந்ததாகவும், அதனால் மற்ற 2 பேரையும் உடனே விடுவிக்க வேண்டும் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.