

களக்காடு:
வீ.கே.புரம் அருகே உள்ள தட்டான்பட்டியை சேர்ந்தவர் மரிய பொன்னையா மகன் முத்துமாணிக்கராஜ் (வயது 33), விவசாயி. இவரது மனைவி மகேஷ்வரி களக்காடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இதையொட்டி அவர் களக்காடு காந்திஜி தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி உள்ளார். அவரது கணவரான முத்துமாணிக்கராஜ் தனது 1 மகன், 1 மகளுடன் தட்டான்பட்டியில் உள்ளார்.
இந்நிலையில் முத்துமாணிக்கராஜ் களக்காட்டில் தங்கியிருக்கும் தனது மனைவி சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்வரிக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்வதற்காக கடந்த 1-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு தனது நண்பர் தட்டான்பட்டியை சேர்ந்த அருள்செல்வத்துடன் களக்காடு வந்தார். மகேஷ்வரி தங்கியிருக்கும் வீட்டின் அருகே களக்காடு சிவந்தி ஆதித்தனார் நகரை சேர்ந்த சகாயம் மகன் பிரபாகரன் இருட்டில் தனியாக நின்று கொண்டிருந்தார்.
இதனை கண்ட முத்துமாணிக்கராஜ் இங்கு ஏன் நிற்கிறீர்கள் எனக் கேட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் முத்துமாணிக்கராஜை தாக்கி, கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி முத்துமாணிக்கராஜ் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிரபாகரனை கைது செய்தனர்.